வெள்ளி, 9 செப்டம்பர், 2016

கர்நாடகாவில் பதற்றம்- போக்குவரத்து 5-வது நாளாக முடக்கம்


மைசூருவில் டவுன் ஹால் சாலையில் நடந்த போராட்டம் | படம்: முரளி குமார்.

மைசூருவில் டவுன் ஹால் சாலையில் நடந்த போராட்டம் | படம்: முரளி குமார்.
காவிரி நீரை தமிழகத்துக்கு பகிர்ந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் நடைபெறும் பந்த் காரணமாக அங்கு இயல்பு நிலை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு, மைசூரு, ராம்நகர், காமராஜ் நகர் முடங்கியுள்ளது. தெற்கு கர்நாடகா முழுவதும் பாதிப்பு முழு வீச்சில் இருக்கிறது.
இதற்கிடையில் காவிரி நீர் பங்கீட்டு பிரச்சினை தொடர்பாக நாளை (சனிக்கிழமை) கர்நாடக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. இதற்கிடையில் காவிரி நீரை பங்கிட்டு கொள்ளும் மாநிலங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர் மோடிக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா வலியுறுத்தியுள்ளார்.

திரைத்துறையினர் எதிர்ப்பு:
கர்நாடகா மாநில திரைத் துறையினர் கர்நாடகா திரை சேம்பர் அருகே கண்டன போராட்டம் நடத்தினர். இதில் நடிகர் சிவராஜ்குமார், நடிகை ஸ்ருதி உடன் மற்ற தொழில்நுட்பக் கலைஞர்களும் பங்கேற்றனர்.
அப்போது நிருபர்களிடம் பேசிய சிவராஜ்குமார், "காவிரி பிரச்சினையில் கர்நாடக அரசு திறமையாக செயல்படவில்லை. இப்பிரச்சினையை சரியாக கையாளாதது நமது தவறு. இதில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை வசைபாடுவதால் மட்டும் நிலைமை சீரடையப் போவதில்லை" என்றார்.
விவசாயிகள் தற்கொலை முயற்சி:
மைசூருவில் 4 விவசாயிகள் காவிரி ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றனர். அவர்களை தீயணைப்புப் படையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். பெங்களூருவில் விவசாயி ஒருவர் கத்தியால் வயிற்றில் குத்தி தற்கொலைக்கு முயன்றார். அவரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கேஆர்எஸ் அணை அருகே பதற்றம்
கேஆர்எஸ் அணையை முற்றுகையிட முயன்ற போரட்டக்காரர்களை போலீஸார் தடுக்க முயன்றனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீஸார் லேசான தடியடி நடத்தினர். அப்போதும் நிலைமை சீராகாததால் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இயல்பு நிலை முடங்கியது:
பந்த் காரணமாக கர்நாடகாவில் பரவலாக பல்வேறு மாவட்டங்களிலும் வெள்ளிக்கிழமை இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மைசூரு, மண்டியா, பெங்களூரு போன்ற இடங்களில் பந்த் முழு வீச்சில் நடைபெறுகிறது.
தலைநகர் பெங்களூருவில் மட்டும் பாதுகாப்புக்காக 16,000 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கல்வி நிறுவனங்கள் இயங்கவில்லை. ஆசியாவில் மிகப்பெரிய ஐடி நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதியை முற்றுகையிட்ட கன்னட அமைப்பினர் நிறுவனங்களை மூடுமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீஸார் போராட்டக்காரர்களை கைது செய்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
விமான நிலையம் முற்றுகை:
பெங்களூரு சர்வதேச விமான நிலையம் முன்பு கன்னட ரக்சன வேதிகேயின் பெண்கள் அமைப்பினர் முற்றுகையால் பரபரப்பு ஏற்பட்டது. நூற்றுக்கணக்கான பெண்கள் கைது செய்யப்பட்டனர். விமான நிலையத்தில் இருந்து நகருக்குள் செல்ல டாக்ஸிகள் இயக்கப்படாததால் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. பயணிகள் அமர்வதற்காக கூடுதல் இருக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சிவமோகாவில் முழு ஆதரவு:
சிவமோகா பகுதியில் எப்போதுமே தமிழகத்துக்கு எதிரான முழு அடைப்புப் போராட்டங்களுக்கு பேராதரவு இருக்காது. ஆனால், இன்று சிவமோகா பகுதியில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள், கல்வி நிலையங்கள் எதுவும் திறக்கப்படவில்லை. நவ கர்நாடகா நிர்மாணா வேதிகே அமைப்பு சார்பில் அங்கு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
5-வது நாளாக பாதிப்பு:
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீரும் கபினி அணையில் இருந்து 5 ஆயிரம் கனஅடி நீரும் செவ்வாய் நள்ளிரவு காவிரியில் திறந்துவிடப்பட்டது. தண்ணீர் திறந்துவிடப்பட்ட நாள் முதல் இன்று வரை தொடர்ந்து 5-வது நாளாக மைசூரு - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முடங்கியுள்ளது. தமிழக - கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் தமிழகத்தில் இருந்து செல்லும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. தமிழக பதிவு எண் கொண்ட வாகனங்கள் குல்பர்கா, பிஜாபூர், மண்டியா, மைசூரு பகுதியில் தாக்குதலுக்குள்ளாகின.
மைசூரு - சத்தியமங்கலம், பெங்களூரு - ஓசூர் இடையே தமிழக அரசு பேருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
"கர்நாடகம் நம்மதே, காவேரி நம்மதே" என்ற கோசங்களுடன் போராட்டத்தை துவக்கிய கன்னட ரக்சன வேதிகே அமைப்பினர் மெஜஸ்டிக் ரயில் நிலையம் முன்பு ரயில் மறியலில் ஈடுபட முயன்றனர். ஆனால், போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, கர்நாடக முதல்வர் சித்தராமையா, நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீலின் உருவ பொம்மைகளை எரித்து போராட்டங்களில் ஈடுபட்டனர்.
பெங்களூருவில் பேருந்து நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள வாகனங்கள்
பெங்களூரு தமிழ்ச்சங்கம் ஆதரவு:
இன்றைய முழு அடைப்புப் போராட்டத்துக்கு பெங்களூரு தமிழ்ச் சங்கம், கர்நாடக தமிழ் கூட்டமைப்பு, அனைத்து இந்திய தமிழ் சங்க கூட்டமைப்பு ஆகியன ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளன. தமிழர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 54 தமிழ் சேனல்களின் சேவை முடக்கப்பட்டுள்ளது. கர்நாடகம் முழுவதும் திரையரங்குகளில் தமிழ் திரைப்படங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
வீடியோ இணைப்பு: மைசூரு போராட்டம்
தமிழர்களுக்கு எச்சரிக்கை:
கர்நாடக பந்த்துக்கு அங்கு வாழும் தமிழர்கள் ஆதரவு தெரிவிக்காவிட்டால் 1991-ம் ஆண்டு நடந்தது போல் மீண்டும் ஒரு கலவரம் நடக்கும். தமிழர்கள் வீடு புகுந்து தாக்குதல் நடத்தப்படும் என கன்னட ரக்சன வேதிகே அமைப்பின் பிரதிநிதி தர்மேந்திரா பெங்களூருவில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
பந்த் காரணமாக கர்நாடக மாநிலம் முழுவதுமே பதற்றமான சூழல் நிலவுகிறது.
    இரா.வினோத்
    பாரதி ஆனந்த்   ://tamil.thehindu.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக