வெள்ளி, 19 ஆகஸ்ட், 2016

சாக்ஷி மாலிக் இந்தியாவின் முதல் பதக்கத்தை பெற்றார் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் Sakshi Malik, the female wrestler who got India's first medal

ரியோ ஒலிம்பிக் மகளிர் 58 கிலோ ஃப்ரீஸ்டைல் மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் சாக்ஷி மாலிக் வெண்கலப் பதக்கம் வென்றார். இதன்மூலம் ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் பெற்றுத்தந்தவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். வியாழக்கிழமை அதிகாலையில் நடைபெற்ற வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் ஒரு கட்டத்தில் 0-5 என்ற புள்ளிகள் கணக்கில் பின்தங்கியிருந்த சாக்ஷி மாலிக், கடைசி நிமிடத்தில் சரிவிலிருந்து மீண்டதோடு 8-5 என்ற புள்ளிகள் கணக்கில் கிர்கிஸ்தான் வீராங்கனை அய்சூலு டைனிபெகோவாவை தோற்கடித்தார். முன்னதாக புதன்கிழமை நடைபெற்ற காலிறுதியில் சாக்ஷி மாலிக் 2-9 என்ற புள்ளிகள் கணக்கில் ரஷியாவின் வேலரியா கோப்லோவாவிடம் தோல்வி கண்டார். இதன்பிறகு தொடர்ந்து சிறப்பாக ஆடிய வேலரியா இறுதிச்சுற்றுக்கு முன்னேறியதால், மல்யுத்த விதிமுறைப்படி சாக்ஷி மாலிக்கிற்கு "ரெபிசேஜ்' சுற்றில் (வெண்கலப் பதக்கம் வெல்வதற்கான மறுவாய்ப்பு) விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.
"ரெபிசேஜ்' சுற்றில் நேரடியாக 2-ஆவது சுற்றுக்கு தகுதி பெற்ற சாக்ஷி மாலிக், அதில் 12-3 என்ற புள்ளிகள் கணக்கில் மங்கோலியாவின் பியூர்டார்ஜின் ஆர்கோனை தோற்கடித்தார்.
இதன்பிறகு நடைபெற்ற வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் கிர்கிஸ்தானின் அய்சூலு டைனிபெகோவாவை எதிர்கொண்டார் சாக்ஷி.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் ஆரம்பத்தில் துடிப்பாக செயல்பட்ட டைனிபெகோவா, ஒரு கட்டத்தில் 5-0 என முன்னிலை பெற்றார். அதேநேரத்தில் சாக்ஷி விதிமுறையை மீறியதற்காக நடுவரின் எச்சரிப்புக்கு உள்ளானார். இதனால் சாக்ஷி தோல்வியடைந்துவிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் கடைசிக் கட்டத்தில் திடீரென சரிவிலிருந்து மீண்டு ஆக்ரோஷமாக செயல்பட்ட சாக்ஷி, அடுத்தடுத்து புள்ளிகளை பெற்றார். இதனால் இருவரும் 5-5 என புள்ளிகள் கணக்கில் சமநிலையை எட்டினர். அப்போது போட்டி முடிவடைய சில விநாடிகளே இருந்தன. ஒருவேளை போட்டி டையில் முடிந்தால், நடுவரால் எச்சரிக்கப்பட்டதன் அடிப்படையில் சாக்ஷி தோல்வியடையும் சூழல் இருந்தது. ஆனால் நெருக்கடிக்கு மத்தியிலும் நம்பிக்கையை இழக்காத சாக்ஷி, டைனிபெகோவாவை புரட்டியெடுத்தார். இதன்மூலம் அவருக்கு மேலும் 3 புள்ளிகள் கிடைக்க, அவர் 8-5 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி கண்டார்.
வெற்றி பெற்ற அடுத்த நிமிடமே துள்ளிக் குதித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் சாக்ஷி. இதையடுத்து சாக்ஷியை தோளில் தூக்கி வைத்து அவருடைய பயிற்சியாளர் குல்தீப் சிங் மைதானத்தை வலம் வந்தார்.
இளம் வயதில் கபடி மற்றும் கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டிய சாக்ஷி, பின்னர் மல்யுத்தத்துக்கு தாவினார். அதில் வெற்றி பெற ஆரம்பித்தபோது, கபடியையும், கிரிக்கெட்டையும் மறந்து போனார். இப்போது ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றதன் மூலம் ஒரே நாளில் நாடு முழுவதும் பிரபலமடைந்துள்ளார்.
கொண்டாட்டம்: சாக்ஷி, ஹரியாணா மாநிலம், ரோதக் அருகேயுள்ள மோஹ்ரா கிராமத்தைச் சேர்ந்தவர். சாக்ஷி, வெண்கலப் பதக்கம் வென்றதைத் தொடர்ந்து அவருடைய பெற்றோர், சகோதரர் உள்ளிட்டோர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். அவர்கள் துள்ளிக்குதித்து தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இது ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த இந்நாள், முன்னாள் முதல்வர்கள், அமைச்சர்கள், பிரபலங்கள் என ஏராளமானோர் சாக்ஷியின் வீட்டுக்குச் சென்று வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
5-ஆவது பதக்கம்
ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில் பதக்கம் வென்ற 5-ஆவது இந்தியர் சாக்ஷி ஆவார். 1952-ஆம் ஆண்டு ஹெல்சிங்கியில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் கஷாபா ஜாதவ் வெண்கலம் வென்றார். அதுதான் மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம். அதன்பிறகு 2008-ல் நடைபெற்ற பெய்ஜிங் ஒலிம்பிக்கில் சுஷீல் குமார் வெண்கலம் வென்றார்.
2012-இல் நடைபெற்ற லண்டன் ஒலிம்பிக்கில் சுஷீல் குமார் வெள்ளியும், யோகேஷ்வர் தத் வெண்கலமும் வென்ற நிலையில், இப்போது சாக்ஷி மாலிக் வெண்கலம் வென்றுள்ளார். அதேநேரத்தில் மகளிர் மல்யுத்தப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் சாக்ஷி மாலிக் என்பது குறிப்பிடத்தக்கது.
4-ஆவது வீராங்கனை
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற 4-ஆவது இந்திய வீராங்கனை என்ற பெருமை சாக்ஷி மாலிக்கிற்கு கிடைத்துள்ளது. முதல் வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரி ஆவார். அவர், 2000-இல் நடைபெற்ற சிட்னி ஒலிம்பிக்கில் மகளிர் பளுத்தூக்குதல் போட்டியில் வெண்கலம் வென்றார். அதற்கடுத்தபடியாக லண்டன் ஒலிம்பிக்கில் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமும், பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெவாலும் வெண்கலம் வென்றது குறிப்பிடத்தக்கது.
டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம்:சாக்ஷியின் தந்தை ஆசை
சாக்ஷி வென்றது குறித்து அவருடைய தந்தை சுபிர் மாலிக் கூறியதாவது: எப்போதுமே பிள்ளைகளுக்கு பெற்றோரின் ஆதரவு மிக முக்கியம். நாங்கள் எல்லா வழிகளிலும் சாக்ஷிக்கு உறுதுணையாக இருக்க முயன்றோம். சாக்ஷி, மல்யுத்தப் போட்டியில் பங்கேற்றபோது, அதை ஏராளமானோர் விமர்சித்தனர். ஆனால் அவர் காமன்வெல்த் மற்றும் ஆசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்றபோது விமர்சித்தவர்கள் எல்லோரும் பாராட்டினார்கள்.
சாக்ஷியின் சாதனையிலிருந்து மற்ற பெண்களும் உத்வேகம் பெற்று விளையாட்டுத் துறையில் நுழைந்து சிறப்பாக செயல்பட வேண்டும். தங்களின் மகள்கள் விளையாட்டை தேர்வு செய்யக்கூடாது என நினைக்கும் தந்தைகளுக்கு சாக்ஷி முன்னுதாரணமாக திகழ வேண்டும்.
சாக்ஷியின் தாத்தாவும் மல்யுத்த வீரர்தான். அவரால் கவரப்பட்டுதான் மல்யுத்த விளையாட்டை தேர்வு செய்தார் சாக்ஷி. பதக்கம் வென்றவுடன் என்னை தொலைபேசியில் தொடர்புகொண்ட சாக்ஷி, "உங்களின் ஆசையை நிறைவேற்றிவிட்டேன். நாட்டுக்காக பதக்கம் வென்றுவிட்டேன்' என்று கூறினார். அப்போது என் கண்கள் குளமாகிவிட்டன. சாக்ஷி, டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்ல வேண்டும் என விரும்புகிறேன்' என்றார்.
பரிசு மழை
ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற சாக்ஷி மாலிக்கிற்கு ரூ.2.5 கோடி ரொக்கப் பரிசும், அரசு வேலையும் அளிக்கப்படும் என்று ஹரியாணா அரசு அறிவித்துள்ளது.
ஹரியாணா வீரர்கள், ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் ரூ.6 கோடியும், வெள்ளி வென்றால் ரூ.4 கோடியும், வெண்கலம் வென்றால் ரூ.2.5 கோடியும் வழங்கப்படும் என ஏற்கெனவே அம்மாநில அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில் இப்போது சாக்ஷி மாலிக்கிற்கு ரொக்கப் பரிசோடு அரசு வேலையும் வழங்கப்படும் என ஹரியாணா மாநிலத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் அறிவித்துள்ளார்.
ரயில்வே சார்பில் ரூ.60 லட்சம்: ஒலிம்பிக்கில் பங்கேற்கும் ரயில்வே வீரர்கள் தங்கம் வென்றால் ரூ.1 கோடியும், வெள்ளி வென்றால் ரூ.75 லட்சமும், வெண்கலம் வென்றால் ரூ.50 லட்சமும் வழங்கப்படும் என ரயில்வே அறிவித்திருந்தது. அதன்படி ரயில்வேயில் பணியாற்றி வரும் சாக்ஷி ரூ.50 லட்சத்தை தட்டிச் சென்றுள்ளார். இதுதவிர ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றதற்காக ரூ.10 லட்சத்தை ரயில்வேயிடம் இருந்து பெறவுள்ளார்.
இது குறித்து ரயில்வே விளையாட்டு மேம்பாட்டு வாரிய செயலர் ரேகா யாதவ் கூறுகையில், "சாக்ஷி மாலிக், வினேஷ் போகத் (காலில் காயம் ஏற்பட்டு போட்டியிலிருந்து விலகியவர்) ஆகியோரால் இந்திய ரயில்வே பெருமையடைகிறது. சாக்ஷி, இப்போது வட கிழக்கு ரயில்வேயில் சீனியர் கிளர்க்காக பணிபுரிந்து வருகிறார். அவருக்கு பதவி உயர்வு (சான்றொப்பம் அளிக்கும் அதிகாரியாக) வழங்கப்படவுள்ளது' என்றார். சாக்ஷிக்கு பாராட்டு விழா நடத்தவும் ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.
இந்திய ஒலிம்பிக் சங்கமும் பதக்கம் வெல்பவர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்படும் என ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதன்படி சாக்ஷிக்கு ரூ.20 லட்சம் கிடைக்கும். சாக்ஷியின் பயிற்சியாளருக்கு ரூ.10 லட்சம் கிடைக்கும்.
கேல் ரத்னா விருது
விளையாட்டுத் துறையில் சாதித்தவர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை, ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்பவர்களுக்கு வழங்குவது என மத்திய விளையாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அதன்படி வெண்கலம் வென்ற சாக்ஷி மாலிக், கேல் ரத்னா விருதைப் பெறவுள்ளார்.
ராணி லட்சுமி பாய் விருது
சாக்ஷி மாலிக்கிற்கு ராணி லட்சுமி பாய் விருது வழங்கப்படும் என்று உத்தரப் பிரதேச முதல்வர்
அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். இந்த விருதுடன்ரூ.3.11 லட்சம் வழங்கப்படும்.
12 ஆண்டு உழைப்புக்கு கிடைத்த வெற்றி
வெண்கலம் வென்றது குறித்து சாக்ஷி மாலிக் கூறியதாவது: கடந்த 12 ஆண்டுகளாக இரவு பகலாக கடுமையாக உழைத்ததன் மூலம் வெண்கலப் பதக்கத்தை வென்றிருக்கிறேன். ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமை எனக்கு கிடைக்கும் என ஒருபோதும் நினைத்ததில்லை' என்றார்.
வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் சரிவிலிருந்து மீண்டது குறித்துப் பேசிய சாக்ஷி, "ஆட்டத்தின் கடைசி நிமிடம் வரை நான் நம்பிக்கையை இழக்கவில்லை. நான் 6 நிமிடம் முழுமையாக களத்தில் நின்றுவிட்டால் என்னால் வெற்றி பெற முடியும் என்பது எனக்கு தெரியும். கடைசிச் சுற்றில் என்னால் முடிந்த அளவுக்கு சிறப்பாக செயல்பட்டேன். தன்னம்பிக்கையோடு இருந்தேன்.
எல்லோரும் பதக்கம் வென்று கொண்டிருந்தார்கள். அதனால் நாம் பதக்கமின்றி நாடு திரும்பினால் அது மிகக் கடினமாக இருக்கும் என்று நினைத்தேன். அது நெருக்கடியை ஏற்படுத்தியது. ஆனாலும் அது என்னை பெரிய அளவில் பாதிக்காமல் பார்த்துக் கொண்டேன். வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம் எனது வாழ்க்கையே மாறியிருக்கிறது. நான் நாடு திரும்பும்போது எனது வாழ்க்கை முற்றிலும் வித்தியாசமானதாக இருக்கும்' என்றார்.
குவிந்தது வாழ்த்து
வெண்கலம் வென்ற சாக்ஷிக்கு சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சச்சின் தனது வாழ்த்து செய்தியில், "சாக்ஷி, நீங்கள் விடாப்பிடியாக போராடி வெண்கலம் வென்றதன் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவுக்கு பெருமை சேர்த்திருக்கிறீர்கள். வாழ்த்துகள்' என குறிப்பிட்டுள்ளார்.
துப்பாக்கிச் சுடுதல் வீரர் அபிநவ் பிந்த்ரா, மல்யுத்த வீரர் சுஷீல் குமார், குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங், இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சேவாக், வி.வி.எஸ்.லட்சுமண் உள்ளிட்ட ஏராளமானோர் சாக்ஷிக்கு சுட்டுரையில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக