வியாழன், 15 செப்டம்பர், 2016

விழுப்புரம் திமுக நகர செயலாளர் செல்வராஜ் வெட்டிக்கொலை


விழுப்புரத்தில் இன்று காலை திமுக நகர செயலாளர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் கே.கே.ரோட்டில் கணபதி குடியிருப்பு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வரும் செல்வராஜ் (43), விழுப்புரம் நகர திமுக நகர செயலாளராகவும் மாவட்ட தளபதி மன்ற செயலாளராகவும் இருந்து வந்தார். ரியல்எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார்.
தினமும் நடைபயிற்சி செல்லும் செல்வராஜ், இன்று காலை விழுப்புரம் காந்தி சிலை அருகே உள்ள திமுக கட்சி அலுவலகம் அருகே தனது காரை நிறுத்திவிட்டு அங்கிருந்து விழுப்புரம் வடக்கு ரயில்வே குடியிருப்பு பகுதியில் நடைபயிற்சி (வாக்கிங்) சென்றார். அவருடன் செந்தில், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட 5 திமுக தொண்டர்களும் சென்றனர்.
அப்போது, 2 மோட்டார் சைக்கிளில் வந்த 5 வாலிபர்கள் ரயில்வே மருத்துவமனை அருகே செல்வராஜை மறித்து தங்களது முதுகின் பின்னால் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சராமாரியாக வெட்டியது. ரத்த வெள்ளத்தில் சாய்ந்த செல்வராஜ் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தடுக்க முயன்ற செல்வராஜியின் நண்பர்களையும் அந்த கும்பல் வெட்டியது. இதில் ஜெயப்பிரகாஷ் என்பவருக்கு கையில் காயம் ஏற்பட்டது.
கொலை செய்யப்பட்ட செல்வராஜூக்கு ஜெயபாரதி(38) என்ற மனைவியும், விக்னேஷ் என்ற மகனும் உள்ளனர்.
செல்வராஜை கொலை செய்த கொலையாளிகளை பிடிக்க போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
செல்வராஜ் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து விழுப்புரத்தில் பதற்றம் நிலவி வருகிறது.
விழுப்புரம் புதிய பஸ்நிலையம், பழைய பஸ்நிலையம், வடக்கு ரயில்வே குடியிருப்பு பகுதிகளில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கொலையுண்ட செல்வராஜ் திமுக ஆட்சியின் போது உயர்கல்வி அமைச்சர் பொன்முடியின் தனி உதவியாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது  தினமணி.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக