செவ்வாய், 23 ஆகஸ்ட், 2016

டொனால்ட் ட்ரம்ப் : இந்தியர்களால் அமெரிக்காவுக்கு நன்மை இல்லை.. பணத்தை எடுத்து செல்கிறார்கள !


minnambalam.com  :பொதுவாக, அரசியல் கட்சிகள் தேர்தலுக்குத் தேர்தல் ஒவ்வொரு நிலைப்பாட்டை எடுத்து அதற்கேற்ப திட்டம் வகுத்து அவ்விலக்கை நோக்கிப் பயணிப்பார்கள். இதில் இந்தியா, அமெரிக்கா என்ற வேறுபாடு இல்லை. தமிழ்நாட்டில் தேர்தல் அலை ஓய்ந்து முடிந்து மூன்று மாதங்கள் ஆக, அந்த அலை இப்போது அமெரிக்காவில் ஆர்ப்பரிக்கத் தொடங்கியுள்ளது. நவம்பர் 8ஆம் தேதி நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலுக்காக ஆளும் ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனும், எதிர்க்கட்சி குடியரசுக் கட்சியில் டொனால்ட் ட்ரம்ப்பும் எதிரும்புதிருமாக தீவிரமாக களத்தில் வலம் வருகின்றனர்.
பன்முகவாதத்தை ஹிலாரியும், முழுமையான அமெரிக்கமயத்தை டொனால்ட் ட்ரம்ப்பும் முன்வைக்கின்றனர். இந்த தீவிர அமெரிக்கமயம், இந்தியாவில் இருந்து அமெரிக்கா சென்ற இந்திய மக்களுக்கு பெரும் நெருக்கடிகளைக் கொடுக்கும் என்கின்றனர் அரசியலைக் கூர்ந்து நோக்குபவர்கள். எந்தவகையில் நெருக்கடி?

தன்னை எப்போதும் வல்லரசு நாடாக பறைசாற்றிக்கொள்ளும் அமெரிக்கா, அந்தப் பெயரை தக்கவைக்க தம்மை எப்போதும் வளமாக்கிக்கொள்ள அடர்த்தியான மனிதவளம் தேவை. உற்பத்தியை, வளத்தைப் பெருக்க மனித உழைப்பு தேவை. இந்தியாவில் பெரும்பான்மையினருக்கு வெளிநாட்டு வேலை, கல்வி என்றாலே அது அமெரிக்காதான் எனுமளவுக்கு இங்கே அமெரிக்க போதை ஏற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து பண்பாட்டுரீதியாக இந்த உளவியல் கட்டமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இங்குள்ள கல்வி பெற்ற நடுத்தர வர்க்கத்தினர் பெரும்பாலானோருக்கு அமெரிக்கா சென்று பணிபுரிய வேண்டும் என்பது அவர்களின் கனவு மட்டுமல்ல; அவர்களின் பொருளாதார தேவையைத் தீர்ப்பதாக இருப்பதோடு அந்தஸ்து சார்ந்த ஒன்றும்கூட. அமெரிக்காவிலோ உழைப்பைச் செலுத்த மனிதவளம் தேவையென்றாலும் உள்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு அதிக ஊதியம் (உண்மையில் நியாயமான ஊதியம்) தர வேண்டும். குறைந்த ஊதியத்தில் அதிக உழைப்பைக் கொடுக்க வேண்டியவர்கள் தேவை. இந்த இருதரப்புத் தேவையும் ஒருபுள்ளியில் இணைகிற இடமே இந்திய மக்கள் அமெரிக்கா சென்று பணிபுரிவதாகும். அமெரிக்காவின் வளத்தைப் பெருக்க அவர்களுக்கு இந்திய மூளை ஒரு நல்ல நுகர்பொருளாக இருக்கிறது. இதற்கான ஹெச் 1 பி விசா சட்டம் 1990ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்த ஹெச் 1 பி விசா திட்டத்தின்மூலம் நிறுவனங்கள், வெளிநாடுகளிலிருந்து வேலைக்கு வரும் ஊழியர்களுக்குக் குறைவான ஊதியம் கொடுத்து தங்கள் லாபத்தை அதிகரித்துக்கொண்டு வருகின்றன. அங்கே கிடைக்கும் ஊதியம் இந்தியாவில் உள்ள குடும்பங்களின் பொருளாதாரத் தேவைகளை தீர்க்க போதியதாகவும் உள்ளது. இதன் காரணமாகவே, ஆண்டுக்கு ஆண்டு அமெரிக்கா செல்ல இந்தியாவில் விசா வாங்குபவர்கள் எண்ணிக்கை லட்சங்களைக் கடந்து பெருகி வருகின்றன. குறிப்பாக, மென்பொருள் நிறுவனங்களின் மூலம் அமெரிக்காவுக்கு வேலைக்குச் செல்லும் நபர்கள் அதிகம். அவர்களில் பலர் அங்கே செட்டிலாவதும் பெருகி வருகிறது. ஒருகட்டத்தில் இந்தவகையான பணிகள் அங்கே அமெரிக்காவில் உள்ள தொழிலாளர்களின் உரிமையைப் பறிப்பதாக கருதப்பட அங்கே எதிர்க்குரல்கள் ஒலிக்கத் தொடங்கின. இதை உள்வாங்கி அனைத்து தரப்புக்குமான ஒரு வழியை தேடாமல், தமது அரசியல் நலனுக்கான ஒரு கருவியாக எடுத்துக்கொண்டார் டொனால்ட் ட்ரம்ப்.
எனது நிறுவனங்களிலேயே வெளிநாட்டு நபர்களை குறிப்பாக, நிறைய இந்தியர்களை பணியில் அமர்த்தியுள்ளேன். அவர்கள் நம்மிடம் ஊதியம் பெற்று இந்தியாவுக்கு எடுத்துச் செல்கின்றனர். நமது மக்களுக்கு இதனால் நன்மை ஏற்படவில்லை. இது அமெரிக்காவுக்கும், அமெரிக்க மக்களுக்கும் எதிரானது என்பதை இப்போதுதான் நான் உணர்ந்துகொண்டேன். எனவே, அமெரிக்காவில் இனி குடியேற்றத்தை அனுமதிக்க மாட்டேன். ‘அமெரிக்கா வேறு யாருக்கும் சொந்தமானதல்ல; அமெரிக்கா இனி அமெரிக்கர்களுக்கே’ என, தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகிறார். ஏற்கனவே, இஸ்லாமியர்கள் அமெரிக்காவில் குடியேறியதால் இங்கே பயங்கரவாதம் பெருகிவிட்டது என்று இஸ்லாமியர்களுக்கு எதிராக தொடர்ந்து பரப்புரை மேற்கொண்டு வருகிறார். ட்ரம்பின் இப்படிப்பட்ட பரப்புரை பச்சையான இனவாதம் என்று அங்குள்ள இடதுசாரி சிந்தனையாளர்கள், சர்வதேச ஜனநாயக சக்திகள் விமர்சிக்கின்றன. அதேநேரம் ஹிலாரி கிளிண்டன், ‘இங்கே எந்த நாட்டினருக்கும் அமெரிக்க சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டு பணிபுரிய உரிமையுள்ளது. ஆனால் அவர்களின் உழைப்பும், சேவையும் அமெரிக்காவின் முன்னேற்றத்துக்காக இருக்க வேண்டும்’ என்று பரப்புரை நிகழ்த்திவருகிறார். குறிப்பாக, ஹெச் 1 பி விசாவுக்கு எதிரான நிலைப்பாடு எடுக்கமாட்டேன் என்றும் பேசிவருவதாக ஜனநாயகக் கட்சி ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர். ஆண்டுதோறும் அமெரிக்காவில் வழங்கப்படும் 85,000 விசாக்களில் பெரும்பாலும் ஐ.டி. துறையைச் சார்ந்தவர்களே இந்தியாவிலிருந்து அமெரிக்கா செல்கின்றனர். இதன்மூலம் மட்டுமே சுமார் பத்து லட்சம் கோடி ரூபாய் வருமானத்தை இந்தியாவில் உள்ள ஐ.டி. துறையினர் பெறுகின்றனர். இனவாதம் பேசும் டொனால்ட் ட்ரம்பின் பரப்புரை வெற்றிபெற்றால், இந்தியாவைச் சேர்ந்தவர்கள் அமெரிக்கப் பணிக்கு செல்வது தடையாகும். ஆனாலும் அமெரிக்காவில் இருந்து வெளிவரும் கருத்துக்கணிப்புகளில் சற்று முன்னோக்கிச் செல்கிறார் ஹிலாரி கிளிண்டன். அந்த முன்னேற்றம் என்பது நூலிழையளவு இடைவெளி கொண்டதாகவே பயணத்தைத் தொடர்கிறது என்பதையும் மறந்துவிட முடியாது.
தொகுப்பு:சே.த.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக