வியாழன், 15 செப்டம்பர், 2016

தோழர் பாலனின் நாயக்கன் கொட்டாய்! எம்ஜியார் ஆட்சியில் வால்டர் தேவாரத்தால் படுகொலை செய்யபட்ட ....

செப்டம்பர் 12, நக்சல்பாரிப் புரட்சித் தோழர் பாலன், அன்றைய பாசிச எம்.ஜி.ஆர். ஆட்சியில் படுகொலை செய்யப்பட்ட நாள். அந்நாளை, தோழர்கள் சாரு மஜூம்தார், எல்.அப்பு போன்ற தலைவர்கள் உள்ளிட்டு இந்தியாவின் புதிய ஜனநாயகப் புரட்சிக்காகப் போராடி உயிர் நீத்த அனைத்து புரட்சித் தியாகிகளின் நினைவைப் போற்றும் நாள்

 தோழர். அப்பு, தோழர்.பாலன் சிலைகள் அமைக்கப்பட்டுள்ள தருமபுரி நத்தம், நாயக்கன் கொட்டாய் பகுதிக்கு சென்றோம். நத்தம் கிராம மக்கள் எங்களை அன்புடன் வரவேற்றார்கள். அப்பகுதியில் அமைந்திருந்த பம்பு செட்டில் அனைவரும் குளித்துவிட்டு இருவர் இருவராக பிரிந்து அப்பகுதி கிராம மக்கள் வீட்டில் காலை உணவை உண்டோம். அப்பகுதி மக்களும் புன்முறுவலோடு எங்களை உபசரித்தார்கள். அதில் மிக முக்கிய விடயம் அவர்கள் அனைவரும் எங்களை தோழர்கள் என அழைத்தப்போதுதான்,  தோழர்.பாலன் சாகவில்லை என்பதை உணரமுடிந்தது. பின் தோழருக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, நத்தத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ள தோழர்.இளவரசன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு, மாலை தோழர்.ஏலகிரி ராமனையும், தோழர்.சித்தண்ணனையும் தோழர்கள் அனைவரும் சந்தித்தோம்.
தோழர்.சித்தண்ணன் தோழர்.பாலனோடு இரண்டு ஆண்டுகள் கரம்பிடித்து நடந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தோழர்.பாலன் எம்.எஸ்.சி கணிதத்தில் தங்க பதக்கம் பெற்றவர். கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் பேச்சுப்போட்டிகளில் பங்குபெற்று பரிசு பெற்றவர். தோழர்.பாலன் களத்தில் பணியாற்றிய போது சக தோழர்களுக்கு பெண்ணுரிமையை அதிகம் போதிப்பார், பெண்கள் மீது எப்போதும் உயர்ந்த மதிப்பு வைத்திருப்பார், அது மட்டுமல்லாமல் குழந்தைகள், சிறுவர்களுடன் பழகுவதிலும் மிக இனிமையானவராம். அதுவே பிற்காலத்தில் பாலர் சங்கம் கட்டுமளவு சென்றது என்றும், முதியவர்களிடம் பழகும்போது நிறைய இலக்கியங்கள், திருக்குறள்கள் சொல்லியும் உரையுடும்போது முதியவர்கள் பாலனை இன்றும் தன் மகனாக பார்ப்பதை உணரமுடிந்தது.
கட்சிக்காக நிதி திரட்டும் பணியில் அருகில் உள்ள கரும்புகாட்டை குத்தகைக்கு எடுத்து தோழர்கள் அனைவரும் உழைத்து, தோழர்களின் உழைப்பை கண்டு வியந்து கூடுதலான கூலி வழங்குவாராம் நிலச்சொந்தக்காரர். இப்படி தோழர்கள் உழைப்பிலிருந்து அன்னிய படாமல் இருப்பதும், கட்சிக்கு நிதி திரட்டுவதும் சிறப்பானதாக பார்க்கமுடிகிறது. தாழ்த்தப்பட்ட மக்களையும் பிற்படுத்தப்பட்ட மக்களையும் ஒன்றாக அமர்ந்து சமபந்தி போஜனம் நடத்தி வேறுபாடுகளை எல்லா நிகழ்வுகளிலும் கலைப்திடுவதில் வல்லவர் என்றும் பிற்படுத்தப்பட்ட மக்களை மாட்டிறைச்சி உண்ணவைத்ததிலும் வெற்றி கண்டவர் எனச்சொன்னார்கள்.
கந்துவட்டி, கூலி உயர்வு போன்ற பொருளாதார போராட்டங்களின் மூலம் சாதிய பிரச்சனைக்கு தீர்வு கண்டார் என்றார்கள். குறிப்பாக மக்கள் பிரச்சனைகளை குழுவாக அணுகி செயல்பட்டால் தோழர்.பாலன் எந்த அடையாளத்துக்குள்ளிம் சிக்காமலும் சாதித்தலைவராக மாற்றப்படாமல் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
அவருடைய தோழர்கள் அங்கே இரத்தம் சிந்தாத காவல்நிலையமே கிடையாதாம். காவற்துறை அடித்துக் கொல்லப்பட்ட பாலனின் மரணச்செய்தி கேட்டு 40 க்கும் மேற்பட்ட சிறை வார்டன்கள் உண்ணாநோன்பு மேற்கொண்டார்கள் என்ற செய்தியும் வியப்பாக இருந்தது. ஆங்கிலத்தில் உரையாடினால் நீதிபதியே மெய்சிலிர்த்துப் போவாராம்.
தோழர்.பாலனின் வரலாறு கேட்டு நானும் மெய்சிலிர்த்து போனேன். பாலனி தியாகமும், அற்பணிப்பும் போற்றப்பட வேண்டியவை மட்டுமல்ல, பரப்பப்பட வேண்டியவையும், கற்கப்பட வேண்டிய முக்கியமானதாக நான் கருதுகிறேன். நிச்சயம் தோழர்கள் சிந்திய இரத்தம் வீண்போகது என்ற நம்பிக்கையில்…
கண்ணன், அரசியல் செயல்பாட்டாளர்   thetimestamil.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக