ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2016

தீவிரமடையும் வழக்கறிஞர்கள் போராட்டம்

வழக்கறிஞர்களை பழிவாங்கக் கூடிய வகையில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய சட்டத்திருத்தத்தை வாபஸ் பெற வேண்டும்’ என்று கூறி, தமிழகம் மற்றும் புதுவையைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் நீதிமன்றப் புறக்கணிப்பு உள்ளிட்ட போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இந்தப் போராட்டத்தின் தொடர்ச்சியாக, ஜூலை 25ஆம் தேதி உயர்நீதிமன்ற முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில், தமிழகம் முழுவதிலிருந்தும் ஆயிரக்கணக்கான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
முற்றுகைப் போராட்டத்துக்கு முதல் நாள், அகில இந்திய பார் கவுன்சில், ஒருங்கிணைந்த போராட்டக் குழுவில் உள்ள 126 வழக்கறிஞர்களை அதிரடியாக சஸ்பெண்ட் செய்தது. இதையடுத்து, கடந்த 28ஆம் தேதி, தமிழகம் மற்றும் புதுவை வழக்கறிஞர்கள் சங்க கூட்டுக்குழுவின் கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது. இதில், ‘126 வழக்கறிஞர்களின் சஸ்பெண்ட் வாபஸ் பெறும் வரை போராட்டம் தொடரும்’ என்றும், ‘ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை நீதிமன்றப் புறக்கணிப்பு போராட்டம் தொடர்ந்து நடைபெறும்’ என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், வழக்கறிஞர்கள் கூட்டுக்குழுவின் செயற்குழுக் கூட்டம் மதுரையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பிறகு, கூட்டுக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் திருமலைராஜன் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “வரும் திங்கள் (ஆகஸ்ட் 8) முதல் வழக்கறிஞர்களின் நீதிமன்றப் புறக்கணிப்பு போராட்டம் தொடரும். ஆகஸ்ட் 9 மற்றும் 10ஆம் தேதிகளில், மாவட்ட நீதிமன்றங்களின் முன் உண்ணாவிரதப் போராட்டமும், 11 மற்றும் 12ஆம் தேதிகளில் மறியல் போராட்டமும் நடைபெறும்.

மேலும் ஆகஸ்ட் 15ஆம் தேதி, சுதந்திர தினந்தன்று, வாயில் கறுப்புத்துணி அணிந்து, காந்தி மற்றும் அம்பேத்கர் புகைப்படத்துக்கு மனு அளிக்கும் போராட்டம் நடைபெறும். அதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 16, 17, 18 மற்றும் 19ஆம் தேதிகளில் உயர்நீதிமன்றத்தின் முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும். ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் உண்ணாவிரதத்தில் கலந்து கொள்வார்கள். உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ளும்போது, நீதிபதிகள் குழுவிடம் எங்கள் கருத்தைத் தெரிவிப்போம்.

ஆகஸ்ட் 19ஆம் தேதி முற்றுகைப் போராட்டம் நடைபெறும். ஆனால், இந்தப் போராட்டம் உயர்நீதிமன்றத்துக்குப் பதில், கிரீன்வேஸ் ரோடு, கடற்கரை சாலையில் முற்றுகைப் போராட்டம் நடைபெறும். மேலும், சுமார் 50 ஆயிரம் வழக்கறிஞர்கள் கலந்து கொள்ளும் போராட்டம், டெல்லி உச்சநீதிமன்றத்தில் நடத்தப்படும். தமிழகத்தின் கீழமை நீதிமன்றங்களில் எந்தப் பணிகளும் நடைபெறவில்லை. வரும் திங்கள் கிழமை முதல் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்களும் எங்களுக்காக குரல் கொடுப்பார்கள்” என்று திருமலைராஜன் தெரிவித்தார். இதையடுத்து, வழக்கறிஞர்களின் போராட்டம் மேலும் தீவிரமடையும் என்று தெரிகிறது.  மிம்மம்பலம்.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக