சனி, 27 ஆகஸ்ட், 2016

பூங்குன்றனுக்கு 'கல்தா' கொடுத்ததா கார்டன்? -வில்லங்கம் விளைவித்த விடுமுறை

விகடன்.காம்     அதி.மு.க தொண்டர்களைப் பொறுத்தவரையில், கார்டன் என்றாலே அது பூங்குன்றன் மட்டும்தான். ' தற்போது கார்டனில் இருந்து அவரை அனுப்பிவிட்டார்கள். புதிதாக கார்த்திகேயன் என்பவரை நியமித்துவிட்டார்கள்' என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. 
போயஸ் கார்டனைப் பொறுத்தவரையில், பல நேரங்களில் சர்ச்சைகளில் சிக்கும் பெருமை பூங்குன்றனுக்கு மட்டுமே உண்டு. மாவட்டங்களில் அமைச்சர்கள் முதல் அடிப்படைத் தொண்டர்கள் வரையில் எழுப்பப்படும் குற்றச்சாட்டுகளை முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு செல்பவர் அவர். " தினம்தோறும் கார்டன் முகவரிக்கு ஏராளமான கடிதங்களை அனுப்பி வருகின்றனர் தொண்டர்கள். இதில், அமைச்சர்கள் மீதான புகார்களை தலைமையின் கவனத்திற்கே கொண்டு போகாமல் இருட்டடிப்பு செய்கிறார். நாங்கள் கொடுக்கும் புகார்களை கிடப்பில் போட்டுவிடுகிறார்.
இதனால் முதல்வருக்கு எங்களுடைய கோரிக்கைகளைத் தெரியப்படுத்த முடிவதில்லை. பல மாவட்டங்களில் கட்சி நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பு வருவதற்கு பூங்குன்றன்தான் காரணம்" என ஆதங்கப்பட்டார் அ.தி.மு.க நிர்வாகி. தொடர்ந்து,
" சசிகலா புஷ்பா விவகாரம் இந்தளவுக்குப் பேசப்படுவதற்கு அவர்தான் காரணம். தொடக்கத்தில் இருந்தே சரியாகக் கையாண்டிருந்தால் விவகாரம் இந்தளவுக்கு வந்திருக்காது என்ற பேச்சு தொண்டர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. இதனால் முதல்வர் கோபத்தில் இருப்பதாகவும் சொல்கிறார்கள். சின்னம்மாவின் ஆசி இருப்பதால்தான் பாரபட்சமாக செயல்படுகிறார். அவரைத் தாண்டி அம்மாவிடம் குறைகளைச் சொல்ல முடிவதில்லை. கார்டனுக்குள் நீண்டகாலம் கோலோச்சுவதால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. அவரை உண்மையிலேயே நீக்கிவிட்டார்களா என்று தெரியவில்லை" என்றார் குமுறலோடு. 
பூங்குன்றனை கார்டன் வீட்டுக்கு அனுப்பியது உண்மையா? என விசாரித்தோம். நம்மிடம் பேசிய கார்டன் ஊழியர் ஒருவர், " பூங்குன்றனின் அப்பா, சசிகலாவுக்கு ஆசிரியராக இருந்தவர். தொடக்க காலத்தில் இருந்தே அவர்களது குடும்பத்தின் மீது சசிகலாவுக்கு பாசம் உண்டு. அந்த அடிப்படையில்தான் பூங்குன்றனை கார்டனுக்குள் கொண்டு வந்தார். பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக உதவியாளராக இருந்து வருகிறார் பூங்குன்றன். நமது எம்.ஜி.ஆர் பத்திரிகையின் நிர்வாக பொறுப்பு முதல் அனைத்துப் பணிகளையும் அவர்தான் கவனிக்கிறார். மாவட்டங்களில் உள்ள கட்சித் தலைமை அலுவலகக் கட்டடங்களே, பூங்குன்றனின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. போயஸ் கார்டனில் நடக்கும் எந்த விஷயமாக இருந்தாலும், பூங்குன்றனைத் தாண்டிச் செல்லாது என்பது கட்சிக்காரர்கள் அனைவருக்கும் தெரியும். அவரது விசுவாசத்தில் முழு நம்பிக்கை இருப்பதால்தான் இவ்வளவு பணிகளையும் ஒப்படைத்திருக்கிறார்கள். அவர் மனைவிக்கு வயிற்றில் பிரச்னை இருப்பதால், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்திருக்கிறார். அருகில் இருந்து கவனிக்க வேண்டிய பணிகள் இருப்பதால், முதல்வர் அனுமதியோடு சில நாட்கள் விடுமுறை எடுத்திருக்கிறார். அவர் வரும் வரையில் கார்டன் பணிகளை கவனிப்பதற்காக, கார்த்திகேயனை நியமித்திருந்தனர். அதுவே, ' பூங்குன்றனை மாற்றிவிட்டார்கள்' என்றரீதியில் தகவல் பரவுவதற்கு காரணமாக அமைந்துவிட்டது. தற்போது மீண்டும் கார்டன் பணிகளுக்குத் திரும்பிவிட்டார் பூங்குன்றன்" என்றார் . 
' எங்களுடைய புகார்களை அம்மா கவனத்திற்கு அனுப்பாமல் மறைக்கிறார் பூங்குன்றன்' என்ற சர்ச்சை மீண்டும் அணிவகுக்காமல் இருந்தால் சரி...!
ஆ.விஜயானந்த்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக