வியாழன், 29 செப்டம்பர், 2016

மாதவிடாய் நாட்களில் விடுமுறை வேண்டும்! போத்தீஸ் ,சரவணாஸ் , ஜெயச்சந்திரனில் பணிபுரியும் பெண்கள் பாவம் .....

நிலவுமொழி செந்தாமரை :  /thetimestamil.com : மாதவிடாயின் அதீத உதிரப்போக்கு ஒரு பெருங்கொடுமை மட்டுமின்றி அருவருப்பான விஷயமும் கூட. வெளியில் செல்லவும் முடியாது. திடீர் திடீரென கட்டி கட்டிய இரத்தம் வெளியேறி, உடைகளில் கறைபடிந்து எல்லோர் முன்னிலையும் நிற்க வேண்டி வரும். காலத்திற்குமான அவமானமாய் பெண்கள் இதனை கருதுகின்றனர்.
சாதரண உதிரப்போக்கு வயிற்றுவலி, கைகால் வலி என சோர்வில் துவண்டு போவார்கள். அதீத உதிரப்போக்கிற்கு வலிகளும் சோர்வும் பின்னி எடுத்துவிடும். இப்பெண்கள் மாதவிடாயின் பொழுது முடிந்த அளவு விடுமுறை எடுத்து வீட்டிலேயே இருந்துவிடுவார்கள். பயணம் செய்வதோ அல்லது பணி செய்வது மிகச் சிரமம். தொடர்ச்சியாக பேட் மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். உயர்தர அலுவலங்களில் பணிபுரியும் பெண்களுக்கு ஓரளவு சாத்தியமென்றாலும், உடல் உழைப்பினை செலுத்துபவர்களுக்கு இது மிகக் கொடுமையான விஷயமும் கூட. (உ.ம்: சரவணா ஸ்டோர்ஸ் போன்ற கடைகளில் பணிபுரியும் பெண்கள்).
ஒருமுறை, மூன்றாவது நாள் தானே என்னும் அலட்சியத்துடன், விஷ்பர் எக்ஸ்ட்ரா லாங் புது பேட் உதவியுடன் செங்கல்பட்டிலிருந்து திருவள்ளூர் இரயிலில் கிளம்பினேன்.
சட்டக்கல்லூரி நண்பர்களுடன் கிளம்பியதால், பொதுப்பெட்டியில் ஏறினேன். கம்பார்ட்மெண்ட் முழுவதும் எங்கள் அரட்டை குரல் எதிரொளித்தது. ஒவ்வொருவராய் இறங்கினர். ஆவடியில் கடைசி நண்பனும் இறங்க, ஒருவித நசநசப்பினை உணரத்தொடங்கினேன். கழிப்பறை வசதி இல்லாத இரயில் அது. மூச்சுமுட்டுமளவு கூட்டம். சுற்றிலும் ஆண்கள். நான் இறங்க எத்தனிப்பதை கண்டு, அடிச்சு பிடிச்சு சீட்டுக்காக சிலர் நெருங்கி தள்ளினர். எழுந்தவுடன் எல்லோர் முகத்திலும் ஒரு அருவெருப்பு. சீட் முழுவதும் இரத்தமாய்.. எனது வெள்ளைச் சீருடை முழுவதும் இரத்தம்.. பையில் இருந்த அக்காவின் சுடிதார் பேண்ட்டினை எடுத்து சீட்டை துடைத்து, டாப்ஸை எடுத்து எனது ஆடையின் மீதே அப்படியே மாற்றிக்கொண்டு நகர்ந்தேன். நீதிமன்றத்தில் நீதிபதிகளுக்கு வழிவிட்டு ஓரமாய் ஒடுங்கி நிற்கும் மனிதர்களினைப்போல், அக்கூட்டத்திலும் அவர்கள் எனக்கு இராஜ உபசரிப்பினை அளித்தார்கள். இறங்கி ஆட்டோ பிடித்து வீடடைந்தேன்.
ஆனால், பெண்கள் பலரும் கூட இந்த அதீத உதிரப்போக்கின் அருவெருப்பினை அறியமாட்டார்கள். மாசம் 300ரூவா பேட் வாங்கியே செலவழிச்சா, கல்யாணமாகி எப்படித்தான் குடும்பம் நடத்துவியோ? என என்னை கேட்டவர்கள் அதிகம். மாதவிடாயின் பொழுது நான் அழாத நாட்களே இல்லை. என் கர்பப்பையினை நீக்கிவிடுங்கள்; எனக்கு வேண்டாம் என புரண்டு புரண்டு அழுவேன். அதை நீக்கினால், இன்னும் வலிமை குறைந்துவிடும் உனக்கு என்பார்கள். மாதாமாதம் என் மாமியிடம் மாத்திரை கேட்டு அழுவேன். மாமி அரசாங்கத்தில் பணிபுரியும் செவிலியர். எனவே, மாத்திரை அதிகம் கொடுக்கமாட்டார். அதுவும் டிவி சீரியலிலெல்லாம் காண்பிப்பார்களே, அந்த பச்சை நிற மாத்திரைக்கு தடை. வலி பொருக்காமல் கலங்கிய கண்களுடன், போதை மாத்திரைக்காக ஏங்கி நிற்கும் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருத்தியுன் முகத்துடன் நிற்பேன். மாத்திரை போட்டு தூங்கி எழுவேன். “பிள்ளை பெத்தவ போல கிடக்காளே”என்பார் எல்லோரும். Game of Thrones சீரியலில் சான்சாவிற்கு முதல் தடவை மாதவிடாய் வந்ததும், செர்செய் சொல்லுவாள். நிறைய உதிரப்போக்கா? ஒரு குழந்தை பிறந்ததும் சரியாகிடும் என்பாள். அதுபோல், குழந்தை பிறப்பிற்கு பின்பு ஓரளவிற்கு சாதாரணமானது.
மாதவிடாய் அருவெருப்பு தான். இரத்தம் உரசும் தொடை இடுக்குகள்; அதிகம் நடந்தால் பேட் உரசி எரிச்சலெடுத்து, மன உளைச்சலுக்கு ஆளாக்கி, வலிகளையும் சோர்வையும் கொடுக்கும் மாதவிடாயை கொண்டாட முடியாது. குழந்தையை பெண்கள் தான் சுமக்கிறார்கள். அதன் பொருட்டே பெண்பிறப்பின் வலி இந்த மாதவிடாய். அதனால், மாதம் மூன்று நாட்கள் கண்டிப்பாய் பெண்களுக்கு விடுமுறை தேவை. சம்பளத்துடன் கூடிய விடுமுறை. முக்கியமாய் பள்ளி மாணவர்களுக்கு வருகை பதிவேட்டுடன் கூடிய விடுமுறை வேண்டும். விடுமுறை அளிக்க மறுக்கும் அதிகாரிகள் மீது ஒவ்வொரு அலுவலங்களிலும் உள்ள விசாகா கமிட்டி செயல்பட வேண்டும். அதற்கு, விசாகா கமிட்டி அரசு கட்டுப்பாட்டில் இயங்க வேண்டும்.
நாங்கள் விடுப்பு எடுக்கலாம், எடுக்காமலும் இருக்கலாம். அது எங்கள் உடல்நிலை பொறுத்தது. ஆனால், மாதம் மூன்று நாட்கள் விடுமுறை வேண்டும்; வருகை பதிவேட்டுடன் கூடிய விடுமுறை. அதுதான் பெண்களுக்கு இந்நாடு வழங்கும் நீதியும் ஜனநாயகமும் ஆகும்.
முகப்பில்: காமாக்கிய தேவி. அசாம் மக்கள் வழிபடும் ஒரு பெண் தெய்வம்; மாதவிடாய் கடவுள் என அழைக்கிறார்கள்.
நிலவுமொழி செந்தாமரை, வழக்கறிஞர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக