வெள்ளி, 16 செப்டம்பர், 2016

திமுக: விதை விருட்சமான வரலாறு! -பகுதி-2

மின்னம்பலம்.காம் : இப்பிரச்னையில் எம்.ஜி.ஆர். அரசு இரட்டை வேடம் பூண்டது. ஒருபுறம் சட்டமன்றத்தில் அரசியல் சட்டத்தின் மொழிப்பிரிவை திருத்துவதற்கு தீர்மானம் நிறைவேற்றியது. மறுபுறம் தனது அதிகாரத்திற்கு “வானமே எல்லை’’ என்று மார்தட்டிக் கொண்ட சபாநாயகர் துணையுடன், இந்திய அரசியல் சட்டத்தை அவமதித்ததாக கூறி 10 தி.மு.கழக சட்டமன்ற உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்தது. சட்டமன்ற விதிகள் 312-ஐ ஏதேச்சதிகாரமாக பயன்படுத்தி பேராசிரியர் அன்பழகன் உட்பட 10 உறுப்பினர்கள் பதவி பறிக்கப்பட்டது. அண்ணாவின் தம்பி என்று கூறிக் கொண்டே அன்னை தமிழுக்கு துரோகம் செய்த எம்.ஜி.ஆர். அரசுக்கு எதிராக தி.மு.கழகம் சிங்கம் போல் நிமிர்ந்து சீறி சிலிர்த்து எழுந்தது. 20,000-க்கு மேற்பட்ட கழக தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். எம்.ஜி.ஆர் அரசின் இரட்டை வேடம் கலைந்தது. அடுத்து வந்த 1989 பொதுத் தேர்தலில் மீண்டும் தி.மு.கழகம் அரியணை ஏறியது.

ஜவகர்லால் நேருவின் உறுதிமொழி
இந்திய அரசியல் சாசன விதிகள் 1950-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26-ஆம் நாள் அமுலுக்கு வந்த போதிலும், இந்திக்கு உள்ள எதிர்ப்பை உணர்ந்து, இந்தி பேசாத மக்களின் பதற்றத்தை குறைக்கும் வகையில் அரசியல் சாசனத்தை உருவாக்கியவர்கள், விதி 343-இன் படி இந்தி ஆட்சி மொழி ஆகும் தேதியை 15 ஆண்டுகளுக்கு தள்ளி வைத்தனர். எனினும் தி.மு.கழகம் இந்தி என்றுமே ஆட்சி மொழி ஆகாதபடி விழிப்புடன் செயலாற்றி போராட்டங்களையும், வியூகங்களையும் வகுத்து மக்களை எப்போதும் தயார் நிலையில் வைத்திருந்தது. இதன் பயனாக 1959 ஆகஸ்ட் 7-இல் பிரதமர் பண்டிதர் ஜவகர்லால் நேரு, நாடாளுமன்றத்தில் இந்தி பேசாத மக்கள் விரும்பும்வரை ஆங்கிலம் தொடர்ந்து ஆட்சி மொழியாக இருக்கும் என்ற உறுதிமொழியைத் தந்தார். 1959-இல் குடியரசுத் தலைவர் டாக்டர் இராஜேந்திர பிரசாத்திற்கு எதிராக கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.கழகம் ஏற்பாடு செய்தபோதும், 1962-இல் இந்திய சீனப் போரின் போதும் ஜவகர்லால் நேரு அவர்கள் இவ்வாக்குறுதியை உறுதிப்படுத்தினார். இந்தி வெறியர்களுக்கு எதிராக, நாட்டின் பிரதமர் அவர்களிடமிருந்து இவ்வாக்குறுதியை தி.மு.கழகம் பெற்றது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியாகும்.
இந்தி பேசாத மக்களுக்கு, தாம் கொடுத்த வாக்குறுதிக்கு எதிராக பண்டித ஜவகர்லால் நேருவின் அரசே 1963 ஏப்ரலில் ஆட்சி மொழிச் சட்டத்தை இயற்றி 1965 முதல் இந்தி மட்டுமே ஆட்சி மொழி எனவும், ஆங்கிலத்தை விருப்பப்பட்டால் தொடர்ந்து பயன்படுத்தலாம் என அறிவித்தது. நேருவின் உறுதிமொழி அவராலேயே காற்றில் பறக்கவிடப்பட்டது கண்ட தி.மு.கழகம் கொதித்தெழுந்தது. இந்தியை எதிர்த்து அதுவரை கண்டிரா அளவிற்கு நேரடி பேராட்டத்தில் ஈ.டுபட்டது. பேராட்டக்குழுத் தலைவராக, கலைஞர். பாசறைகள் அமைத்து படை திரட்டினார். அரசியல் சட்டத்தின் 17-ஆவது மொழிப்பிரிவை பொது மேடைகளில் தீயிட்டு கொளுத்த கழகம் தீர்மானித்தது. முதற்கட்டப் போரில் அறிஞர் அண்ணாவுடன், பல முன்னணி தலைவர்களும் 1500 தொண்டர்களுடன் சட்டத்தை எரிக்க முற்பட்டதாக கைது செய்யப்பட்டனர்.

இந்தி எதிர்ப்பு உணர்வில் தென்னகம் குறிப்பாக தமிழகம் தீக்குளிக்கத் தயாரானது. 1965-இல் இந்தி மட்டுமே ஆட்சி மொழி என மத்திய அரசு அறிவித்தபோது பிரளயமே ஏற்பட்டது. தமிழகத்தின் இருண்ட எதிர்காலத்தை காணச் சகிக்காத, தீரன் சின்னசாமி, சிவலிங்கம், அரங்கநாதன், முத்து, சாரங்கபாணி போன்ற 15 இளஞ்சிங்கங்கள் தங்கள் உடல் மீது நெருப்பு வைத்து அவ்வொளியில் தமிழ் வாழ்க தமிழ் வாழ்க என முழக்கமிட்டு சாகையிலே தமிழ் படித்து, தம் சாம்பலுமே தமிழ் மணந்து வேக, வெந்து மடிந்தனர். அவர்கள் ஏற்றிய இந்தி எதிர்ப்புத் தீயில், தென்னகம் முழுவதுமே கொழுந்து விட்டு எரிந்தது.
இந்திய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் டாக்டர் கலைஞர் அவர்கள் பாளையங்கோட்டை தனிமைச் சிறையில் 62 நாட்கள் வைக்கப்பட்டார். தமிழ் மொழியையும், பண்பாட்டையும், தமிழர் தன்மானத்தையும் காங்கிரஸ் காக்கத் தவறிவிட்டதால், மக்கள் அதனை ஆட்சி பீடத்திலிருந்து தூக்கி ஏறிந்தனர். 1967 பொதுத் தேர்தலில் தி.மு.கழகம் 138 இடங்களைக் கைப்பற்றி மகத்தான வெற்றி பெற்றது நாடாளுமன்றத்திற்குப் போட்டியிட்ட 25 இடங்களையும் கைப்பற்றி, இந்தியாவில் வேறு எந்தக் கட்சிக்கும் கிட்டாத வரலாற்றுச் சாதனையை உருவாக்கியது. தமிழகத்தின் முதல்வராக அறிஞர் அண்ணா பொறுப்பேற்றார்.
அண்ணாவின் ஆட்சி
அறிஞர் அண்ணா அவர்கள் குறுகிய காலமே ஆட்சியில் இருப்தபோதும் கழகத்தின் நீண்ட நாள் இலட்சியங்களை நிறைவேற்றும் வகையில், சட்ட திட்டங்களை வகுத்தார்.
அவரது சாதனைகளில் சரித்திரம் படைத்தவை:
சென்னை மாநிலம் என அழைக்கப்பட்ட தமிழகத்தின் பெயரை தமிழ்நாடு என மாற்றி தமிழர்களின் தன்மானத்தை உயர்த்தினார். அவர் இதயத்தில் கொண்ட பகுத்தறிவுக் கொள்கைகளுக்கு ஏற்ப சீர்திருத்த திருமணங்களுக்கு சட்டப் பாதுகாப்பு அளித்தார். மும்மொழித் திட்டத்தை அகற்றி, தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிகளுக்கு இடமளித்து, தமிழகப் பள்ளிகளிலிருந்து இந்தி மொழியை அறவே நீக்கினார். சென்னை, கோவை ஆகிய பெருநகரங்களில் ரூபாய்க்கு ஒரு படி அரிசி எனும் திட்டம் சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டது. ஏழைகளுக்கு எரியாத வீடுகள் (கல்நார் கூரையுடன்) அளிக்கப்பட்டன. பேருந்துகள் நாட்டுடமை ஆகிய திட்டங்கள் தொடங்கப்பெற்றது.1968 ஜனவரி முதல் வாரத்தில் இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டை சங்ககாலம் மீண்டும் வந்ததோ! என அனைவரும் பூரித்திடும் வகையில் எழில் குலுங்கிட, தமிழன்னையின் இதயம் குளிர்ந்திட, இனிது நடத்தினார். ஆனால் காலதேவன் கொடுமையால் அண்ணாவின் தலைமை அதிக நாள் நீடிக்கவில்லை. 1969 பிப்ரவரி 3-இல் அறிஞர் அண்ணா மறைந்தார். தமிழகமே இருளில் மூழ்கியது.
புதிய சகாப்தம்
அறிஞர் அண்ணாவின் இலட்சியங்களைத் தொடர்ந்து நிறைவேற்றவும், தி.மு.கழகத்தைக் கட்டி காத்திடவும், தமிழகத்தின் நலனைப் பாதுகாக்கவும், கழகத்தின் தலைமைப் பொறுப்பு டாக்டர் கலைஞரின் தோளில் சுமத்தப்பட்டது. “டாக்டர் கலைஞர் தமிழக முதல்வராக’’ 1969-இல் பிப்ரவரி 10-இல் பதவி ஏற்றார். ஓயாத உழைப்பு, உறுதி படைத்த நெஞ்சம் ஆகியவற்றால் டாக்டர் கலைஞர் அவர்கள், அண்ணாவின் முதல் தம்பியானார். அறிஞர் அண்ணாவிற்கும், டாக்டர் கலைஞருக்கும் உள்ள உறவு; சமுதாய சிந்தனையில் சாக்ரடீஸ் – பிளேட்டோ, கழகத்தைக் கட்டிக் காப்பதில் லெனின் – ஸ்டாலின் ஜனநாயக நெறிகளில் காந்தியடிகள் – நேரு போன்றது.
1960-இல் டாக்டர் கலைஞர் தி.மு.கழகத்தின் பொருளாளர் ஆனார். 1967 பொதுத் தேர்தலுக்கு பத்து இலட்சம் ரூபாய் நிதி திரட்டும் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. கலைஞர் கண்துஞ்சாது பசி நோக்காது பம்பரம்போல் சுழன்று, பட்டி தொட்டி எல்லாம் சென்று, பதினோரு இலட்சம் ரூபாய் நிதி திரட்டினார். அகமகிழ்ந்த அண்ணா தி.மு.கழக வேட்பாளர் பட்டியலை விருகம்பாக்கம் கழக மாநாட்டில் அறிவித்தபோது கூடி இருந்தோர் அனைவரும் மகிழ்ச்சியில் ஆர்ப்பரிக்கும் வகையில் சைதாப்பேட்டைக்கு பதினோரு இலட்சம் என்றார்.
அண்ணாவின் மறைவிற்குப் பின் எம்.ஜி.ஆர். வெளியேறிய பின்னும் டாக்டர் கலைஞரின் சீரிய தலைமையில் தி.மு.கழகம் 1971, 1989, 1996 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றது. கலைஞரின் முப்பது ஆண்டு தலைமையில் தி.மு.கழகம் கட்டுக்கோப்பாக சுயநலமிகளின் சூழ்ச்சிக்கு இறையாகாமல் இயங்கி வருகிறது. 1957 முதல் தாம் போட்டியிட்ட சட்டமன்றத் தேர்தல்கள் அனைத்திலும் வெற்றி வாகை சூடிய ஒரே தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களே. எனவே அவரின் தலைமையின் முழு நம்பிக்கை கொண்ட தி.மு.கழக தொண்டர்கள், 1969 முதல் அவரையே கழகத் தலைவராக எட்டுமுறை எழுச்சியுடன் ஏகமனதாக தேர்ந்தெடுத்துள்ளனர்.
கலைஞரின் தலைமையில், தமிழ்நாடு பல துறைகளில் புதிய சாதனைகள் படைத்துள்ளது. ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணும் தி.மு.கழக ஆட்சியில் – அவர் தலைமையில் நலிவுற்ற – பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக பல திட்டங்கள் இந்தியாவிலேயே முதன் முதலாக நிறைவேற்றப்பட்டன.அவைகளுள் சில:
குடிசை மாற்றுவாரியம். பிச்சைக்காரர், தொழு நோயாளர் மறுவாழ்வு இல்லங்கள். கோவில்களின் ஆதரவில் ஆதரவற்றோருக்கு பாதுகாப்பு தரும் கருணை இல்லங்கள்.கண்ணொளி திட்டத்தின் கீழ் இலவச கண் சிகிச்சை முகாம்கள் – அவர்களுக்கு இலவச கண்ணாடிகள். பண்டிகை நாட்களில் ஏழைகளுக்கு இலவச அரிசி – ஆடைகள். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம். ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோருக்கு தனித்தனி துறைகள். போலீசார் தேவைகள் உணர இந்தியாவிலேயே முதன் முதலாக போலீஸ் கமிஷன் அமைக்கப்பட்டது. தமிழகத்திலுள்ள அனைத்து கிராமங்களுக்கும் மின் விளக்கு வசதி. விவசாயத் தொழிலாளர்களுக்கு குடியிருப்பு மனை அனுபோக தாரர்கள் சட்டம். பேருந்துகள் நாட்டுடமை தமிழகத்தில் முழுமைப் பெற்றது. அரசு ஊழியர் குடும்பப் பாதுகாப்பு திட்டம். சிகப்பு நாடா முறை இரகசியக் குறிப்புமுறை ஒழிப்பு. கை ரிக்ஷாக்களை ஒழித்து இலவச சைக்கிள் ரிக்ஷாக்கள் வழங்கியது. ஊனமுற்றோர் மறுவாழ்வுத் திட்டம். பெண்களுக்கு சொத்துரிமை. மகளிர் இலவச பட்டப்படிப்பு திட்டம். ஏழைப் பெண்கள் திருமண உதவித்திட்டம்.அரசுப் பணியில் பெண்களுக்கு 30 விழுக்காடு ஒதுக்கீடு. கலப்பு குடும்பத்து பெண்களுக்கு பேறுகால நிதியுதவி.சுதந்திர போராட்ட வீரர்களுக்கு ஓய்வூதிய உயர்வு.
புதிய பல்கலைக் கழகங்கள் – நெல்லையில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம், சென்னையில் டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழகம், சென்னையில் கால்நடை அறிவியல் பல்கலைக் கழகம், சேலத்தில் பெரியார் பல்கலைக் கழகம்.
மொழிப்போர்த் தியாகிகளுக்கு ஓய்வூதியம். மாணவர்களுக்கு இலவச பேருந்து பயணச் சலுகை. ஆதி திராவிடர்களுக்கு இலவச வீடுகள்.மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 விழுக்காடு இட ஒதுக்கீடு.
சுயாட்சியே லட்சியம்!

இந்தியா பல்வேறு கலாச்சாரங்களும் சமூகங்களும் இணைந்த துணைக்கண்டமாகும். வேற்றுமையில் ஒற்றுமை என்ற கருத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட தி.மு.கழகம் கூட்டாட்சியால் மட்டுமே இந்தியாவின் ஒற்றுமையைப் பாதுகாக்க முடியும் என உறுதியாக நம்புகிறது. “மத்தியில் கூட்டாட்சி – மாநிலங்களில் சுயாட்சி’’ என்பதே தி.மு.கழகத்தின் இலட்சியமாகும். “உறவுக்குக் கை கொடுப்போம், உரிமைக்குக் குரல் கொடுப்போம்’’ என்பதே அதன் முழக்கம். எனவே எந்த மாநிலத்தின் உரிமையும் பாதிக்கப்படும்போது தி.மு.கழகம் போராடத் தவறியதில்லை.
1969-இல் இராஜமன்னார் கமிட்டி மூலம் மத்திய மாநில உறவுகளை தெளிவாக ஆராய்ந்து அதிகாரபூர்வமாக அறிக்கை வெளியிட்ட முதலாவது முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்களே. 1974 ஏப்ரலில், தமிழ்நாடு சட்டமன்றத்தில் இராஜமன்னார் கமிட்டி பரிந்துரையின் அடிப்படையில் மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வேண்டி வரலாற்று சிறப்புமிக்க தீர்மானத்தை நிறைவேற்றியது டாக்டர் கலைஞர் அரசுதான். 1974 ஆகஸ்ட் 15 முதல், சுதந்திர நாட்களில் மாநில தலைமை செயலகங்களில் தேசிய கொடியேற்றும் உரிமையை மாநில முதலமைச்சர்களுக்கு பெற்றுத் தந்தது டாக்டர் கலைஞர் அவர்களே, காங்கிரஸ் கட்சியின் எந்த முதலமைச்சரும் இவ்வுரிமைக்காக குரல் கூட எழுப்பியதில்லை. மாநில சுயாட்சியின் வெற்றி பாதையில் இது ஒரு மைல்கல்லாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக