சனி, 17 செப்டம்பர், 2016

பெரியாரை நாம் ஏன் படிக்க வேண்டும்?.. பெண்கள் வாசிக்க வேண்டும்!

thetimestamil.com : ராஜராஜன்: பெரியாரை எந்த அளவுக்கு நாம் புரிந்து வைத்து
இருக்கிறோம் என்ற கேள்வி நேற்று முழுவதும் என்னுள் இருந்தது. பெரியார் வெறும் கடவுள் மறுப்பாளரா? கடவுள் மீது தீவிர பக்தியுள்ளவர்கள் அனைவருமே பெரியாரை வெறுப்பவர்களா? பெரியாரை வெறுக்க பல காரணங்கள் இருக்கலாம்… பிடிக்க சில காரணங்களே போதும். கமல் ஒரு பேட்டியில் சொல்லியிருப்பார்.. தமிழை எல்லாம் படிக்க சொல்லி கட்டாயபடுத்த வேண்டாம். ஒரு முறை “தமிழ்க்கொக்கி” விழுந்து விட்டால் அது நம்மை விட்டு போகாது என்று கூறி இருப்பார். அதே போன்றது தான் பெரியாரின் கொக்கியும். இந்த வெண்தாடி வேந்தரின் கொச்சை மொழியும்,
எளிய கருத்தும்.. நம்மை எளிதாக கவரக்கூடியது. அவை நம்முள் எழுப்பும் கேள்விகள்.. உள்ளுக்குள்ளே எதிரொளித்துக்கொண்டே இருக்கக்கூடியவை!"
பெரியாரை யார் படிக்கிறார்கள்? தீவிரமான ஆத்திக குடும்பம் என்றால்.. பெரியார் அந்த வீட்டிற்குள் 99% இருக்க மாட்டார். பகுத்தறிவை பேசும் குடும்பங்களும், இறை மறுப்பு குடும்பங்களும், பொதுவுடைமை பேசும் குடும்பங்களும் பெரியாரை படித்திருக்க வாய்ப்புகள் அதிகம்.. இன்னும் சில குடும்பங்கள் இருக்கிறது.. அவை கடவுள் மறுப்பை பேசாது.. ஆத்திக குடும்பங்களாக தான் இருக்கும்.. ஆனால், சுயமாய் யோசிக்கும் சுதந்திரத்தை அவை கொடுத்து இருக்கும். அவ்வகை குடும்பங்களில் இருந்து வரும் பிள்ளைகள்.. பிற்காலத்தில் ஏதேனும் ஒரு வகையில் பெரியாரின் பால் ஈர்க்கப்பட வாய்ப்புகள் உண்டு. நான் இந்த கடைசி வகை குடும்பத்தை சேர்ந்தவன் தான்!
என் அப்பாவோ, அம்மாவோ என்னிடம் பெரியாரை பற்றி பேசியதாக நினைவில் இல்லை. ஆனால், அவர்கள் என் தேடலுக்கு குறுக்கே நிற்காத காரணத்தால்…நானே பெரியாரை கண்டடைந்தேன்.
பெரியாரை இவ்வளவு தூக்கி வைத்து பேசுகிறாயே..அவரை படித்ததாக பீற்றிக்கொள்கிறாயே.. உன்னால் ஒரு பெரியாரியவாதி என்று சொல்லிக்கொள்ள முடியுமா என்று நீங்கள் கேட்பீர்களானால்.. என் பதில் “என்னால் முடியாது” என்பது தான்!
நான் நாத்திகன் அல்ல, சாதி மறுப்பு திருமணம் செய்யவில்லை, பெண்ணுரிமை பேசுவதெல்லாம் பெரும்பாலும் ஏட்டளவில் தான் இருக்கிறது.. பெரியாரியம் பேசுவது எளிது.. கடைப்பிடிப்பது மிக கடினம் என்பதை உணர்ந்து இருக்கிறேன்!
இந்த “கடைப்பிடித்ததில்” சிலர் தவறியதால் தான் பெரியாரியம் தோற்றதாக ஒரு தோரணை இருக்கிறது!
இறைமறுப்பு என்பது எளிது என்பதால்.. பலர் அதை கடைப்பிடிக்கின்றனர். அது நம்பிக்கை சார்ந்தது, அந்தரங்கமானது என்பதால் பெரிதாக ஒன்றும் சொல்வதற்கு இல்லை. அடுத்த பெரியாரிய கொள்கை சாதி மறுப்பு.. பலர் சறுக்குவது இங்கே தான்.. நம் ரத்தத்தில் ஊறிய ஒரு விசயத்தை முற்றிலும் விடுவதென்பது அவ்வளவு எளிதல்ல..பெரியாரியம் பேசி.. உள்ளுக்குள் சுய சாதி பற்றுடன் இருப்பவர்கள் பலரை நான் அறிவேன். சுய சாதி பற்றுடன் அது நின்றுவிட்டால் கூட நல்லது.. பிற சாதி வெறுப்பிற்கு அது செல்லுமானால்..நீங்கள் பெரியாரியத்தை விட்டு நகர்ந்துவிடுவது நல்லது!
பெரியாரியத்தில், அடுத்த முக்கியமான கொள்கை.. பெண்ணுரிமை.. பெரும்பாலும், பெண்கள் பெரியாரை இன்னும் படிக்கவே இல்லை என்பது வேதனை. (என் வீட்டம்மா.. நேற்று வாட்சாபில் பெரியாரின் போட்டோவை பார்த்து ரொம்ப நேரம் யாரென்று யோசித்ததாக சொன்னார்!)
பெரியாரியம் பேசும் ஆண்கள், எத்தனை பேர், தங்கள் வீட்டு பெண்களுக்கு பெரியாரை அறிமுகம் செய்து வைத்திருக்கிறீர்கள்? நம் அப்பா, தாத்தா காலம் போலவே.. ஐயோ.அபசாரம் என்று பெரியாரை இன்னமும் வீட்டுக்குள் விடாமல் வைத்திருப்பது நல்லதா?
ஆண்கள் பெரியாரை படிப்பதை விட, பெண்கள் வாசிக்க வேண்டும். அவர்கள் படிக்காதவரை, பெண்ணுரிமை என்பது ஏட்டளவில் தான் இருக்கும். அடுத்து, பெரியாரை வாசித்த எத்தனை ஆண்கள், தங்கள் மனைவிகளை சரிசமமாக நடத்துகிறார்கள்? பாலின பாகுபாடு என்பது காலம் காலமாக உலகில் இருந்து வருவது தான். ஆனால், நம் ஊரில் இது “அங்கிகரிக்கப்பட்ட” ஒன்றாக இருப்பது தான் வேதனை.
சரி, பெரியாரின் மீது விமர்சனங்களே வைக்க கூடாதா? அவரென்ன கடவுளா? அவர் தன்னுடன் சிறிய வயது பெண்ணை திருமணம் செய்துக்கொண்ட பெண் பித்தர் தானே..? அவர் ஒரு கன்னட வந்தேறி தானே? ஏன் இந்துக்களை மட்டும் எதிர்த்தார்? இப்படியான கேள்விகளை இந்த பதிவுக்கு பின்னூட்டமாக இட நீங்கள் யோசித்தால்.. தயவு செய்து.. பெரியாரை படித்துவிட்டு வந்து பேசுங்கள்/திட்டுங்கள்… கடவுளை கண்மூடித்தனமாக நம்புவது போல..பெரியாரை கண்மூடி தனமாக ஒதுக்காதீர்கள்!
சரி.. அப்படி நான் பெரியாரை படித்து தான் ஆகவேண்டும் என்று கட்டாயமா?
இல்லை.. நீங்கள் பெரியாரை தான் படிக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை.
பெரியார் ஒன்றும் இதுவரை யாரும் சொல்லாத விசயத்தை சொல்லவில்லை. பல மேல்நாட்டு மேதைகள்/ அறிஞர்கள் சொன்னதை தான் நம் ஊருக்கு ஏற்றவாறு சொல்லி இருக்கிறார்!
பிறப்பால் அனைவரும் சமம் என்பது வள்ளுவன் வாக்கு. இதில் நம்பிக்கை கொண்டோர்.. ஏதேனும் ஒரு வழியில் சமத்துவத்தை நோக்கியும்.. ஒடுக்கபட்டோரின் மேம்பாட்டிற்கும் குரல் கொடுப்பார்கள். அப்படி குரல் கொடுப்பதற்கு.. பெரியாரியம் நேரிடையாகவோ, மறைமுகமாகவோ பின்னால் நிற்கும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக