வியாழன், 29 செப்டம்பர், 2016

அன்புநாதன் + பன்னீரு.... துபாய் டய்ரா சிட்டியில் 1,900 கோடியில் அடுக்குமாடி வணிக வளாகம்

விகடன்.காம் : அன்புநாதன் விவகாரத்தில் அடுத்த அஸ்திரத்தை எடுத்துள்ளது அமலாக்கத் துறை. சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் கரூர் அன்புநாதன் வீட்டில் கைப்பற்றப்பட்ட ரூ.4.77 கோடி ரூபாய் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. அது, இப்போது முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் வீட்டில் ரெய்டு நடக்கும் அளவுக்குப் போனது. அந்தப் பணம் நத்தம் விசுவநாதனுக்குச் சொந்தமானது. விசுவநாதனின் மகன் அமர்நாத் மூலம் அன்புநாதனுக்கு வந்ததாக வருமானவரித் துறை வட்டாரம் அறிவித்து அதிர்வலைகளை உண்டாக்கியது. சோதனை, விசாரணை எனப் போய்க்கொண்டிருக்கும் இந்த விவகாரத்தில், வெளிநாடுகளில் பணம் பதுக்கியதாக அந்நியச் செலாவணி சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்திருக்கிறது மத்திய அமலாக்கத் துறை. அடுத்து, கைது படலம் நடக்கும் என்பதுதான் ஹாட் டாபிக்.">கன்சல்டன்ஸி டு தாய்லாந்து தீவு /> கரூர் மாவட்டம் அய்யம்பாளையத்தில் உள்ள அன்புநாதனுக்குச் சொந்தமான குடோன் மற்றும் வீட்டில் சோதனை நடத்தியது தேர்தல் பறக்கும் படை. அப்போது, பணம் கைப்பற்றப்பட்டது. அதன்பிறகு வருமானவரித் துறையினர் நுழைந்து சோதனை போட்டதில் கோடிக்கணக்கில் பணம் சிக்கியது. முக்கியப் புள்ளிகள் வாங்கிக் குவித்த சொத்துக்களின் ஆவணங்கள், வெளிநாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்ட கோடிக்கணக்கான பணப் பரிமாற்றங்கள், அந்த வீடுகளில்  பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராக்களின் பதிவுகள் என அனைத்தையும் கைப்பற்றினார்கள். அதை ஆய்வு செய்ததில், நத்தம் விசுவநாதன், அவரது மகன் அமர்நாத், ஓ.பி.எஸ்., அவரது மகன் ரவீந்திரநாத்குமார், வைத்திலிங்கம் உள்ளிட்ட அமைச்சர்கள் அன்புநாதனுக்கு நெருக்கமாக இருந்தது அம்பலமானது.
அடுத்தடுத்த விசாரணையில் சாதாரணமாக ஆட்டோ மொபைல் கன்சல்டன்ஸி வைத்திருந்த அன்புநாதன், துபாய், சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் முதலீடு செய்திருப்பதும் தாய்லாந்தில் தீவு மற்றும் துபாய் டய்ரா சிட்டியில், அடுக்குமாடி வணிக வளாகம் வைத்திருப்பதையும் கண்டு வாயடைத்துப் போனது வருமானவரித் துறை. அவர்களது ஆய்வில் அன்புநாதன் கடந்த 4 வருடங்களில் மட்டும் 90 நாடுகளுக்குப் போய் வந்திருக்கிறார் என தெரிந்தது. ஒரு கார் வாங்குவதில் தொடங்கிய அறிமுகம், நத்தம் விசுவநாதன் மூலம் அடுத்தடுத்து அமைச்சர்கள் என நீண்டுள்ளது. பணம் கொடுக்கல் வாங்கலில், நத்தம் விசுவநாதனின் நம்பிக்கையைப் பெற்ற அன்புநாதன் மூலம், அமர்நாத் அடுத்தடுத்த வேலைகளை செய்ய ஆரம்பித்தார்.<>அருண் ஜெட்லி வைத்த பொறி!/> வருமானவரித் துறையைச் சேர்ந்தவர்களிடம் பேசினோம். மலைக்க வைக்கும் அளவுக்கு செய்தி களைக் கொட்டினார்கள். ‘‘ஈஸ்வரி பொறியியல் கல்லூரியில் எம்.பி.ஏ முடித்த அமர்நாத், சென்னை அடையாறில் 10 கோடி முதலீட்டில் தனது நண்பரான ஸ்ரீராம் உடன் சேர்ந்து பிரிமியர் இன்டியா இன்ஃப்ரா பிரைவேட் லிமிட்டெட் எனும் நிறுவனத்தை ஆரம்பித்தார். ரியல் எஸ்டேட், பிரமாண்டமான அப்பார்ட்​மென்ட்கள் கட்டி விற்பது என பிசினஸை வளர்த்தார். அப்பாவின் தயவு இருந்ததால் வளர்ச்சி விண்ணை முட்டியது. பிரிமியர் பிராப்பர்டிஸ், எஸ்.எஸ்.எல்.எஃப். ஃபவுண்டேஷன் என்கிற பெயர்களில் சென்னை ஓ.எம்.ஆர். சாலை, கொளத்தூர், மடிப்பாக்கம், காஞ்சிபுரம், உத்திரமேரூர், மேல்மருவத்தூர், பூந்தமல்லி எனப் பல இடங்களில்  நிலங்களை வாங்கி விற்று வருகின்றனர்.

அமர்நாத்தும் அன்புநாதனும் சேர்ந்து சென்னை தி.நகர் உள்ளிட்ட முக்கிய இடங்களில் வணிக வளாகங்களை வாங்கிக் குவித்துள்ளார்கள். அன்புநாதனுக்கு மட்டும் 4 மிகப் பெரிய வணிக வளாகங்கள் உள்ளன. துபாய் டய்ரா சிட்டியில் 1,900 கோடியில் அடுக்குமாடி வணிக வளாகம் வாங்கியுள்ளனர். அவை முக்கியப் புள்ளிகளுக்காக வாங்கப்பட்டது. அதன் அருகிலேயே 10 ஆயிரம் கோடி மதிப்பில் சோலார் பிளான்ட் அமைப்பதற்கான பொருட்கள் தயாரிக்கும் கம்பெனியை துபாயைச் சேர்ந்த ஒருவரின் பெயரில் நடத்தி வருகின்றார்கள். இதன் மொத்த முதலீடு 60 ஆயிரம் கோடிக்கு மேல்.

 இந்தக் கம்பெனியில் தயாரிக்கும் பொருட்களை தமிழகத்தில் விற்க நினைத்த, நத்தம் விசுவநாதன் &; கோ, கடந்த சில வருடங்களுக்கு முன் சோலார் மின்சார உற்பத்தியை தமிழகத்தில் தீவிரமாக நடைமுறைப்படுத்தும் வேலைகளை செய்தார்கள்.  முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட தொலைநோக்கு திட்டம் 2023-ல் சூரிய மின் சக்திக்கு முக்கியத்துவம் கொடுக்க நத்தம் விசுவநாதன் முக்கிய காரணம். அதன்மூலம் தமிழகத்தில் சூரிய மின்சாரம் தயாரிக்கும்  நிறுவனங்களுக்கு வலை விரிக்கப்பட்டது. மத்தியில் பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்தபிறகு சூரிய மின்சாரம் குறித்த ஆய்வுகள் நடத்தப்பட்டன. அதன் அடிப்படையில் ராமநாதபுரம்  மாவட்டத்தில் 5,000 ஏக்கரில் சோலார் மின் உற்பத்தி மையத்தை அமைத்திட அதானி குழுமம், தமிழக அரசோடு ஒப்பந்தம் போட்டது. இந்த ஒப்பந்தத்தால் தங்களுக்கு என்ன லாபம் கிடைக்கும் என யோசித்த, நத்தம் விசுவநாதன் தரப்பு, சென்னையில் நிலத்தை அடிமாட்டு விலைக்கு வாங்கி, கைமாற்றி கோடிகளைப் பார்க்கும் அனுபவம் இருக்கும் காரணத்தால், அன்புநாதன் மூலம் அதானி குழுமத்துக்குத் தேவையான நிலங்களை வடநாட்டுக் கம்பெனிகள் பெயரில் வாங்கி, அதைப் பல மடங்கு விலை உயர்த்தி கைமாற்றி பல ஆயிரக்கணக்கான கோடிகள் பார்த்துள்ளார்கள். இந்த விஷயம் எல்லாம் அதானி நிறுவனத்தின் மூலம் மத்திய நிதி அமைச்சர்அருண் ஜெட்லி கவனத்துக்குப் போனது. இதை ஜெயலலிதாவுக்கு தெரியப்படுத்திய பிறகுதான் அருண் ஜெட்லி துறையின் கீழ் வரும் வருமானவரித் துறை சோதனை போட்டதும் அமலாக்கத்​துறை வழக்கு பதிவு செய்ததும் என எல்லாம் அரங்கேறியது’’ என்றார்கள்

ஹவாலா நெட்ஒர்க்!

அன்புநாதனுக்கு மிகப்பெரிய ‘ஹவாலா நெட்ஒர்க்’  இருப்பதும் விசாரணையில், தெரிய வந்திருக்கிறது. அதன்மூலம் வெளி​நாடுகளுக்கு பல ஆயிரம் கோடிகள் கொண்டு செல்லப்பட்டதாகச் சொல்கிறது வருமானவரித் துறை வட்டாரம். ‘‘சில வருடங்களுக்கு முன் ஹவாலா மோசடியில் சிக்கிய மும்பையைச் சேர்ந்த மனோஜ்குமார் கார்க், கேரளாவைச் சேர்ந்த சுரேந்திரகுமார் ஆகியோரும் அன்புநாதனுக்கு நெருக்கமாக இருந்துள்ளார்கள். இவர்கள் மூலம் மும்பையில்  அடுக்குமாடி வணிக வளாகம், வெளிநாடுகளில் முதலீடு செய்திருப்பதற்கான ஆவணங்கள் சிக்கியிருக்கிறது. இவை அனைத்தும் நத்தம் விசுவநாதன் மட்டுமல்லாமல் முக்கியப் புள்ளிகளுக்காகவும் அன்புநாதன் செய்தவை. அதன் தொடர்ச்சியாகத்தான் சைதை துரைசாமி, நத்தம் விசுவநாதன் வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்டது. இதெல்லாம் முடிந்த நிலையில்தான் முதல் கட்டமாக அன்புநாதன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது அமலாக்கத் துறை. இதில் அன்புநாதன் மட்டுமல்லாமல் மேலும் பலர் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். சில காரணங்களால் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்காமல், அமைதி காத்து வருகிறது அமலாக்கத்துறை. விரைவில் சிக்னல் கிடைத்ததும் ஆக்‌ஷன் பாயும்’’ என்கிறார்கள் அதிகாரிகள்.

பதுங்கும் ஓ.பி.எஸ் மகன்!

இந்தப் பிரச்னை ஆரம்பமாகும் முன்பு, ஓ.பி.எஸ் மகன் ரவீந்தரநாத்குமார், அமர்நாத், அன்புநாதன் எல்லோரும் மிக நெருக்கமாக இருந்துள்ளார்கள். ஆனால், பிரச்னை பூதாகரமானதில் இருந்து ரவீந்தரநாத் அன்புநாதனை தவிர்த்து வருகிறார். சிங்கப்பூர் உள்ளிட்ட சில வெளிநாடுகளில் ஆரம்பித்த சில நிறுவனங்கள் மட்டும் இப்போது முடக்கப்பட்டுள்ளன. அன்புநாதன் மூலம் வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான கோடிகளை இந்தியா கொண்டு வர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது அமலாக்கத்துறை.

தப்பிய அன்புநாதன்!
தேர்தல் நேரத்தில், சோதனை போட்ட போது, அன்புநாதன் தனக்கு நெருக்கமானவர்களிடம், ‘‘இதெல்லாம் ஒரு பிரச்னையா... எல்லாத்​துக்கும் கணக்கு கரெக்டா இருக்கு’’ என சொல்லி வந்தார். ஆனால், என்ன நினைத்தாரோ இந்தியாவில் இருந்தால் சிக்கல் என ஊகித்து வெளிநாடு பறந்தார். தனியாக வெளிநாடு சென்றால் சிக்கிக்கொள்வோம் என கணக்குப் போட்டு நண்பர்களுடன் டூர் போவது போல அவர்களுடன் கலந்து பறந்துவிட்டார். முதலில் கோவைக்கு சென்று அங்கிருந்து கடந்த 18-ம் தேதி மாலை தாய்லாந்து கிளம்பினார். ஒருவாரம் கழித்து கரூர் புஞ்சை தோட்டக்குறிச்சி, கோவை உள்ளிட்ட ஊர்களில் உள்ள அவருக்குச் சொந்தமான இடங்களுக்கு சென்ற அமலாக்கத் துறை அதிகாரிகள், ‘‘அன்புநாதனை கைது செய்ய வந்துள்ளோம், அன்புநாதன் எங்கே?’’ எனக் கேட்டுள்ளார்கள். ‘‘வெளியூர் போகிறேன் எனச் சொல்லிவிட்டுப் போனார். அதன்பிறகு தகவல் இல்லை’’ என அங்கிருந்தவர்கள் பதில் சொல்லியிருக்கிறார்கள்.

சம்மன் அனுப்பி நத்தம் விசுவநாதனை அழைத்து விசாரித்தது அமலாக்கப்பிரிவு. இது ‘விசுவநாதன் கைது’ என வதந்திகளாகப் பரவியது. அப்போதே அடுத்தக்கட்ட நடவடிக்கை பாயும் என தகவல்கள் கசிந்தன. அடுத்து என்ன நடக்கும் என்பது சஸ்பென்ஸாக இருக்கிறது. 
- சி.ய.ஆனந்தகுமார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக