திங்கள், 1 ஆகஸ்ட், 2016

சசிகலா புஷ்பா காங்கிரசில் or திமுகவில் ?.. கட்சித்தாவல் தடை சட்டம் சசியை கட்டுப்படுத்தாது ! அடுத்த ரவுண்ட் ஆரம்பம்?

போயஸ்கார்டன் என்றாலே அது சசிகலாதான். அவரைமீறி அங்கு ஒரு அணுவும் அசையாது என்பது தமிழகம் அறிந்த உண்மை. ஆனால் சசிகலாவையும் மீறி ஒரு சசிகலாவை ஜெயலலிதாவுக்குப் பிடித்தது என்றால் அது தூத்துக்குடி சசிகலா புஷ்பாவைத்தான்.காரணம், கட்சிக்காக அவர் உழைத்த வேகமும் கட்சியின்மீது அவர் கொண்டிருந்த நம்பிக்கையும்தான்.
ஆனால் எந்த வேகத்தில் கட்சியில் அவர் வளர்ந்தாரோ, அதே வேகத்தில் அதிமுக-வில் அவர் வீழ்ந்திருக்கிறார். யாரை அவர் வாயார அம்மா என்று அழைத்தாரோ அதே தலைமையால் இன்று தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது என்கிறார் இதைச் சொல்வது தமிழகத்தில் வைத்து அல்ல, டெல்லி மக்களவையில் சொல்கிறார். மொத்த இந்தியாவும் வேடிக்கை பார்க்க ஒரு கட்சித்தலைமையையே விமர்சிக்கும் அளவுக்கு என்ன நடந்தது?எங்கிருந்து வந்தார் இந்த சசிகலா புஷ்பா?


துறைமுக நகரமான தூத்துக்குடி அருகே உள்ள அடையல் என்ற கிராமத்தைச் சேர்ந்த சசிகலா புஷ்பா அதிமுக-வின் தீவிர விசுவாசி. அவரது கணவர் லிங்கேஸ்வர திலகனால் அரசியலுக்கு அழைத்து வரப்பட்டவர். ஆனால் லிங்கேஸ்வரனால் அரசியலில் தொட முடியாத உயரத்தைத் தொட்ட சசிகலா புஷ்பா, 2011ஆம் ஆண்டு ராதாபுரம் தொகுதி சட்டமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அப்போதைய சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக, அதிமுக கூட்டணியோடு நெருங்கிவர ராதாபுரம் தொகுதி தேமுதிக-வுக்குப் போக, அந்தத் தேர்தலில் போட்டியிட முடியாமல் போனது. ஆனாலும் கட்சிக்காக, அம்மாவுக்காக என உழைத்த சசிகலாவை அடுத்து வந்த உள்ளாட்சித் தேர்தலில் தூத்துக்குடி மேயர் வேட்பாளராக அறிவித்தார் ஜெயலலிதா. மேயராக இருந்தபோதே அவர்மீது சர்ச்சைகள் எழுந்தபோதிலும் அதை கண்டுகொள்ளாத ஜெயலலிதா, அவரை 2014ஆம் ஆண்டு ராஜ்யசபா உறுப்பினர் ஆக்கினார். தன் மேயர் பதவியை ராஜிநாமா செய்த சசிகலாவுக்கு கட்சியில் மகளிர் அணிச் செயலாளார் பதவியும், கட்சியின் கொறடா பதவியும் வழங்கப்பட்டது. மேயராக இருந்தவரை பரவாயில்லை ஆனால் எம்.பி.யானதும் அவருடைய போக்கே மாறியது. ஒரு அரசு விழாவில் தூத்துக்குடி மாநகராட்சி பெண் ஆணையர் மதுமதியிடம் இருந்து மைக்கைப் பிடுங்கி பொதுவெளியில் அவர் நடந்து கொண்ட வீடியோ இன்னும் யூ டியூப்பில் இருக்கிறது. அதன்பின்னர் அதிமுக ராஜ்யசபா வேட்பாளாராக அறிவிக்கப்பட்டு அதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்தபோது அதில் குறிப்பிட்ட கல்வித்தகுதி பற்றியும் பிறந்த தினம் தொடர்பாகவும் குழப்பம் நிலவியது. முழுக்க ஆசிரியர்கள் நிறைய குடும்பத்தில் பிறந்து ஒரே அரசியல்வாதியாக வளர்ந்த சசிகலா மாணவர்களிடம் பழகும் அதே தோரணையில் கட்சியினரிடம் பழக அவர்களே கட்சித் தலைமைக்கும் போட்டுக் கொடுத்தார்கள்.
சசிகலாவுக்கு ஒரே மகன் பெயர் பிரதீப். சென்னை லயோலா கல்லூரியில் 2013ஆம் ஆண்டு காட்சியியல் தொடர்புத்துறை மாணவனாகப் படித்தபோது சைரன் வைத்த வாகனத்தை கல்லூரிக்கே எடுத்துவந்து சக மாணவர்களோடு சேட்டை செய்த ஜாலி பையன். ஆனால் ஒரே வருடத்தில் கல்லூரியில் இருந்து விலகிச் சென்றுவிட்டார். இப்படி போய் சசிகலாவின் அரசியல் வாழ்வில் வெளிவந்ததுதான் அந்த வாட்ஸ் அப் ஆடியோ ஒரு இளைஞருடன் தனிப்பட்ட விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளும் ஆடியோ பரவலாக்கப்பட அது கட்சியின் மேலிடம் வரை பிரதிபலித்தது. கட்சியினரும் புகார் மனுக்களை தலைமைக்குத் தட்ட, அவருக்கு வழங்கப்பட்ட மகளிர் அணிச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. அதன்பின்னர் திருத்தப்பட்ட செயற்குழு உறுப்பினர் பட்டியலிலும் சசிகலா பெயர் இல்லை.
கொஞ்சம் கொஞ்சமாக, சத்தமில்லாமல் கட்சியிலிருந்து ஓரம்கட்டப்பட்ட நிலையில்தான் திமுக-வும் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவோடு நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகின. அதை வெளிப்படையாக இருவருமே மறுக்காதநிலையில் இந்தப் புகைப்படங்கள் வெளியானபின்னர் இருவருமே பிரிந்துவிட்டதாகக் கூறப்பட்ட நிலையில்தான், இப்போதைய மோதல்கள் நடந்து, அவர் அதிமுக-வில் இருந்தும் இப்போது நீக்கப்பட்டுள்ளார். இன்று தன் கட்சித்தலைமைக்கு எதிராகக் கொந்தளித்து சசிகலா புஷ்பா பேசிக்கொண்டிருந்தபோது அதிமுக உறுப்பினர்கள் எழுந்து கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். திமுக உறுப்பினர்கள் இதை அமைதியாக வேடிக்கை பார்த்தனர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியநிலையில், சசிகலா புஷ்பாவுக்கு ஆதரவாகப் பேசினார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான குலாம் நபி ஆசாத். அவர் பேசும்போது, ”யாருக்கு வேண்டுமென்றாலும் இது நடக்கலாம். ஆகவே, அந்தப் பெண் உறுப்பினரை பேச அனுமதிக்க வேண்டும். அவருக்கு உரிய பாதுகாப்பை வழங்க அரசு முன் வரவேண்டும்” என்றார். சசிகலாவுக்காக காங்கிரஸ் தலைவர் பரிந்து பேசியதும் இந்த விவகாரம் புதிய வடிவத்தை எடுத்துள்ளது. 2014இல் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்ட சசிகலா புஷ்பாவின் பதவிக் காலம் 2020ஆம் ஆண்டில்தான் முடிவடைகிறது. ஆனால் இப்போது எழுந்துள்ள சர்ச்சைகளால் அவர் அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். சசிகலா புஷ்பா மாநிலங்களவையில் பேசியபோது, குலாம்நபி ஆசாத் அவருக்கு ஆதரவாகவந்தநிலையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் பலரும் அவரை ஆதரித்தனர். அதிமுக-வில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ள சசிகலா புஷ்பா இன்னும் ஒருசில நாட்களில் காங்கிரஸ் கட்சியில் இணைவார் என்று தெரிகிறது. அதிமுக-வால் நியமிக்கப்பட்ட சசிகலா புஷ்பா, வேறு ஒரு கட்சியில் இணையும்போது அவருடைய ராஜ்யசபா உறுப்பினர் பதவி பறிபோகுமா?
கட்சித் தாவல் தடைச் சட்டம்
கட்சித் தாவல் என்பது இந்திய அரசியலில் எல்லா பெரிய கட்சிகளுக்குமே சவாலாக இருந்தது. ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகளும், குதிரைபேரங்களும் பெரும் சூதாட்டமாக உருவானபோது, ஒருகட்டத்தில் எல்லா கட்சிகளுமே கட்சிதாவும் எம்.எல்.ஏ, எம்.பி.க்களின் பதவியை பறித்துவிட வேண்டும் எனக் கோரினார்கள். இதனடிப்படையில், கட்சித் தாவல் தடைச் சட்ட திருத்த மசோதா 2003 -ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி,
ஒரு கட்சியின் எம்பியோ, எம்.எல் .ஏ வோ தானாக முன் வந்து தன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தால் அவர் அந்தக் கட்சியின் மூலமாக அடைந்த பதவியை இழந்து விடுவார். சுயேட்சையாக வென்ற ஒருவர் ஒரு கட்சியில் இணைந்தால் அவரும் பதவியை இழந்து விடுவார். தேர்தல் வேட்புமனுத்தாக்கலின் போது எந்தக் கட்சியிலும் இல்லாமல் இருந்து தேர்தலில் வென்ற பிறகு வேறு ஒரு கட்சியில் இணைந்தால் அவருடைய பதிவியும் பறிபோய் விடும். ஆனால் இரண்டு கட்சிகள் தேர்தலுக்குப் பின்னர் இணைந்தால் பதவிகள் பறிபோகாது.
சசிகலா புஷ்பாவை பொறுத்தவரை அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய வில்லை. ஆகவே அவரது எம்பி பதவி பறிபோகாது ஆனால் மாநிலங்களவையின் தலைவர், துணைத்தலைவர், சேர்மன் , டெபுடி சேர்மன் ஆகியோர்களுக்கு சசிகலா புஷ்பாவின் பதவி தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் உண்டு. அந்த அதிகாரத்தை மாற்றி அமைக்கும் உரிமை அவைக்கு உண்டு. வாக்கெடுப்பு ஒன்றின் மூலமாக பதவியை பறிக்கவோ, அவை முன்னவர்களால் பறிக்கப்பட்ட பதவியை வாக்கெடுப்பின் மூலம் வழங்கும் உரிமையும் அவைக்கு உண்டு. இப்போதைக்கு கட்சித் தாவல் என்ற பொருள் சசிகலா புஷ்பாவுக்கு பொறுந்தாது என்னும்நிலையில், இன்னும் நான்கு ஆண்டுகள் சசிகலா புஷ்பா மக்களவை உறுப்பினராகத் தொடர முடியும்.  மின்னம்பலம்.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக