புதன், 14 செப்டம்பர், 2016

சசிகலா புஷ்பா முன்ஜாமீன் மனு தள்ளுபடி

தனது ஆதரவாளர்களுடன் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஆஜராக வந்த சசிகலா புஷ்பா | கோப்புப் படம்: எஸ்.ஜேம்ஸ் பணிப் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் சசிகலா புஷ்பா எம்பி, அவரது குடும்பத்தினர் தாக்கல் செய்துள்ள முன்ஜாமீன் மனுவை உயர் நீதிமன்ற மதுரை கிளை புதன்கிழமை தள்ளுபடி செய்தது. ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி வி.எம். வேலுமணி, "இவ்வழக்கில் முன்ஜாமீன் கோரியுள்ள மனுதாரர்கள் மீதான குற்ற்றச்சாட்டு மிகக் கடுமையானது.
இந்நிலையில் மனுதாரர்களுக்கு முன்ஜாமீன் வழங்கினால் அவர்கள் தலைமறைவாக வாய்ப்பிருக்கிறது. எனவே, இவ்வழக்கில் மனுதாரர்களை காவலில் எடுத்து போலீஸார் விசாரணை மேற்கொள்வது அவசியமானது என்பதால் அவர்களுக்கு ஜாமீன் மறுக்கப்படுகிறது. முன்ஜாமீன் மனுவை இந்த நீதிமன்றம் தள்ளுபடி செய்கிறது.
மேலும், சசிகலா புஷ்பா உள்ளிட்டோர் வக்காலத்து நமூனாவில் மதுரைக்கு நேரில் வந்து கையெழுத்திட்டதாக கூறினர். ஆனால் கடந்த முறை நீதிமன்ற விசாரணையின்போது கணவர் வக்காலத்து நமூனாவை கொண்டு வந்து கொடுத்ததாகவும், அதில் தான் கையெழுத்திட்டு கணவரிடம் கொடுத்தனுப்பியதாகவும் கூறினார்.
இது நீதிமன்றத்தை ஏமாற்றும் செயலாகும்.
இது தொடர்பாக சசிகலா புஷ்பா உள்ளிட்டோர் உயர் நீதிமன்ற மதுரை கிளை பதிவாளர் (நிதி) போலீஸில் புகார் அளிக்க வேண்டும். அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ள வேண்டும்" என்றார்.
வழக்கு பின்னணி:
மாநிலங்களவை எம்பி சசிகலா புஷ்பா, அவரது கணவர் லிங்கேஸ்வர திலகம், மகன் பிரதீப்ராஜா, தாயார் கௌரி ஆகியோர் மீது பானுமதி, அவரது சகோதரி ஜான்சிராணி ஆகியோரின் புகாரின்பேரில் தூத்துக்குடி நாகமலை புதுக்கோட்டை போலீஸார் பாலியல் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி 4 பேரும் உயர் நீதிமன்ற கிளையில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது சசிகலா புஷ்பா சிங்கப்பூரில் உள்ளார். ஆனால், அவர் மதுரைக்கு வந்து வழக்கறிஞர் முன்னிலையில் வக்காலத்து நமுனாவில் கையெழுத்திட்டதாக கூறியுள்ளார். இதில் சந்தேகம் இருப்பதாக, கூடுதல் அட்வகேட் ஜெனரல் தெரிவித்தார். இதையடுத்து சசிகலா புஷ்பா, அவரது கணவர், மகன் ஆகியோர் நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து சசிகலா புஷ்பா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரது மனு உச்ச நீதிமன்ற அமர்வு முன்பு ஆகஸ்ட் 26-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது சசிகலா புஷ்பா, அவரது குடும்பத்தினரை கைது செய்ய 6 வாரத்திற்கு தடை விதித்தும், உயர் நீதிமன்றத்தில் சசிகலா புஷ்பா உள்ளிட்ட 3 பேர் நேரில் ஆஜராகவும் உத்தரவிட்டது.
இந்த வழக்கு ஆக. 29-ல் நீதிபதி வி.எம். வேலுமணி முன்பு விசாரணைக்கு வந்தபோது, சசிகலா புஷ்பா, அவரது கணவர் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நேரில் ஆஜராகினர். அப்போது வக்காலத்து நமுனாவில் கையெழுத்திட்டது தான் தான் என சசிகலா புஷ்பா நீதிபதியிடம் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தீர்ப்பு வழங்குவதை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
இந்நிலையில் இன்று சசிகலா புஷ்பா, தாயார், கணவர் மற்றும் மகன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுக்கள் மீது தள்ளுபடி செய்து நீதிபதி வி.எம். வேலுமணி உத்தரவிட்டார்.   /tamil.thehindu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக