வெள்ளி, 9 செப்டம்பர், 2016

வட கொரியா அணு ஆயுத சோதனை.. ஹிரோஷிமா குண்டைவிட பயங்கரமானது !


மின்னம்பலம.காம்வட கொரியா ஐந்தாவது முறையாக அணு ஆயுத சோதனை நடத்தி பெருமிதத்தோடு மார்தட்டிக் கொண்டிருக்கிறது. ஆனால், உலக நாடுகள் வட கொரியாவின் இந்தச் செயலைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளன. வட கொரியாவில் அணு ஆயுத பரிசோதனை நடத்தப்பட்ட பகுதியில் 5.3 ரிக்டர் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. உலக நாடுகளின் கவனத்தை திசை திருப்பும் விதமாக அவ்வப்போது வட கொரிய இதுபோன்ற பயங்கர அணு ஆயுத சோதனையை நடத்தி வருகிறது. சில தினங்களுக்கு முன் ஜி-20 மாநாடு நடைபெற்றபோது வட கொரியா மூன்று பயங்கர ஏவுகணைகள் சோதனையை நடத்தியது. வட கொரியா மீண்டும் அணுகுண்டு சோதனை நடத்தி இருக்க வாய்ப்பு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளதால் தேசிய பாதுகாப்பு குழுவின் அவசர கூட்டத்தை தென் கொரியா கூட்டி உள்ளது. வட கொரியாவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதை அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் சீன நில அதிர்வு ஆய்வு கழகங்கள் உறுதி செய்துள்ளன.

வட கொரியா, கடந்த ஜனவரி மாதத்தில்தான் தனது நான்காவது அணுகுண்டு சோதனை நடத்தியது. இதன் காரணமாக ஐ.நா-வின் கடும் கண்டனத்துக்கு ஆளானது. இருப்பினும், தொடர்ச்சியாக பல ஏவுகணை சோதனைகளையும் தற்போது அணுகுண்டு சோதனையையும் வட கொரியா நடத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. சோதனை நடந்த இடத்துக்கு அருகில் அதிர்வு ஏற்பட்ட பிறகே ஊடகத்திடம், வட கொரிய தான் அணு ஆயுத சோதனை நடத்தியதை தெரிவித்தது. வட கொரியாவின் மாபெரும் அணு சோதனை இதுவாகத்தான் இருக்கும் என தென் கொரியா நம்புகிறது.
தென் கொரியாவின் தலைவர் பார்க் கூன் ஹை, இது பற்றிக் கருத்து தெரிவித்தபோது, ‘இது வடகொரியாவின் சுய அழிவுக்கான நடவடிக்கை மற்றும், இது வட கொரிய தலைவர் கிம் ஜோங்கின் வெறித்தனமான பொறுப்பின்மையை காட்டுகிறது’ எனவும் குறிப்பிட்டார்.
‘இது புதிதாக வடிவமைக்கப்பட்ட அணு ஆயுதத்துக்கான சோதனை எனவும், தற்போது பெரும் தொலைவுக்குச் செல்லக்கூடிய அணு ஆயுதத்தை தங்களால் ஏவ முடியும்’ என்றும் வட கொரியா கர்வத்தோடு தெரிவித்துள்ளது. வட கொரியா, தேசிய அளவில் முக்கிய தினங்களில் அதன் இராணுவப்பலத்தை காட்டுவது வழக்கம். வெள்ளி அன்று, தற்போதைய அரசு நிறுவப்பட்ட தினம். அதைக் கொண்டாடப்படும் வேளையில், இந்த அணு ஆயுதச் சோதனை நடத்தப்பட்டது கவனிக்கத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக