வெள்ளி, 26 ஆகஸ்ட், 2016

டெல்லி JHU சமுக நீதி மாநாட்டு வாசலில் அன்புமணிக்கு கடும் எதிர்ப்பு .. கொடும்பாவி எரிப்பு !


புதுடெல்லி; நாங்கள் தலித்துகளுக்கு எதிரானவர்கள் கிடையாது என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் டெல்லியில் பேட்டியளித்தார்.
அன்புமணி ராமதாசுக்கு எதிர்ப்பு
பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் நேற்று டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற சமூக நீதி தொடர்பான கருத்தரங்கம் ஒன்றில் பங்கேற்க சென்றார். கடந்த 2 நாட்களாகவே சமூக வலைத்தளங்களில் இந்த கருத்தரங்கில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்பது குறித்து மிகவும் கடுமையான விமர்சனங்கள் பதிவு செய்யப்பட்டு வந்தன.
இந்தநிலையில் கருத்தரங்கில் கலந்து கொள்ள பல்கலைக்கழக வளாகத்திற்குள் அன்புமணி ராமதாஸ் சென்றபோது, பல்கலைக்கழகத்தில் பயிலும் தமிழ்நாடு மாணவர்கள் உள்பட மாணவர்கள் அமைப்புகளை சேர்ந்த மாணவர்கள் அவர் பங்கேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியும், கொடும்பாவி எரித்தும் தங்கள் எதிர்ப்பை காட்டினர். அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தூண்டுதலின் பேரில்... இந்த எதிர்ப்புகளை மீறி டாக்டர் அன்புமணி ராமதாஸ் கருத்தரங்கில் பங்கேற்று உரையாற்றினார். பின்னர் இதுகுறித்து நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
தற்போது காட்டப்படும் எதிர்ப்பு சில விஷக்கிருமிகளால் தூண்டிவிடப்பட்டு மாணவர்கள் இங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது பெரிய விஷயம் கிடையாது. நாங்கள் யாரும் தலித்துகளை எதிர்க்கவில்லை. தலித் என்ற போர்வையில் ஒரு சில இயக்கங்கள் இந்த மாணவர்களை திசை திருப்பி இருக்கிறார்கள்.
நான் மத்திய மந்திரியாக இருந்தபோது பல எதிர்ப்புகளுக்கு இடையிலும் அகில இந்திய நுழைவுத்தேர்வில் இட ஒதுக்கீடு கொடுக்க ஏற்பாடு செய்தேன்.
எதிரானவர்கள் அல்ல டெல்லியில் உள்ள எய்ம்ஸ் நிறுவனத்தில் தலித் மாணவர்களுக்கு பாரபட்சம் காட்டப்பட்டது. தலித் மாணவர்கள் வாலிபால் போன்ற விளையாட்டுகளில் தான் பங்கேற்க முடியும், கிரிக்கெட்டில் பங்கேற்க முடியாது என்ற நிலை இருந்தது. இதை நீக்குவதற்கு நான் யு.ஜி.சி. தலைவரின் தலைமையில் ஒரு குழுவை அமைத்து அந்த குழுவின் பரிந்துரையை அமல்படுத்தினேன். சென்னையில் உள்ள தேசிய மையத்திற்கு பண்டித அயோத்திதாசர் பெயரை வைத்தேன்.
எங்கள் கட்சிக்கு கிடைத்த முதல் மத்திய மந்திரி பதவியை தலித் எழில்மலைக்கு அளித்தோம். இந்தியாவில் வேறு எந்த அரசியல் கட்சியும் இப்படி செய்தது கிடையாது. எனவே நாங்கள் கண்டிப்பாக தலித்துகளுக்கு எதிரானவர்கள் அல்ல. எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் தலித்துகளுக்கு மேலும் பல நல்லது செய்வோம். எனவே சில விஷக்கிருமிகளின் தூண்டுதலின் பேரில் நடைபெறும் இதுபோன்ற எதிர்ப்புகளை நாங்கள் ஒரு பொருட்டாக மதிக்கவில்லை.
நாடகம் ஆடுகிறார்கள் தமிழகத்தில் இரு கட்சிகள் நாடகத்தில் ஈடுபட்டுள்ளன. இவர்கள் அவர்களைப்பற்றி பேசுவதும், அவர்கள் இவர்களை பற்றி பேசுவதும் மட்டுமே நடக்கிறது. மாற்றி, மாற்றி நாடகம் ஆடுகிறார்கள். மக்கள் இந்த நாடகத்தை பார்த்து கொண்டிருக்கிறார்கள். இது கண்டிக்கத்தக்கது, வருந்தத்தக்கது.
சட்டமன்ற மரபுகளை ஆளும் கட்சி மதித்து, எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். ஜனநாயக மரபுகளை கடைப்பிடிக்க வேண்டும். இதற்கு ஒரே வழி சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்வது தான்.
தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு வசதியான இருக்கை ஒதுக்கப்பட வேண்டும். இது அடிப்படையான தேவை. மனிதநேயத்துடன் ஆளும் கட்சி செயல்படவேண்டும். இந்த விஷயத்தில் தி.மு.க.வின் கோரிக்கை மிகவும் நியாயமானது.
இவ்வாறு அவர் கூறினார்.  dailyathanthi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக