வெள்ளி, 2 செப்டம்பர், 2016

முதல்வரின் பேச்சுக்கு சட்டசபையில் திமுக கண்டனம்

சட்டசபையில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பொதுத்துறை மாநில சட்டமன்ற மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசினார். காவல்துறை வீட்டு வசதிக்காக ரூ.422 கோடியில் 2623 வீடுகள் கட்டப்படும் என்று கடந்த 2016-17-ம் ஆண்டு கொள்கை விளக்கக் குறிப்பில் கூறப்பட்டிருந்தது. அதுபோல காவல்துறை அதிகாரிகளுக்கு ‘‘உங்கள் சொந்த இல்லம்’’ திட்டத்தின் கீழ் போலீஸ் துணை சூப்பிரண்டுகள் மற்றும் தீயணைப்பு கோட்ட அலுவலர்கள் பதவியில் இருப் பவர்களுக்காக மாவட்ட தலைநகரங்களில் தலா 10 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்து வீடுகள் கட்டித்தரப்படும் என்று 3.5.2012 அன்று முதல்-அமைச்சர் கூறி இருந்தார். இதில் சென்னை மேல கோட்டையூர் தவிர மற்ற 31 மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதா? என்று பேசியபோது, முதலமைச்சர் ஜெயலலிதா குறுக்கிட்டு, எதிர்க்கட்சித் தலைவருக்கு காவலர்களுக்கு வீட்டு வசதி செய்து கொடுப்பது பற்றி திடீரென்று அக்கறையும் கவலையும் வந்திருக்கிறது.


காவலர்களுக்கு, காவல் துறையினருக்கு வீட்டு வசதி செய்து கொடுப்பது குறித்து யார் வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம். ஆனால் தி.மு.க.வினர் கேள்வி கேட்கக்கூடாது. அதைக் கேட்பதற்கான அருகதை தி.மு.க.வினருக்கு இல்லை. ஏன் என்று சொல்கிறேன் கேளுங்கள். காரணம் இல்லாமல் எதையும் சொல்ல மாட்டேன். நான் சொல்கிறேன். பொறுமையாக கேளுங்கள்.

(குறுக்கீடுகள்) நான் இன்னும் சொல்லி முடிக்கவில்லையே. காவல் துறையினருக்கு வீடுகள் கட்டிக்கொடுப்பதற்காக என்று புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., 1980 ஆம் ஆண்டு காவல் துறை வீட்டு வசதிக்கழகம் என்ற ஒரு அமைப்பினை ஏற்படுத்தினார். அவர்தான் அந்தத் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதன் பின்னர் 1989 ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபொழுது, முதல் வேலையாக அந்தக் காவல் துறை வீட்டு வசதிக்கழகத்தை கலைத்து இழுத்து மூடினார். அதன் பின்னர் 1991 ஆம் ஆண்டில் நான் முதலமைச்சராக பதவி ஏற்றபின்னர் காவல் துறை வீட்டு வசதிக் கழகத்தை மீண்டும் துவக்கினேன்.

அதன் பின்னர் ஆயிரக்கணக்கில் காவல் துறையினருக்கு வீடுகளை கட்டிக் கொடுத்திருக்கிறோம். அந்த விவரங்கள் எல்லாம் ஏற்கனவே வெளியிடப்பட்ட கொள்கை விளக்கக் குறிப்பில் தரப்பட்டிருக்கிறது.
அதற்கு நான் மீண்டும் நேரத்தை எடுத்துக்கொள்ள விரும்பவில்லை. ஆனால், காவல் துறையினருக்காவே பிரத்யேகமாகத் தொடங்கப்பட்ட காவல்துறை வீட்டு வசதிக் கழகத்தை கலைத்து இழுத்து மூடிய தி.மு.க.வினர் இதைப்பற்றி கேள்வி கேட்க அருகதை இல்லை என்று அதனால்தான் சொல்கிறேன் என்று கூறினார்.
தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர். ஒட்டுமொத்தமாக எழுந்து அருகதை இல்லை என்று சொன்னதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பதிலுக்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் எழுந்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சட்ட சபையில் கடும் கூச்சல் அமளி ஏற்பட்டது. நக்கீரன்,இன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக