வியாழன், 22 செப்டம்பர், 2016

நாம சொல்றதை யாரு கேட்கிறாங்க?’ - வேதனையில் வெடித்த கலைஞர் ..


மின்னம்பலம்.com  :மொபைல் டேட்டா ஆன் செய்தோம். ஃபேஸ்புக் சைன் இன் ஆகியிருந்தது. ஸ்டேட்டஸ் லொக்கேஷன் ராயப்பேட்டை என்று காட்டியது.
“அண்மையில் கருணாநிதி – திருநாவுக்கரசர் சந்திப்பு நிகழ்ந்தது அல்லவா... அதைப்பற்றித்தான் சத்தியமூர்த்தி பவனில் பேச்சாக இருக்கிறது. இரண்டு நாட்களுக்குமுன்பு கோபாலபுரத்தில் கருணாநிதியைச் சந்தித்தார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவரான திருநாவுக்கரசர். அப்போது உள்ளாட்சித் தேர்தல் பற்றிய பேச்சு வந்தபோது, கருணாநிதி பிடிகொடுக்காமலேயே பேசியிருக்கிறார். பேச்சு டிராக் மாறியிருக்கிறது. ‘அறந்தாங்கி தொகுதியில் சட்டமன்றத் தேர்தலில் என் மகன் ராமச்சந்திரன் போட்டியிட்டான். ஆனால், ஜெயிக்க முடியலை. அதுக்குக் காரணம் திமுக -தான். புதுக்கோட்டை தெற்கு மாவட்டச் செயலாளராக இருப்பவர் தங்கவேலு.
அவரு இந்தத் தேர்தலில் வேலை பார்க்கவே இல்லை. காங்கிரஸுக்கு அறந்தாங்கி தொகுதியை ஒதுக்கியதில் அவங்களுக்கு ஏதோ வருத்தம். என்ன வருத்தம் இருந்தாலும் கூட்டணியை விட்டுக் கொடுக்கலாமா? ஆனா, எங்களை அறந்தாங்கியில் காலி செய்ததே திமுக-தான்… இதை இவ்வளவு நாளா நான் உங்ககிட்ட சொல்லலை. இப்போதான் வாய்ப்பு கிடைச்சுது!’ என்று சொல்லியிருக்கிறார் திருநாவுக்கரசர்.
அதற்கு கருணாநிதி, ‘ஆமாய்யா.. அப்படித்தான் ஆகிடுச்சு.. என்ன பண்றது? யாரு நாம சொல்றதை கேட்கிறாங்க… நடந்ததைப் பத்தி பேசி என்ன பிரயோஜனம்?’ என்று சொல்லியிருக்கிறார். திமுக-வினர் தேர்தல் சமயத்தில் காங்கிரஸ் போட்டியிட்ட இடங்களில் வேலை பார்க்கவே இல்லை என்பதை கருணாநிதியே ஒப்புக்கொண்டார் என திருநாவுக்கரசர் வெளியில் சொல்ல ஆரம்பிக்க… அதுவே காங்கிரஸாரிடம் பரவியிருக்கிறது.
இந்த விஷயம் திமுக-விலும் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது. ’ஸ்டாலின் ஆதரவு மாவட்டச் செயலாளர்கள் காங்கிரஸுக்கு வேலை பார்க்கவில்லை. புதுக்கோட்டை தங்கவேலுவும் அதற்கு ஒரு உதாரணம். இதெல்லாம் இப்போதுதான் தலைவர் கவனத்துக்குப் போயிருக்கிறது. தன்னுடைய ஆதரவாளர்களிடம் மட்டுமே தளபதி முகம் கொடுத்துப் பேசுகிறார். மற்றவர்களை கண்டுக்கிறதே இல்லை. தற்போது உள்ள சிட்டிங் எம்.எல்.ஏ-க்களில் 9 பேரிடம் மட்டும்தான் ஸ்டாலின் பேசுகிறார். மற்றவர்கள் பேச வந்தாலும் நிற்பதும் இல்லை. நின்றாலும் காது கொடுத்துக் கேட்பதில்லை. இதெல்லாம் தலைவரிடம் யார் சொல்வது..’ என்ற புலம்பல் திமுக-விலும் கேட்கவே செய்கிறது’’ என்ற ஸ்டேட்டஸ்தான் போஸ்ட் செய்யப்பட்டிருந்தது.
அதற்கு லைக் போட்டு ஷேர் செய்த வாட்ஸ் அப், ‘திருநாவுக்கரசர் கருணாநிதியை சந்தித்த அதே நாளில் வாசன் – ஸ்டாலின் சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது அல்லவா… இது திருநாவுக்கரசருக்கு பிடிக்கவில்லைபோலத் தெரிகிறதே?” என்ற கேள்வியை கமெண்ட்டில் போட்டது.
அதற்கு பதில் அடுத்த ஸ்டேட்டஸ் ஆக தயாரானது.
“வாசன் – ஸ்டாலின் சந்திப்பு தனக்குப் பிடிக்கவில்லை என்பதை அப்பட்டமாகவே காட்டிவிட்டார் திருநாவுக்கரசர். அன்று கருணாநிதி வீட்டிலிருந்து வெளியே வந்த திருநாவுக்கரசரிடம், இது சம்பந்தமாக பத்திரிகையாளர்கள் கேட்டார்கள். ‘தமிழ்நாட்டில் இரண்டு தலைவர்கள் சந்திப்பதில் என்ன முக்கியத்துவம் இருக்கிறது? அதில் தவறு ஏதும் இல்லை!’ என்று சொல்லிவிட்டுப் போனார். நேற்று திரும்பவும் இதுதொடர்பான கேள்வி வந்தபோது, ‘நான் சந்தித்தது திமுக-வின் அதிகாரபூர்வமான நாளேடான முரசொலியில் வந்திருக்கிறது. வாசன் சந்திப்பு பற்றி முரசொலியில் வரவே இல்லை. இதிலிருந்தே யாருக்கான முக்கியத்துவம் திமுக-வில் அதிகம் இருக்கிறது என்பது தெரியவில்லையா?’ எனக் கேட்டிருக்கிறார். வாசன் மீது திருநாவுக்கரசர் கொஞ்சம் கோபத்தில் இருப்பதாகவே சொல்கிறார்கள் காங்கிரஸ் வட்டாரத்தில்.

ஈ.விகே.எஸ்.இளங்கோவன் பதவியில் இருந்து விலகியபிறகு, வாசனை எப்படியாவது காங்கிரஸில் கொண்டுவந்து சேர்த்துவிட வேண்டும் என்பதில் ரொம்பவே ஆர்வத்துடன் செயல்பட்டவர் திருநாவுக்கரசர். வாசனை காங்கிரஸில் சேர்க்கும் அசைன்மெண்ட்டை திருநாவுக்கரசரிடம்தான் ஒப்படைத்திருந்தார் ராகுல் காந்தி. ஆனால் எவ்வளவோ முயற்சி செய்தும், வாசன் பிடிகொடுக்கவே இல்லை. தற்போது திருநாவுக்கரசர் தமிழக தலைவராகி இருக்கும்நேரத்தில் வாசன் திமுக கூட்டணியில் இணைய முயற்சி செய்துவருகிறார். திண்டுக்கல் சித்தன்தான் இதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறார். காங்கிரஸில் இணையுமாறு அழைத்தபோது வராத வாசன், தற்போது திமுக-வில் இணைய முயற்சி செய்துவருவதைப் பார்த்துதான் திருநாவுக்கரசர் கோபமாகிவிட்டதாகச் சொல்கிறார்கள். இந்தத் தகவல் வாசன் கவனத்துக்கும் போனது. ‘அவரு கோபத்துல இருக்காரு என்பதற்காக நாம திமுக பக்கம் போகாம இருக்க முடியுமா? நம்மைப் பார்க்க வேண்டாம்னு சொல்றதுக்கு அவரு யாரு?’ என்றெல்லாம் சொல்லியிருக்கிறார் வாசன்’’ என்பதுதான் அந்த ஸ்டேட்டஸ்.
அதற்கும் லைக் போட்டு, ‘பிரிஞ்சு நின்றாலும் காங்கிரஸ் என்றால் சண்டை மட்டும் ஓயாதுபோல!’ என்று கமெண்ட்டை போட்டு ஆஃப் லைனில் போனது வாட்ஸ் அப்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக