வியாழன், 8 செப்டம்பர், 2016

வினவு: உனக்கு கீதை எங்களுக்கு சங்க இலக்கியம் – பழ. கருப்பையா..


மோடி அரசின் புதியக் கல்விக்கொள்கை – சமஸ்கிருத திணிப்புக்கு எதிராக, செப்டம்பர் – 1, 2016 அன்று சென்னை – மதுரவாயலில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி நடத்திய பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் தி.மு.க வை சார்ந்த எழுத்தாளர் திரு.பழ.கருப்பையா ஆற்றிய உரை!நான் ஆயிரக்கணக்கானவர்கள் கூடியுள்ள மாநாடுகளில் பேசியுள்ளேன். ஆனால் ரொம்பப் பெரிய வியப்பு – இவ்வளவு இளைஞர்கள் ஒரு புரட்சிகர அமைப்பின் கீழ் கூடியிருக்கிறீர்கள் என்றால், இன்னொரு 10 ஆண்டுகளில் நீங்கள் இந்த நாட்டை மாற்றிவிடுவீர்கள் என்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. இவ்வளவு இளைஞர்கள், இளம்பெண்கள், மாணவிகள் எல்லாம் கொள்கை பிடிப்புள்ள இந்த அமைப்பில் இருப்பது பாராட்டுதற்குரியது.

ஏனென்றால் இளமை என்பது முனைப்பு மிக்கது, அறிவால் பெரும் வளர்ச்சியடையக் கூடிய வயது அது. ஆனால் இன்றைய இளைஞர்கள் சினிமா கதாநாயகர்கள் ரசிகர்களாக தங்களை மாற்றிக் கொண்டு விட்டார்கள். அப்படிப்பட்ட சாதாரண இளைஞர்களைப் போல் இல்லாமல், நீங்கள் தியாகிகளுக்கு உணர்வோடு வீர வணக்கம் செலுத்துகிறீர்கள். இந்த நாட்டை மாற்றியமைக்க வேண்டும் என விரும்புகிறீர்கள். உண்மையிலேயே இந்த நாடு மாற்றியமைக்கப்பட வேண்டும். சிந்தனை எல்லாம் வர்க்க அடிப்படையில் அமைந்தால் சாதிகளெல்லாம் தகர்ந்து போகும். இன்றைய உலகமயமாக்கல் – தாராளமயமாக்கல் காரணமாக நீங்கள் ஏற்றிக் போற்றுகின்ற சோசலிசத்தின் தேவை கூடியிருப்பதாக கருதுகிறேன்.
இவ்வளவு பெரிய இளைஞர் கூட்டம் – சோசலிசத்தின் மீது பற்று கொண்ட கூட்டம் என்பது எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இவ்வளவு பெரிய கூட்டம் – கடைசி வரை கட்டுக்கோப்பாக இருப்பது வியப்பு. அதுவும் கூட்டம் துவங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்னாடியே சினிமா டிக்கெட் வாங்க வந்த கூட்டம் போல் கூடியிருப்பதை இப்போது தான் பார்க்கிறேன். புரட்சிகர அமைப்பில் நடைபெறுகிற கூட்டத்தைக் கேட்பதற்கு 50, 100 பேர்கள் தான் இருப்பார்கள் என்று கருதினேன். ஆனால் இப்படி ஆயிரக்கணக்கில் இளைஞர் கூட்டம் காத்திருக்கும் என நான் எண்ணவே இல்லை.
maduravoyal rsyf meetingகம்யூனிஸ்டுகள் இன உணர்வாளர்களாக இருந்து நான் பார்த்ததில்லை. ஆனால் புரட்சிகர அமைப்பினர், சோசலிசம் பேசுகிறவர்கள், மொழி, இன உணர்வாளர்களாக இருக்கிறீர்கள் என்பது பாராட்டுவதற்கு உரியது.
மொழிவழியாக ஒரு இனம் தன்னை அடையாளம் கண்டு கொள்வது இயல்பானது. பிறப்பிலேயே மொழிவழியாக நாம் தமிழர்கள். சிந்து சமவெளி நாகரிகத்திற்கு முற்பட்ட நாகரிகம் நம்முடையது.
பார்ப்பனர்கள் – வேத நாகரிகத்தை சேர்ந்தவர்கள். திராவிடம் என்பது ஆரியத்திற்கு மாற்று. உனக்கு வேத நாகரிகம் – எங்களுக்கு சிந்து சமவெளி நாகரிகம், உனக்கு செம்மொழி சமஸ்கிருதம் – எங்களுக்கு தமிழ், உனக்கு சிறந்த பெண் – பாஞ்சாலி – எங்களுக்கு கண்ணகி, உனக்கு வேதம் – எங்களுக்கு திருக்குறள், உனக்கு கீதை – எங்களுக்கு சங்க இலக்கியம், உனக்கு ஆயுர்வேதம் – எங்களுக்கு சித்த மருத்துவம்.
எவண்டா இன்றைக்கு சமஸ்கிருதம் பேசுறான்? பெரிய சங்கராச்சாரியாரோடு அது செத்து தொலைந்தது. கோவிலில் கிளிப்பிள்ளை போல பேசுகிறார்கள் சமஸ்கிருதத்தை. நமது பூசை முறை வேறு, (எல்லாவற்றையும் கழுவி பூவிடுவது, லிங்க வழிபாடு) அவனது பூசை முறை வேறு. (யாகம், அக்னி வழிபாடு) உன்னுடைய கடவுளை இழந்துவிட்டாய், எங்களுடைய கடவுளை பற்றிக் கொண்டாய். எங்கள் கருவறையில் உனக்கென்ன வேலை.
ஆரிய மேட்டிமையை, சமஸ்கிருத மேலாண்மையை எதிர்த்தால் ஒழிய நாம் சுயமரியாதை வாழ்வை பெற முடியாது. திருவனந்தபுரத்தில் சென்று விவேகானந்தர் – we are all hindus – என்ற போது We are not hindus என்றார் மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை. பாரதி- தமிழை பாராட்டினாலும் அடிப்படையில் பார்ப்பனன். அவன் சமஸ்கிருதத்தை தெய்வ பாஷை என்கிறான். ஆரியத்தைவிட மேலாக வாழ்ந்தவர்கள் திராவிடர்கள். சமஸ்கிருதம் செத்துத் தொலைந்து வெகு காலமாகிவிட்டது. அதில் நவீன அறிவியல், தொழில்நுட்பம், எதுவும் இல்லை.
பாரதியின் உள்மனதில் ஆரியர்கள் தான் அறிவு பரம்பரையினர். நமக்கு பாரதி தாசன் உள்ளார். அவர் கூறியது போல விழிப்புற்று எழுவோம்!”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக