புதன், 21 செப்டம்பர், 2016

காவிரி நீர்ப் பிரச்சினை: உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறோம்: கி.வீரமணி

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”காவிரி நீர் தமிழ்நாட்டுக்குத் திறந்து விடுவது குறித்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இன்று முக்கிய ஆணையினைப் பிறப்பித்துள்ளது. 1. தமிழ்நாட்டுக்கு நாளை முதல் 27 ஆம் தேதிவரை நாள்தோறும் 6000 கன அடி தண்ணீரைத் திறந்துவிட வேண்டும் என்றும், 2. நான்கு வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்துக்கான தலைவர், உறுப்பினர்களை நியமனம் செய்யவேண்டும் என்றும் கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளது உச்சநீதிமன்றம்.
உண்மையிலேயே இது வரவேற்கப்படவேண்டிய ஆணையாகும். சட்டப்படி காலந்தாழ்த்தாமல் கருநாடக மாநிலம் செயல்படுத்தியே தீரவேண்டும். காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு - அது தொடங்கப்பட்டு 17 ஆண்டுகளுக்குப் பிறகு 5.2.2007 அன்றுதான் வழங்கப்பட்டது. நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கியும் - ஆறு ஆண்டுகள் கழித்தே அந்தத் தீர்ப்பு மத்திய அரசு கெசட்டில் வெளியிடப்பட்டது (19.2.2013).

கெசட்டில் வெளியாகி 90 நாள்களுக்குள் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் மற்றும் இரு உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டிருக்கவேண்டும். ஆனால், மூன்று ஆண்டுகள் ஓடியும் மத்திய அரசு சட்டப்படியான தனது கடமையைச் செய்யத் தவறிவிட்டது. இது உண்மையிலேயே நீதிமன்ற அவமதிப்பாகும். காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு இருந்தால், இந்தப் பிரச்சினை இந்தளவு சிக்கலுக்கு ஆளாகி இருக்காது; சட்டப்படி எதுவோ அது இயல்பாகவே நடந்துகொண்டு வந்திருக்கும். யாருக்கும் பாதிப்பு - சாதகம் என்ற நிலைக்கு இடம் இல்லாமல் போயிருக்குமே!

மத்தியில் உள்ள ஆட்சி அரசியல் கண்ணோட்டத்தோடு - தேர்தல் கண்ணோட்டத்தோடு - நீதிமன்ற அவமதிப்பைத் தெரிந்தே செய்திருக்கிறது என்பதில் அய்யமில்லை.
நடுவர் நீதிமன்றம் காவிரி நதி நீரில் தமிழ்நாட்டின் பங்கு 419 டி.எம்.சி. என்றும், கருநாடகத்துக்கு 270 டி.எம்.சி. என்றும், கேரளத்துக்கு 30 டி.எம்.சி. என்றும், புதுச்சேரிக்கு 7 டி.எம்.சி. என்றும் வரையறை செய்து தீர்ப்பளித்திருந்தது. தமிழ்நாட்டுக்கு ஆறுதல் அளிக்கக்கூடிய தீர்ப்பு என்று அன்றைய முதலமைச்சர் கலைஞர் அவர்கள் கருத்துத் தெரிவித்தபோது, அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் செல்வி ஜெயலலிதா அவர்கள் தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டுள்ளது, தமிழ்நாடு அரசு உடனடியாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவேண்டும் என்று வற்புறுத்தவில்லையா?

அந்த அளவுக்கு தமிழ்நாட்டிற்குரிய காவிரி நீர் உரிமைப் பிரச்சினையில் அக்கறை உள்ளதாகக் காட்டிக் கொண்டவர்தான் தற்போதைய முதலமைச்சர். உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கைத் துரிதப்படுத்த எடுத்துக்கொண்ட முயற்சிகள் - நடவடிக்கைகள் என்ன?

பாம்பும் நோகக்கூடாது; பாம்படித்த கோலும் நோகக்கூடாது என்ற முறையில் இந்தப் பிரச்சினையை அணுகுவது ஏன்?
இப்பொழுது உச்சநீதிமன்றம் சரியான தீர்ப்பைக் கிடுக்கிப் பிடி போட்டதுபோல வழங்கிவிட்டது.
உச்சநீதிமன்றத் தீர்ப்பை ஏற்று, மதித்து மத்திய அரசு நான்கு வாரத்துக்குள்ளாக காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்துக்கான தலைவர் மற்றும் இரு உறுப்பினர்களையும் நியமனம் செய்ய வேண்டும். இந்தத் தருணத்தில், மத்திய அரசுக்குத் தேவையான அழுத்தத்தைக் கொடுக்கும் பொறுப்பு தமிழக முதலமைச்சருக்கு இருக்கிறது.

சட்டப்படியாக - நியாயப்படியாக தமிழ்நாட்டுக்குக் கிடைக்கவேண்டிய தண்ணீருக்காக - தமிழ்நாடு குரல் கொடுக்கிறது - ஆனால், கருநாடகமோ சட்ட விரோதமாகவும், நியாய விரோதமாகவும் நடந்துகொண்டு வருகிறது - அடாவடித்தனமாக செயல்பட்டும் வருகிறது.

 அங்கு வாழும் தமிழர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள் - தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் தலைதூக்குகின்றன. இதனைத் தடுத்து நிறுத்துவதில்கூட தமிழ்நாடு அரசு மிகவும் மென்மையான போக்கைத்தான் கடைப்பிடிக்கிறது. இந்த அணுகுமுறையை மாற்றிக்கொண்டு, கருநாடகம் வாழ் தமிழ் மக்களைப் பாதுகாக்கவும், உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை கட்டாயம் செயல்படுத்தவும் தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு அரசை - முதலமைச்சரை வலியுறுத்துகிறோம்” என்று தெரிவித்துள்ளார். நக்கீரன்,இன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக