ஞாயிறு, 4 செப்டம்பர், 2016

கர்நாடகா காவிரிக்கு 11 ஆயிரம் கன அடி நீர் திறந்து விட்டது .. உச்சநீதிமன்ற உத்தரவு !

ஒகேனக்கலில் சீறிப் பாய்ந்து வரும் காவிரி நீர் (கோப்புப் படம்)
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற வலியுறுத்தலின்பேரில் கர்நாடக அரசு காவிரியில் தமிழகத்துக்கு 11 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிட்டுள்ளது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி தமிழகத்துக்கு வழங்க வேண்டிய 50.052 டிஎம்சி காவிரி நீரை திறக்க உத்தரவிட கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. நேற்று முன்தினம் இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா, “3 மாதங்களாக நீரின்றி தவிக்கும் தமிழகத்துக்கு கர்நாடக அரசு உடனடியாக காவிரி நீரைத் திறந்துவிட முன்வர வேண்டும். எக்காரணம் கொண்டும் கர்நாடகா, காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை மீறுவதை அனுமதிக்க முடியாது’’ என அறிவுரை வழங்கினார்.
உச்ச நீதிமன்றத்தில் காவிரி தொடர்பான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், கர்நாடக முதல்வர் சித்தராமையா, நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், கிராமப் புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல், மூத்த வழக்கறி ஞர் மோகன் கடார்கி ஆகியோர் டெல்லிக்கு சென்று கர்நாடக அரசின் சட்ட ஆலோசகரும், மூத்த வழக்கறி ஞருமான ஃபாலி எஸ். நாரிமனை நேற்று அவரது இல்லத்தில் சந்தித்தனர்.
அப்போது சித்தராமையா கூறிய போது, “கர்நாடக அணைகளின் நீர்மட்டம், விவசாயிகளின் உண்மை நிலையை விவரிப்பது, கர்நாடக காவிரி டெல்டா பகுதிகளில் நடந்துள்ள விவசாயிகளின் தற்கொலை, வறட்சியால் நிலவும் பயிர் இழப்பு ஆகியவற்றை உச்ச நீதிமன்றத்தில் விரிவாக விளக்க வேண்டும். வறட்சி காலத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் தொடர்பாக காவிரி நடுவர் மன்ற தீர்ப்பில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்ட வேண்டும்.
தற்போதைய சூழலில் தமிழகத்தின் பாசனத்துக்கு காவிரி நீரை திறந்துவிட்டால், கர்நாடகாவில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என விரிவாக எடுத்துரைக்க வேண்டும்” என கூறியதாக தெரிகிறது.
மேலும் “தமிழகத்துக்கு உடனடியாக எவ்வளவு டிஎம்சி நீரை திறந்துவிட முடியும்” என்று உச்ச நீதிமன்றம் வினவியுள்ள கேள்விக்கு பதில் அளிப்பது குறித்து ஃபாலி எஸ்.நாரிமனுடன் சித்தராமையா தீவிரமாக ஆலோசித்ததாக தெரிகிறது.
நீண்ட நேரம் நடைபெற்ற இந்த சந்திப்புக்கு பிறகு வெளியே வந்த சித்தராமையா, “காவிரி விவகாரத் தில் கர்நாடக அரசின் உண்மை நிலை குறித்து, எங்களது சட்ட நிபுணர்கள் நீதிமன்றத்தில் திங்கள் கிழமை விரிவாக வாதிடுவார்கள்” என்றார்.
காவிரியில் நீர்திறப்பு
இந்நிலையில் கர்நாடக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இருந்து தப்பிக்கும் நோக்கில் தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட முன்வந்துள்ளது. இதன் தொடக்கமாக கிருஷ்ணராஜசாகர், ஹேமாவதி, கபினி, ஹாரங்கி ஆகிய அணைகளின் நீர்மட்டத்தை ஆராய்ந்து தமிழகத்துக்கு முதல் கட்டமாக 25 டிஎம்சி நீரை வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எனவே காவிரி நீர்ப்பாசன அதிகாரிகள் கர்நாடக அணைகளின் நீர்மட்டம் குறித்து அரசுக்கு அறிக்கை அளித்துள்ளனர். அதன்படி கிருஷ்ணராஜசாகர் அணையில் (முழு கொள்ளளவு 49.5 டிஎம்சி ) தற்போது 17.68 டிஎம்சி, ஹேமாவதி அணையில் (முழு கொள்ளளவு 37.1 டிஎம்சி ) 18.38 டிஎம்சி , கபினி அணையில் (முழு கொள்ளளவு 19.52 டிஎம்சி ) 14.64 டிஎம்சி, ஹாரங்கி அணையில் (முழு கொள்ளளவு 8.5 டிஎம்சி) 7.24 டிஎம்சி நீர் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து கர்நாடக அரசு உத்தரவின்பேரில் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 7 ஆயிரம் கன அடி நீரும், கபினி அணையில் இருந்து 4 ஆயிரம் கன அடி நீரும் காவிரியில் தமிழகத்துக்கு திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த நீர் கர்நாடக - தமிழக எல்லையில் உள்ள பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கலை கடந்து பாய்வதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 7ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது. இதனால் தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு
காவிரி விவகாரம் குறித்து கர்நாடக மாநில பாஜக தலைவர் எடியூரப்பா கூறியதாவது:உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசின் வழக்கறிஞர்கள் போதிய ஆதாரங் களுடன் வாதிட வில்லை. தமிழகத் துக்கு காவிரி நீரை திறந்துவிட முடியாது என ஆணித்தரமாக வாதங்களை முன் வைத்திருக்க வேண்டும். கர்நாடக அணைகளின் உண்மை நிலை குறித்து ஆராய நீதிமன்றம் மத்திய அரசின் நிபுணர் குழுவை அனுப்ப வேண்டும். அந்த குழுவின் அறிக்கையின்படியே தீர்ப்பை அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்  tamilthehindu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக