ஞாயிறு, 11 செப்டம்பர், 2016

தமிழர்களைத் தாக்குபவர்கள் மீது நடவடிக்கை: இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே


minnambalam.com :நாளொன்றுக்கு 15,000 கன அடி வீதம் 10 நாட்களுக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, காவிரியில் தண்ணீர் திறந்துவிடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கன்னட அமைப்பினர் அணை முற்றுகை, உருவப் பொம்மை எரிப்பு மற்றும் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடகாவில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் ஒரு சில இடங்களில், இருசக்கர வாகனங்களுக்குத் தீ வைக்கும் நிகழ்வும் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில், கர்நாடகாவில் வாழும் தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பை, மாநில அரசு வழங்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், கர்நாடகாவில் தமிழர்களை தாக்குபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய சமூக நீதித்துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கேட்டுக் கொண்டுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, “இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மக்களும் இந்திய மக்கள்தான். இதில் சாதியின் பெயரால் பிரச்னை ஏன்? சாதிகள் ஒழிக்கப்பட வேண்டும் என்றால், கலப்பு திருமணங்கள்தான் தீர்வாக அமையும். சாதி பிரச்னைகளைத் தூண்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை வைக்கிறேன். கர்நாடகாவில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதை ஏற்க விருப்பம் இல்லை என்றால் போராட்டம் நடத்த உரிமை உள்ளது. அதற்காக, கர்நாடகத்தில் வாழும் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துவது சரியானது அல்ல. தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக