வியாழன், 8 செப்டம்பர், 2016

சிங்கப்பூரில் தருண் விஜய் திருவள்ளுவர் பற்றி கலந்துரையாடல் ..

திருவள்ளுவர் மீது திடீர் பாசம் கொண்ட தருண்விஜய் எம்.பி-யுடன்
சிங்கப்பூரில் ஒரு கலந்துரையாடல்
31-08-2016 புதன் கிழமை அன்று சிண்டா-வின் கட்டடத்தில் நடைப்பெற்றது. நானும் கலந்துக்கொண்டேன்.
பட்டு வேட்டியுடன் மிடுக்காக வந்தார் தருண்விஜய். தமிழில் மகிழ்ச்சி, சந்தோசம், வணக்கம், நன்றி என்று கூறி..ஆங்கிலத்தில் எழுதிவைத்து தமிழில் உரையை தொடங்கினார். நல்ல தமிழ் உச்சரிப்பு. தொடர்ந்து ஆங்கிலத்தில் உரையாற்றும்போது திருவள்ளுவரை பற்றியும், இராஜ ராஜசோழன், வேலுநாச்சியார், ஆண்டாள், பாராதி என தமிழகத்தை சேர்ந்தவர்களை போற்றி பாராட்டி வந்திருந்த தமிழ் உண்ர்வாளர்களை மகிழ்ச்சி பரவசப்படுத்தினார்.
ஆரம்பத்தில் பேசும்போதே நான் B.J.P, R.S.S பின்னனியிலிருந்து வருகிறவன் ஆனாலும் எல்லோரும் என்னை பாராட்டுவது எனக்கு வியப்பளிக்கிறது என்று குறிப்பிட்டார்.( திருவள்ளுவருக்கும் கோவில் கட்டி நாலு அய்யர்களை அழைத்து கும்பாபிஷேகம் செய்யப்போகிறாரோ?)

தொடர்ந்து கேள்வி பதில் அங்கத்தில் நல்ல பல கேள்விகளை வந்திருந்தவர்கள் தருண் விஜயிடம் கேட்டார்கள், அவரும் முடிந்தளவு முழுமையான பதில்களை தற முயற்ச்சித்தார் ஆனால் அரசியல் பேசவேண்டாம் என்ற நிகழ்ச்சி நெறியாளரின் கட்டுப்பாட்டினால் பதில்கள் முழுமை பெறாமல் முடிவடைந்தது.
சென்னை ஹைகோர்டில் வழக்காடுமொழியாக தமிழ்மொழி அறிவிக்க வேண்டும் என்ற கேள்விக்கு பதில் அளிக்கையில் இந்தியாவில் மொழி சமத்துவம் வேண்டும் அந்த அந்த மாநில மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று சரியான பதில்அளித்தார்.
பிடித்த இரண்டு குரள் சொல்லுங்கள் என்ற கேள்விக்கு
அகர முதல எழுத்தெல்லாம் என்ற குறளும்,
சமத்துவத்தை வலியுருத்தும் “பிறப்புஓக்கும் எல்லா உயிர்க்கும்:” என்ற குறளும் பிடிக்கும் என்று கூறினார்.
திருக்குறள் நூல் இந்தியாவில் எல்லா நூல்களைவிட உயர்வானது என்றும் குறிப்பிட்டார்.
தமிழக எம்.பிக்கள் யாரும் தமிழுக்காவும், திருவள்ளுவருக்காவும் நாடாளுமன்றத்தில் குரல்கொடுக்க மாட்டுகிறார்கள் என்று கூறி அதற்கு காரணம் அவர்கள் ஒரு தலைமையின் கீழ் இயங்கக்கூடிய எம்.பிகள் அதனால் அவர்களின் தலைமைக்கு கட்டுப்படவேண்டும். ஆனால் எனக்கு அப்படியில்லை என்னை யாரும் கேள்விக் கேட்கமாட்டார்கள் என்று கூறினார்.
உண்மைதான் மற்றக்கட்சிகள் எல்லாம் வெறும்அரசியல் கட்சிகள் ஆனால் B.J.P-யை இயக்குவது R.S.S என்ற இந்துத்துவாயை செயல்படுத்தும் இயக்கம், அந்த R.S.Sலிருந்து தருண் விஜய் வந்துள்ளதால் யாரும் கேள்வி கேட்கமாட்டர்கள் காரணம் R.S.S-யை சேர்ந்தவர்கள்வெறும் தேர்தல் ஓட்டு வங்கிக்காக மட்டும் எந்த ஒரு செயலையும் செய்யமாட்டார்கள். நீண்டகாலத் திட்டத்துடன் இந்துத்துவாவை மேலும் எப்படி வலிமைப்படுத்துவது, விளம்பரப்படுத்துவது என்ற முயற்சியை எப்போதும் தொடர்வார்கள் சிலநேரங்களில் வெளிப்படையாக இருக்கும், சிலநேரங்களில் மறைமுகமாக இருக்கும்.
அப்படி ஒரு முயற்சிதான் தருண் விஜயின்திருவள்ளுவர் பாசம். மேலோட்டமாக பார்க்கும்போது திருவள்ளுவரை வடஇந்தியாவில் பிரபலப்படுத்து போன்று தோன்றும் ஆனால் உண்மையில் அந்த முயற்சியின் அடிப்படை R.S.S-யை, B.J.P-யை தமிழ்நாட்டில் பிரபலப்படுத்துவதே.
இதனை வெறும் அனுமானத்தில் கூறவில்லை. தருண் விஜய் என்பவர் சாதரண பதவி அரசியலுக்காக கட்சிவிட்டு கட்சித்தாவும் அரசியல்வாதி கிடையாது. அப்படி இருந்தால் நாம் அச்சப்பட தேவையில்லை.
அவருக்கு பதவி கொடுத்தாலும், கொடுக்கவில்லை என்றாலும் R.S.S-ன் சித்தாந்தத்தை செயல்ப்படுத்தக் கூடியவர்.
R.S.S-யை பற்றி முழுமையாக தெரியாத சாதரண உறுப்பினர் கிடையாது. R.S.S-ன் அதிகாரப்பூர்வ இதழாக வெளிவரும் “பாஞ்சஜன்யா” இதழின் ஆசிரியராக 22ஆண்டுகள் (1986-2008) இருந்தவர்.
இந்தியாவை இந்து நாடாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் R.S.S இந்துத்துவாவை செயல்படுத்த பகவத்கீதையை முன்னிருத்தி வர்ணதர்மப்படி சாதி முறைகளை பாதுகாக்கும் இயக்கமாகும். அதன் அடிப்படையில் மத்தியஅமைச்சர் சுஷ்மா சுவராஜ் பகவத்கீதையை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று பகிரங்கமாகவே அறிவித்து அது பிரச்சினைக்குரிய செய்தியாக சென்ற ஆண்டு இருந்தது.
ஆனால் தருண் விஜய் “பிறப்புஓக்கும் எல்லா உயிர்க்கும்:” என்ற குறள் சமத்துவத்தை வலியுருத்தி அனைவரையும் ஒன்றுப்படுத்துகிறது. எதன் அடிப்படையில் திருக்குறள் உயர்ந்த நூல் என்றுகூறுகிறார். அதற்கு நேர்எதிரான கொள்கையை கொண்டதுதான் பகவத்கீதை.
பகவத்கீதையைவிட உயர்வானது திருக்குறள்என்று R.S.S இயக்கம் சொல்லமுடியுமா? அல்லது வர்ணதர்மத்தை எதிர்த்து பிரச்சாரம் செய்யமுடியுமா? என்ற கேள்விகள் எழவதை தவிர்க்க முடியாது காரணம் தருண் விஜயின் கருத்தும் அவர் வளர்க்கும் இயக்கத்தின் கொள்கையும் எதிரும்-புதிருமாக இருப்பதே.
திருக்குறள் பற்றி R.S.S என்னசொல்கிறது. அந்த அமைப்பின் நிறுவனத் தலைவர் எம்.எஸ்.கோல்வால்கர் எழுதிய Bunch of Thoughts எனும் புத்தகத்தில் திருக்குறளைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
“Tirukkural is undoubtedly a great scriptural text more than two thousand years old. Saint Tiruvalluvar is its great author. We remember him in our Pratah – smaranam. There is an authentic translation of that book by V.V.S.Iyer, the well-known revolutionary. What is the theme propounded therein, after all? The same old concept of Chaturvidha-purusharthais put forth as the ideal”(page No:112)
தமிழாக்கம்:
“திருக்குறள் சந்தேகமற ஓர் உயர்ந்த இதிகாச நூல். இரண்டாயிரம் ஆண்டு களுக்கு மேற்பட்டது ஆகும். திருவள்ளுவர் அந்த நூலின் மாபெரும் ஆசிரி யர். எங்களது கூட்டத்தில் - பிரதா சமா ரணம் - அவரை நினைத்துக் கொள்வோம். திருக்குறள் பற்றிய அதிகாரபூர்வ மொழியாக்கத்தினை வ.வே.சு.அய்யர் செய்துள்ளார். திருக் குறளில் அப்படி வலியுறுத்தப் பட்டுள்ளகருத்து என்ன? சதுர்விதா - புருஷார்த்தா எனப்படும், பழையகோட் பாடுதான் கொள்கையாக கூறப்பட் டுள்ளது.”
திருவள்ளுவரை போற்றுவது போல் கூறி, திருக்குறளில் உள்ள கருத்துகள் ‘சதுர்விதா - புருஷார்த்தா’ எனப்படும் பழைய நால்வகைப்பட்ட வாழ்வியல் கோட்பாடு சார்ந்தவையே என உண்மைக்கு மாறானதை பதிவுசெய்துள்ளது. இது எந்த அளவு திரிபு நிலைப் போக்கு! ‘பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும்‘ எனச் சொன்ன திருவள்ளுவரின் நிலைப்பாட்டிற்கு நேர்எதிரானதே?
தருண் விஜய்யின் திடீர் திருவள்ளுவர் பாசத்துக்கும் அவர் சார்ந்த இயக்கத்துக்கும்; திருக்குறள் பற்றி இருவேறு கோட்பாடுகள் இருக்கும் போது எப்படி தருண்விஜய்யின் செயல்பாடுகளை சந்தேகிக்காமல் இருக்க முடியும்? எப்படி ஒருவரே இருவேறு நேர்எதிர் கொள்கைகளை ஏற்று செயல்படமுடியும்?
திருக்குறளை, அதன் நெறியை இவர் உண்மையிலேயே ஏற்பவராயின் அதற்கு நேர்எதிரான இயக்கத்தில் இவர் எப்படி இருக்கமுடியும்? நீடிக்க முடியும்? விலகிவந்தால் ஓரளவு நம்பலாம். அதிலிருந்து கொண்டே திருவள்ளுவர்பற்றி பெருமை பேசுவது வேடமேயாகும்.
திருவள்ளுவர் பெயர் வட இந்தியாவில் ஒலித்தால் தமிழர்களுக்கு பெருமை என்று கருதுபவர்களுக்கு வேண்டுமானால் தருண்விஜயின் மீது நம்பிக்கை வைக்கலாம்.
ஆனால் திருவள்ளுவரின் திருக்குறள்படி எல்லோரும் சமமாக மதிக்கப்பட வேண்டும் தமிழர்களின் உரிமையை மீட்டெடுக்க வேண்டும் என்று கருதுபவர்களுக்கு தருண்விஜய்யின் தீடீர் திருவள்ளுவர் பாசத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.
திருவள்ளுவர் எல்லோருக்கும் பொதுவானவராக எம்மதத்தையும் சாராதவராக தமிழராக மட்டும் பார்க்கப்படுபவர். அவரின் திருக்குறளும் எல்லோருக்கும் பொதுவான ஒரு நூலாக இருப்பதால் “உலகப் பொது நூல்” என்று அழைக்கப்படுகிறது.
ஆனால் திருவள்ளுவரை ஒரு மதத்திற்குள்கொண்டுவரும் முயற்சி தொடர்ந்து நடைபெற்று கொண்டே வருகிறது.
ஆரம்பத்தில் திருவள்ளுவரின் உருவத்திற்கு“பூணூல்” அணிவித்து அவரை அய்யராக காட்டும் முயற்சியும் நடைபெற்ற செய்திகள் உண்டு.
திருவள்ளுவருக்கு மயிலாப்பூரில் கோயில்கட்டி இந்து முறைப்படி வழிப்பாடு நடத்தி வருகிறார்கள்.
இப்போது இந்துக்களின் புனித தளமாக போற்றப்படுகிற கங்கைக்கரையில் திருவள்ளுவரின் சிலையை நிறுவ முயன்றார்கள். அது அங்கு உள்ள சாமியார்களால் சாதுக்களால் முறியடிக்கப்பட்டு தோல்வியில் முடிந்துள்ளது. அதுவும் திருவள்ளுவரை இந்துவாக கருதி தீண்டதகாத தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவர் அதனால் கங்கைக்கரையில் திருவள்ளுவரின் சிலையை வைக்கக்கூடாது என்று திருவள்ளுவரை வெளியேற்றி விட்டார்கள்.
ஆக தொடர்ந்து திருவள்ளுவரை இந்து மதத்தைசேர்ந்தவராக மாற்றும் முயற்சி நடைபெற்று வருகிறது. இப்படி தொடர்வதனால் உலகப் பொது நூல்”க்கு சொந்தமான திருவள்ளுவரை இந்துமறைக்குள் அடைக்கப் பார்கிறார்கள்.
R.S.S-ம், B.J.P-யும் திருவள்ளுவரை முன்னிறுத்துவதனால் இந்துமதத்திற்கு வலுசேர்க்க பயன்படுமே தவிர அதனால் தமிழர்களுக்கும் தமிழ்மொழிக்கும் ஒருவளர்ச்சியும், முன்னேற்றமும் ஏற்பட்டுவிடாது.
தருண் விஜய் தலித்துக்கு ஆதரவாக உள்ளவர். உத்தரகாண்ட் மாநிலத்தில் சக்ரதாவில் உள்ளசில்கூர் தேவாதாகோயிலுக்குள் தலித்துகளையும், பகுஜன் சமாஜ்தலைவர் தவுலத் குன்வாரையும் கோயிலுக்குள் அழைத்து சென்று வழிப்பட செய்தார். அதனால் தாக்கப்பட்டார் என்ற செய்தி பரப்பப்படுகிறது.
ஆனால், சில்கூர் தேவதா கோயிலுக்குள் ஏற்கெனவே தலித்துகள் அனுமதிக்கப்பட்டு வருவதால், பகுஜன் சமாஜ்தலைவர் தவுலத் குன்வார் கோயிலுக்குள் சென்ற தற்காக இந்தத் தாக்குதல் நடந்திருக்க வாய்ப்பில்லை என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உண்மையான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணைநடத்தி வருவதாக டேராடூன் காவல் துறைகண்காணிப்பாளர் டி.டி.வைலா கூறியுள்ளார்.
(ஹிந்து நாளிதழ்: Mr. Vijay was on a campaign to allow Dalits in the temples in the Jaunsar-Bawarregion. However, locals said that while Dalits were allowed in the Silgur Devta temple, Mr. Kunwarinstigatedthe mob outside, which led to a scuffle between the villagers and the MP.
“What exactly happened remains unclear, but it is not a case of Dalits not being allowed in the temple. Had that been the case, the MP and Mr. Kunwar would not have been allowed into the temple. But they were attacked after they visited the temple,” DehradunSuperintendent of Police (Rural) T.D. Waila told The Hindu dt May 21, 2016.]
இந்தியாவில் மொழி சமத்துவம் வேண்டும் அந்தந்த மாநில மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், தமிழ்மொழி தேசியமொழியாக அறிவிக்க வேண்டும் என்றுகூறும் தருண் விஜய் .
ஆகஸ்டு23, 2011 ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ இதழில் இவர் எழுதியவை, இந்திய நாடாளுமன்றத்திலும் இவர் பேசியவை;
‘சமஸ்கிருதம் தான் நாம். சமஸ்கிருதம் தான் இந்தியா. சமஸ்கிருதம் தான் தெற்கில் இருந்து வடக்கிற்கு, மேற்கில்இருந்து கிழக்கிற்கு இந்தியாவை ஒன்றாய் இணைக்கும் அபாரமான சக்தி. ‘உயர்பதவிகளுக்கும் உயர்ந்த சமூக அந்தஸ்து பெறுவதற்கும் ஒரு வழி முறையாக சமஸ்கிருதஅறிவு இருக்க வேண்டும்” சமஸ்கிரதம் இந்திய மொழிகளின் தாய்மொழி. பள்ளிகளில் சமஸ்கிரதம்கற்றுக் கொடுக்க வேண்டும் என்று கூறினார்.
நாடாளுமன்றத்தில் சமஸ்கிரதமொழியில்தான் இவர் பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டார் என்பது குறிப்பிடதக்கது.
அவரின் சமஸ்கிரத பேச்சு என்பது R.S.S-ன்குரல் அதனைத்தான் இன்று ஆளும் B.J.P அரசு செயல்படுத்துகிறது.
ஒரு பக்கம் ஆளும் B.J.P சமஸ்கிரதத்தையும், இந்தியையும் திணிக்கிறது. ஆனால் மறுபக்கம் தருண் விஜய் மாநிலமொழி முக்கியத்துவம் பற்றி பேசுகிறார். இங்கு குறிப்பிட்டு பார்க்கவேண்டியவை எந்த எந்த மாநிலங்களில் R.S.S-ம் B.J.P-யும் வலுவாக இல்லையே, ஆளும்கட்சியாக இல்லையோ அங்குதான் அந்த அந்தமாநிலத்திற்கு ஏற்ப தருண் விஜய் தன்னுடைய செயல்பாடுகள் மற்றும் பேச்சுகளை அமைத்துக்கொண்டு வருகிறார்.
அப்படியென்றால் தருண் விஜய் பேசுவதெல்லாம் வெறும் திட்டமிட்ட நாடகம் என்று பொருள் கிடையாது. அவர் செய்ல்படுத்து எல்லாம் திட்டமிட்ட செயல்திட்டம். அவர் எழுப்பும் பிரச்சினையால் எந்தவித பலனும் அந்த மக்களுக்கு ஏற்படாது. ஆனால் R.S.S-க்கும் B.J.P-க்கும் மக்களிடையே விளம்பரம் கிடைக்கும். அதுதான் அவர்களின் செயல்திட்டம். விளம்பரத்தால் மட்டுமே வெற்றியை பெற்ற மகத்தான வெற்றியாளர்கள் அவர்கள். அதற்காக அவர்கள் சில நேரங்களில் அடிதடியைக்கூட வாங்கிக்கொள்வார்கள். அவைகள் எல்லாம் மதபிரச்சாரத்தில் விரும்பி ஏற்றுக்கொள்கிற ஒன்றாகும். (இது எல்லாமதத்திற்கும் பொருந்தும்).
திருக்குறள் நூலை குழந்தைகளுக்கு பரிசளிக்கவேண்டும் என்ற ஒருவரின் கேள்விக்கு பதில்அளிக்கையில் சிங்கப்பூரில் திபாவளிகொண்டாடும் போது அந்த விளம்பரங்களில் திருவள்ளுவர் படம் போட்டு விளம்பரப்படுத்துங்கள் என்றும், அப்போது சிங்கப்பூர் பிரதமரை விட்டு திருக்குறள் நூலை குழந்தைகளுக்கு பரிசளிக்க சொல்லுங்கள் என்று யோசனை கூறினார். இது எல்லாம் திட்டமிட்ட செயல் கிடையாது. ஆனால் அவர்கள் சிந்திக்கும் எந்த ஒருசெயலும், பதிலும் மதத்தை பற்றியே இருக்கும். திருக்குறளுக்கும் தீபாவளிக்கும் எந்த ஒருசம்பந்தமும் கிடையாது. தீபாவளி இந்து மதபண்டிகை.
தமிழர் திருநாள் பொங்கல் விழா விளம்பரத்தில்திருவள்ளுவர் படம் போட்டால் அது சரியாக இருக்கும்.
பொங்கல் விழாவை திருவள்ளுவர் தினமாகவும் தமிழக அரசால் அழைக்கப்படுகிறது. பொங்கல்விழா மதசார்பற்ற விழா அதனால்தான் தமிழர் திருநாளாக கொண்டாடுகிறார்கள்.
இக்கட்டுரை தருண் விஜய்யை பற்றியோ, R.S.S, B.J.P-யை பற்றியோ குறைக்கூற வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதவில்லை. தருண் விஜயுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் அவர் கூறியகருத்துக்கும் அதற்கு முன்பு அவர் பேசியகருத்துக்கும் ஒன்றுக்கொன்று முரண்பாடுஉள்ளதை பகிர்ந்து கொள்வதே.
தருண் விஜய்யின் இந்த திடிர் திருவள்ளுவர் பாசம் என்பது தமிழர்களை பெருமைபடுத்தி பாராட்டிபுகழ்ந்து பேசி R.S.S, B.J.P யை தமிழநாட்டில் விளம்பரப்படுத்துவதே! இந்துத்துவா கொள்கையை வலுப்படுத்தும் செயலே! இதுதேர்தலுக்காக மட்டும் செயல்படுத்துகிறசெயல்திட்டம் கிடையாது. அதனை கருத்தில்கொண்டு எச்சரிக்கையுடன் விழிப்புடன் இருப்போம்!
- க.பூபாலன், சிங்கப்பூர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக