வியாழன், 8 செப்டம்பர், 2016

62 தமிழக மீனவர்கள் வழிதவறி... சவுதியில் சிறை.. கொத்தடிமைகளாக.. மதுரை நீதிமன்றம் தமிழக அரசுக்கு கடும் கண்டனம்

நீதிபதி, ‘ஆறு மாதங்களாக மீனவர்கள் துன்பப்படும் நிலையில் புறாவின் காலில் கடிதம் கட்டி அனுப்பியிருக்கிறீர்களா?
குமரி, ராமநாதபுரம், திருநெல்வேலி, தஞ்சை மாவட்டங்களைச் சார்ந்த 62 மீனவர்கள் மீன்பிடித் தொழிலுக்காகச் சென்று கொத்தடிமைகளாக சவுதியில் சிறைப்பட்டுள்ளனர். இவர்களை மீட்கக் கோரி மீனவர்களின் குடும்பத்தினர் ஆட்கொணர்வு மனுவை மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணையின்போது தமிழக அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க வேண்டும் என்று அரசு வழக்கறிஞருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனிடையே நேற்று இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது. அப்போது சவுதி அரேபியாவின் சட்ட விதிமுறைகள் சிக்கலாக உள்ளதால் கால அவகாசம் தேவைப்படுவதாக மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதனை ஏற்ற நீதிபதிகள் ஒருவாரம் அவகாசம் அளித்து உத்தரவிட்டனர். இந்த வழக்கில் மீன்வளத்துறை சார்பில் ஆஜரான ராமநாதபுர மாவட்ட மீன்வளத்துறை துணை இயக்குநர், தான் இதுகுறித்து சென்னையில் உள்ள மீன்வளத்துறை செயலாளருக்குக் கடிதம் எழுதியிருப்பதாக கூறினார். இதில் அதிருப்தி அடைந்த நீதிபதி, ‘ஆறு மாதங்களாக மீனவர்கள் துன்பப்படும் நிலையில் புறாவின் காலில் கடிதம் கட்டி அனுப்பியிருக்கிறீர்களா? மீனவர்களை மீட்க வேறு வழிகளே இல்லையா?’ என்று கேள்வி எழுப்பினர். பின்னர் ‘மத்திய அரசு வழக்கறிஞரிடம் மீனவர்களை மீட்பது தொடர்பாக தமிழக அரசிடமிருந்து அழுத்தம் வந்ததா?’ என்றும் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த மத்திய அரசு வழக்கறிஞர், இந்த நீதிமன்றத்தை தவிர வேறு எங்கிருந்தும் தங்களுக்கு அழுத்தம் வரவில்லை என்றார். இதையடுத்து ‘தமிழக அரசிடம் உரிய விளக்கம் பெற்று செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் தகவல் தெரிவிக்க வேண்டும்’ என்று தமிழக அரசு வழக்கறிஞருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.  minnambalam.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக