சனி, 24 செப்டம்பர், 2016

முதல்வர் ஜெயலலிதா.. சர்க்கரையின் அளவு 510.. முறையீரல் தொற்று..

மின்னம்பலம்.காம் :அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதா வீடு திரும்புவதில் புதிய சிக்கல் உருவாகி இருக்கிறது. நேற்று இரவு போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் மூச்சுத்திணறலாகி மயக்கமாகி இருக்கிறார் ஜெயலலிதா. அதன் பிறகே அப்பல்லோ மருத்துவமனை ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, ஜெயலலிதாவை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு போனார்கள். அங்கே போனதும் பரிசோதனையில் மூச்சுத் திணறலுக்கு காரணம் நுரையீரலில் தொற்று இருப்பதுதான் என்பதை கண்டு பிடித்தனர்.
அவரது சர்க்கரையின் அளவும் பரிசோதனை செய்யப்பட்டது.சர்க்கரையின் அளவு 510 இருந்ததைக் கண்டுபிடித்தனர்.உடனடியாக சர்க்கரை அளவை குறைக்க அவருக்கு மருந்துகள் செலுத்தப்பட்டது. மூச்சுத் திணறல் ஏற்படாமல் இருக்க செயற்கை சுவாசமும் செலுத்தப்பட்டது. நுரையீரல் தொற்றுக்கான சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டு வந்தது.இன்று மாலையில் இருந்து ஜெயலலிதாவின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் வீட்டுக்கு செல்ல வேண்டும் என சொல்ல ஆரம்பித்துவிட்டார்.

ஆனால் மருத்துவர்களோ, ‘இந்த சூழ்நிலையில் நீங்கள் எங்கள் கண்காணிப்பில் இருப்பதுதான் சரியாக இருக்கும்!’ என்று சொல்லி வீட்டுக்கு அனுப்ப மறுத்துவிட்டதாக சொல்கிறார்கள். ‘எங்களுக்கு உங்கள் உடல்நிலைதான் முக்கியம் அக்கா... சரி பண்ணிட்டே வீட்டுக்குப் போகலாம். நாங்க எல்லோரும் உங்களோடுதான் இருக்கோம்!’ என்று சொல்லி சசிகலாதான் ஜெயலலிதாவை சமாதானப்படுத்தியதாக சொல்கிறார்கள். இன்னும் ஒருசில நாட்கள் அவர் மருத்துவமனையில் இருக்க வேண்டியது கட்டாயம் என மருத்துவர்கள் சொல்கிறார்கள். இந்த சூழ்நிலையில் இன்று காலை இளவரசியும் மருத்துவமனைக்கு வந்துவிட்டார். சசிகலாவும், இளவரசியும் மட்டுமே ஜெயலலிதாவுடன் தங்கியிருக்கிறார்கள். ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டுள்ள இரண்டாவது தளத்துக்கு சென்று வர இளவரசியின் மகன் விவேக் மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று பிற்பகலில் தனது மனைவியுடன் மருத்துவமனைக்கு வந்து போயிருக்கிறார் விவேக்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக