ஞாயிறு, 18 செப்டம்பர், 2016

பெங்களூரு பேருந்துகள் கொழுத்திய பாக்யஸ்ரீ கைது....பின்னணியில் எந்த அமைப்பு?.

பெங்களூர்: காவிரிக்காக பெங்களூரில் நடந்த கலவரத்தின்போது கே.பி.என்
டிராவல்சுக்கு சொந்தமான பஸ்களை எரித்த பெண் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக பெங்களூரில் கடந்த 12ம் தேதி, திங்கள்கிழமை நடைபெற்ற வன்முறையின்போது, பெங்களூர், ராஜராஜேஸ்வரி நகர காவல் எல்லைக்கு உட்பட்ட, டிசோசா நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கேபிஎன் டிராவல்ஸ் நிறுவனத்தின் 42 பஸ்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.
தீ வைப்பு சம்பவம் மாலை 4 மணியிலிருந்து 4.30க்குள் நடந்துள்ளது. 22 டிரைவர்களும், 2 கிளீனர்களும், ஸ்லீப்பர் கோச் பஸ்களுக்குள் படுத்து தூங்கிக்கொண்டிருந்தனர். இரவில் பணியாற்ற வேண்டும் என்பதால் அவர்கள் அயர்ந்து தூங்கியுள்ளனர்.

தப்பியோடிய டிரைவர்கள்

பஸ் மீது பெட்ரோல், டீசல் ஊற்றப்படுவது தெரியவந்ததும், பஸ்சுக்குள் படுத்து ஓய்வெடுத்துக்கொண்டிருந்த டிரைவர்கள் சமயோஜிதமாக வெளியே தப்பியோடிவிட்டனர். இதனால் அவர்கள் உயிர் தப்பினர். இதுதொடர்பாக 7 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். இந்த இளைஞர்கள் போலீசில் அளித்த வாக்குமூலம் அடிப்படையில், கலவர பின்னணியில் ஒரு பெண் இருந்தது தெரியவந்தது.

சிசிடிவி காட்சிகள்

சிசிடிவி காட்சிகளை போட்டு பார்த்த போலீசாரும் அதிர்ச்சியடைந்தனர். இளம் பெண் ஒருவர் பெட்ரோல், டீசலை சப்ளை செய்து பஸ்களை கொளுத்த உதவியது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியிருந்தது. இதையடுத்து அந்த ஏரியாவில் கலவர பெண்ணை தேடி அலைந்தது போலீஸ். விசாரணையில், அருகேயுள்ள யசோதாநகர் பகுதியை சேர்ந்த பாக்யஸ்ரீ என்ற 22 வயது பெண்தான், கலவரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

கூலி தொழிலாளி

வட கர்நாடகாவின் யாதகிரி மாவட்டத்தை சேர்ந்த அந்த பெண் தனது தாய், தந்தையோடு, 2 வருடங்கள் முன்பாக பிழைப்பு தேடி பெங்களூர் வந்துள்ளார். இங்கு குடும்பமே கூலி வேலை செய்துதான் பிழைப்பு நடத்திக்கொண்டிருந்தது. சம்பவத்தன்று, டிவியில் தமிழகத்துக்கு எதிராக போராட்டம் நடைபெறும் செய்தியை பார்த்தாராம். அப்போது சில வாலிபர்கள் அங்கு கன்னட கொடியை பிடித்து வருவதை பார்த்து, அருகேதான் தமிழகத்தை சேர்ந்த கேபிஎன் நிறுவன பஸ்கள் நின்கின்றன... கொளுத்தலாம் என வாலிபர்களை தூண்டினாராம்,. பிறகு அவர்களோடு சேர்ந்து கொளுத்தினாராம். வாக்குமூலத்தில் இவ்வாறு பாக்யஸ்ரீ தெரிவித்துள்ளார்.

காரணம் என்ன?

கர்நாடகா மீதான அபிமானத்தால் இவ்வாறு செய்ததாக பாக்யஸ்ரீ கூறியிருந்தாலும், அவரை யாராவது தூண்டியிருக்கலாமா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. பாக்யஸ்ரீ மீது கொலை முயற்சி உட்பட பல்வேறு வழக்குகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதால் ஜாமீன் கிடைக்கவே 6 மாதங்களாவது ஆகும் என்று தெரிகிறது.

முதல்வரிடம் மனு

இதுகுறித்து கே.பி.என் உரிமையாளர் நடராஜன் கூறுகையில், கைது செய்யப்பட்ட பெண்தான், கலவரக்காரர்களை தூண்டிவிட்டு முன்னின்று தீ வைப்பை நிகழ்த்தினார் என்று, சம்பவ இடத்தில் இருந்த எங்கள் டிராவல்ஸ் டிரைவர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர் என்றார். பஸ்சை எரித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விரைவில் முதல்வர் சித்தராமையாவிடம் மனு அளிக்க உள்ளதாகவும் நடராஜன் தெரிவித்துள்ளார்  tamiloneindia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக