திங்கள், 12 செப்டம்பர், 2016

நத்தம் விசுவநாதன் வீட்டில் அதிரடி சோதனை ... ஞானதேசிகன் காலை வாரினார்


‘ரெய்டு... ரெய்டு... ரெய்டு!’ என்று மட்டும் ஒரு மெசேஜ் வந்து விழுந்தது.அதைத் தொடர்ந்து, ‘‘கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி நான் சொன்ன தகவலை ஒருமுறை நினைவுபடுத்திக்கொள்ள அனுப்புறேன்... ‘தமிழகத்தைப் பொருத்தவரை, அதிகாரிகள்தான் ரொம்பவும் ஆடிப்போயிருக்கிறார்கள். அதிகாரிகள் வட்டாரத்தில் நினைக்காதவற்றை எல்லாம் செய்துவிட்டார் முதல்வர் ஜெயலலிதா. ஒருபக்கம் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சஸ்பெண்ட்... இன்னொருபக்கம் டிஜிபி விருப்ப ஓய்வு, கமிஷனர் மாற்றம் என தமிழகம் அலற ஆரம்பித்துவிட்டது. ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான ஞானதேசிகன், அதுல் ஆனந்த் ஆகிய இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரம் அதிகாரிகள் மத்தியில் கொந்தளிப்பை உண்டாக்கியிருக்கிறது.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு கோயம்பேடு அருகேயுள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சிலர் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். 'அவங்க சொல்றதை கேட்கலைன்னு இப்படி அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்வது எந்தவிதத்தில் சரியானது? இதுக்கு நம்ம எதிர்ப்பை பதிவு செஞ்சே ஆகணும். ஆனால் யாரும் வாயே திறக்காமல் இருக்காங்க... போயஸ் கார்டன்ல சி.எம். பக்கத்துலயே ஒரு லேடி இருக்காங்க. அவங்கதான் எல்லா பிரச்னைகளுக்கும் காரணம். அந்த லேடியும் ஒரு அதிகாரி என்பதை மறந்துட்டு செயல்படுறாங்க. நாளைக்கு அவங்களுக்கும் ஞானதேசிகன் நிலை வராது என்பது என்ன நிச்சயம்? அதிகாரிகளைப் பற்றி சி.எம்.கிட்ட போட்டுக்கொடுக்கிறது அந்த லேடிதான். அவங்களுக்கு எதுக்கு இந்த வேலைன்னு தெரியலை...' என்று புலம்பியிருக்கிறார் மூத்த அதிகாரி ஒருவர்.
அதற்கு மற்றொரு அதிகாரி, 'யாரு ஆட்சிக்கு வர்றாங்களோ அவங்களுக்கு ஜால்ரா அடிக்கிறவங்க நம்ம ஆட்களிலும் சிலர் இருக்கத்தான் செய்யுறாங்க. ஆனாலும் நம்மையெல்லாம் உருட்டி விளையாடும் பகடைக்காயாகத்தான் சி.எம். நினைக்கிறாங்க போல இருக்கு. இதை இப்படியே விட்டுடக் கூடாது.' என்று சொல்லியிருக்கிறார். இப்படியாக நீண்டபேச்சு, இரவு 11மணிக்குப் பிறகும் தொடர்ந்திருக்கிறது. அதன்பிறகுதான் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலருக்கும் ஒரு எஸ்.எம்.எஸ். போயிருக்கிறது. அதில், 'அதிகாரிகளாக இருப்போம். அரசியல்வாதிகளுக்கு தலையாட்டும் பொம்மையாக மாறி நம் தன்மானத்தை இழக்க வேண்டாம்' என சொல்லப்பட்டு இருந்ததாம். வரும் ஞாயிறன்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீண்டும் ஒரு சீக்ரெட் மீட்டிங் நடத்தவும் திட்டமிட்டிருக்கிறார்களாம்!’ என்று நான் சொல்லியிருந்தேன்.
இந்த சந்திப்புக்குப் பிறகு, முதல்வரை சந்தித்துப் பேச ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் முயற்சி செய்தனர். அதற்கும் தடை விதித்தது நான் ஏற்கனவே சொல்லியிருந்த முதல்வருக்கு அருகேயிருந்த லேடிதான். அதன்பிறகுதான் இனி, தமிழகத்தில் பேசி எந்த பிரயோஜனமும் இல்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள். சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஞானதேசிகனிடம் இருந்த சில ஆதாரங்களை வாங்கி மத்திய அரசுக்கு அனுப்பிவைத்ததாகச் சொல்கிறார்கள்.’’ என்று முடிந்தது அடுத்த மெசேஜ்.
‘‘சொல்வதெல்லாம் சரிதான்... இதற்கும், நத்தம் விஸ்வநாதனுக்கும் என்ன சம்பந்தம்? அவர் வீட்டில் ஏன் ரெய்டு நடத்த வேண்டும்?" என்று கேள்வியைக் கேட்டு வைத்தது ஃபேஸ்புக்.

‘‘சொல்றேன்... நத்தம் விஸ்வநாதன் மின்சாரத் துறை அமைச்சராக இருந்தபோது, மின்சார வாரியத்துக்கு சேர்மேனாக இருந்தவர் ஞானதேசிகன். அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்குக் காரணம், மின்சார வாரியத்தில் நடந்த ஊழல் என்று சொல்லப்பட்டது. ஆனால் ஞானதேசிகனோ, ‘எனக்கும் அந்த ஊழலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எல்லாம் அப்போது அமைச்சராக இருந்த நத்தம் விஸ்வநாதன் செய்தது!’ என்று சொல்லி, அதற்கான ஆதாரங்களையும் அடுக்கியிருக்கிறார். அதையெல்லாம்தான் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் டீம் மத்திய அரசுக்கு அனுப்பி வைத்திருக்கிறது. அதன்பிறகுதான் ரெய்டு ஆரம்பமானது. வரி ஏய்ப்புக்கான ரெய்டு என காரணம் சொல்லப்பட்டாலும், நத்தம் மற்றும் அவருக்குத் தொடர்புடையவர்களிடம் இருக்கும் சில ஆவணங்களை தேடித்தான் இந்த ரெய்டு நடந்திருப்பதாகச் சொல்கிறார்கள். மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றியும், நத்தம் விஸ்வநாதனின் மகன் அமர்நாத்தும் நண்பர்கள். மாடம்பாக்கம் அருகே வெற்றிக்குச் சொந்தமான பண்ணை வீடு இருக்கிறது. இங்கேதான் வெற்றியும், அமர்நாத்தும் சந்திப்பார்களாம். இந்தப் பண்ணை வீட்டில்தான் இப்போது ரெய்டு நடந்திருக்கிறது." என்று முடிந்தது வாட்ஸ் அப் அனுப்பிய பதில் மெசேஜ்.
ஃபேஸ்புக்கின் அடுத்த கேள்வியும் தயாராக இருந்தது. "வைர நகை வியாபாரி கீர்த்தி லால் இதில் எங்கே வந்தார்? அவரது வீட்டில் ரெய்டு நடத்தவேண்டிய அவசியம் என்ன?" என்பதுதான் அந்தக் கேள்வி.
அதற்கும் பதிலை படபடவென டைப்பிங் செய்ய ஆரம்பித்தது வாட்ஸ் அப். ‘‘கோவைதான் கீர்த்திலாலுக்கு பூர்வீகம். வைர நகை வியாபாரத்தில் கொடிகட்டிப் பறப்பவர். பலருக்கும் பினாமியாகச் செயல்படுபவர் என்றும் கீர்த்திலால் பற்றி சொல்வார்கள். அண்மையில் நடந்த ஒரு விவிஐபி வீட்டுத் திருமணத்துக்கு எல்லா ஏற்பாடுகளையும் கவனித்தது இந்த கீர்த்திலால் குழுமத்தினர்தான். அதிமுக-வுக்கு நெருக்கடிகளைக் கொடுக்க வேண்டும் என ஒருபக்கம் மத்திய அரசும் காத்திருந்தது. அதனால்தான் ஒரே நேரத்தில் நத்தம் விஸ்வநாதன், கீர்த்திலால் என எல்லா இடங்களிலும் ரெய்டுக்கு கிரீன் சிக்னல் கொடுத்துவிட்டது. தமிழகத்தில் பாஜக வளர வேண்டுமானால் அதிமுக-வுக்கும், திமுக-வுக்கும் இருக்கும் இமேஜை சரிக்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் பாஜக தலைமைக்கு அண்மையில் ஒரு ரிப்போர்ட் கொடுத்தார்கள் என்று நான் சொல்லியிருக்கிறேன். அதில் ஒரு கட்டமாகத்தான் இந்த அதிரடி நடவடிக்கைகள்! இது ஆரம்பம் மட்டுமே... தமிழக அரசுக்கும், அரசுக்கு ஆதரவாக இருப்பவர்களுக்கும் எதிரான மத்திய அரசின் பிடி, இன்னும் இறுக வாய்ப்புகள் நிறைய இருக்கிறது. அதில் ஒரு கட்டமாகத்தான் இந்த அதிரடி நடவடிக்கைகள்! இது ஆரம்பம் மட்டுமே... இன்னும் அதிகமாகும் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்" என்ற மெசேஜ்க்கு செண்ட் கொடுத்தது.
தொடர்ந்து ஆஃப் லைனில் போவதற்கு முன்பு வாட்ஸ் அப் அனுப்பியிருந்த மெசேஜ் இதுதான்.
‘‘நத்தம் விஸ்வநாதன் வீட்டில் ரெய்டு நடக்கும் தகவலை காலை 11 மணிக்குத்தான் ஜெயலலிதாவிடம் சொல்லியிருக்கிறார்கள். நத்தம் விஸ்வநாதன் பற்றிய மற்ற விவகாரங்களும் அப்போதுதான் ஜெயலலிதா கவனத்துக்குப் போயிருக்கிறது. எல்லாவற்றையும் கேட்டவர் மதியம் 2 மணிக்கு, அவரை அமைப்புச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து நீக்கி உத்திரவிட்டுள்ளார். நத்தம்மீது இன்னும்கூட சில நடவடிக்கைகள் பாயலாம் என்கிறார்கள்!"  மின்னம்பலம்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக