செவ்வாய், 9 ஆகஸ்ட், 2016

நடிகர் சந்திரபாபுவுக்கு எம்ஜியார் செய்த துரோகம்... படமும் முடிக்கவில்லை பணமும் திருப்பி கொடுக்கவில்லை...செத்தார் சந்திரபாபு


சுடுகின்ற நிஜங்கள் எம்.ஜி.ஆர். இறந்து 29 வருடங்கள்ஆகிவிட்டன. சந்திரபாபு இறந்து 42 வருடங்கள் ஆகிவிட்டன.  அமரர் ஆகிவிட்ட இந்த இருவர்குறித்தும் இங்கே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. சந்திரபாபுவின் பிறந்த நாள் ஆகஸ்ட் 4 என்பதால், அவரைநினைவு கூரும் விதமாகவே இந்தக் கட்டுரை. ஒருமனிதன் எல்லோருக்கும் நல்லவனாக இருந்து விட முடியாது. பலரிடமும் நட்பு பாராட்டும் ஒருவன், ஒரு சிலரிடம் பகைமை கொண்டவனாகவும் இருப்பான். இது இயல்பானதே. இதற்குஎம்.ஜி.ஆரும் விதிவிலக்கு அல்ல. அவரைப் போற்றியும் புகழ்ந்தும் எண்ணிலடங்கா கட்டுரைகள்வந்திருக்கின்றன. இது அந்த ரகம் அல்ல. எம்.ஜி.ஆரின் இன்னொரு முகத்தை வெகு சிலரே அறிவார்கள். அவர்களில் சந்திரபாபுவும் ஒருவர். கவலை இல்லாத மனிதனாக வாழ்ந்த சந்திரபாபு, சோகக் கடலில் மூழ்கி இறந்ததன் பின்னணியில்என்னென்னவோ இருக்கின்றன.
“செத்துட்டா? மன்னிச்சிரலாமா? அப்ப ஹிட்லரையும் மன்னிச்சிரலாமா?” என சிவாஜிநடித்த விஸ்வரூபம் திரைப்படத்தில் ஒரு வசனம் வரும்.
 இறந்தவர்களை தெய்வமாக வணங்குவதும், அவர்களின் பெருமை பேசுவதும், புகழ் பரப்புவதும் வழக்கமான நடைமுறை ஆகிவிட்டது. அப்படியென்றால், அவர்கள்வாழ்ந்த காலத்தில் செய்த பிழைகளையும், அதனால்ஏற்பட்ட நிரந்தர வடுக்களையும் கவனத்தில் கொள்ளவே கூடாதா?


நமக்கு நம் சமகால அரசியல்வாதிகளின் குணங்களைப் பற்றி தெரிகிறது. ஆனால் நம் முந்தைய தலைமுறை அரசியல்வாதிகள் மீதான நமது எண்ணம் பெரும்பாலும் ‘glorify’ செய்யப்பட்டதாகவே இருக்கிறது. காந்தி, நேரு, ராஜாஜி, பாலகங்காதர் திலகர், எம்.ஜி.ஆர். என இந்தப் பட்டியலின் நீளம் மிக மிக அதிகம். இந்த தலைவர்களின் ஒருசில முகங்கள் நல்லவைகளாக இருந்திருக்கலாம். ஆனால் இறந்துவிட்டார்கள் என்ற ஒரே காரணத்திற்காக அந்த நல்ல முகங்களை மட்டுமே பிரதானப்படுத்துவதுஉண்மை விரும்பிகளுக்கு உடன்பாடானது அல்ல. இந்தக்கட்டுரையும் உண்மையை மட்டுமே பேசப் போகிறது.
சந்திரபாபு மிகச் சிறந்த நடிகர், பாடகர், இசையமைப்பாளர். தான்பாடிய நிறைய பாடல்களுக்கு Ghost music directorஆக இருந்திருக்கிறார்.  நடனக் கலைஞரும் கூட. 46 வயதிலேயே இறந்துவிட்ட அவரைப் பற்றி பேசும்போதெல்லாம் நிஜத்தை அறிந்த பலரும்  அவரது இறப்புக்கு எம்.ஜி.ஆரும்ஒரு காரணம் என்று குறிப்பிடாமல் இருக்க மாட்டார்கள். ஏன்அப்படிச் சொல்கிறார்கள்?
சந்திரபாபுவின்திமிர்!
சந்திரபாபு திரையுலகத்தில் கொடி கட்டிப் பறந்த காலம் அது. மனதில் பட்டதை ஒளிவுமறைவில்லாமல், எந்த மேற்பூச்சும் இல்லாமல் வெளிப்படையாகச் சொல்லக் கூடிய கர்வமிகு கலைஞன் சந்திரபாபு. சிலர் அவரது இந்த குணத்தை திமிராகவும், சிலர் பைத்தியக்காரத்தனமாகவும் கூட வர்ணித்திருக்கிறார்கள். ஆனால் உண்மையில் சந்திரபாபுவின் இயல்பே அப்படித்தான்! ஒருவேளை சோற்றுக்குக் கூட வழியில்லாத நேரத்தில், சிகரட் வாங்கித்தருகிறேன் என யாரேனும் நண்பர்கள் சொல்லும்போது, “என் ப்ராண்ட் கோல்டு ஃப்ளாக். ஒண்ணு பதினைஞ்சு பைசா. முடிஞ்சா அத வாங்கிக்கொடு. இல்லேனா வேணாம்” என்பாராம்! அதனால் சந்திரபாபுவின் திமிர் இடையில் வந்ததல்ல என்பதை நாம் தெரிந்துகொள்ளலாம்.
 எம்.ஜி.ஆருக்கு வாய்த்த சந்தர்ப்பம்!
எம்.ஜி.ஆரை சின்னவர், வாத்தியார் என சினிமாத்துறை அழைத்துக் கொண்டிருக்க, ‘மிஸ்டர் எம்.ஜி.ஆர்’ என்று அழைத்த ஒரே ஆள் சந்திரபாபு. அப்போதைய சினிமா பத்திரிக்கைகளில் தான் அளித்த பேட்டிகளிலும், கட்டுரைகளிலும்  இதனைக் குறிப்பிட்டிருக்கிறார். அனைவரும் தன்னை மட்டுமே புகழ வேண்டும். எல்லாவற்றிலும் தான் மட்டுமே தெரிய வேண்டும் என்று நினைப்பவர் எம்.ஜி.ஆர் என்று ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார் சந்திரபாபு.  இதனால் எம்.ஜி.ஆரின்வெறுப்புக்கு ஆளாகி இருக்கிறார். எம்.ஜி.ஆர். அப்படி கிடையாது. வெளிப்படையாக கோபத்தைக் காட்ட மாட்டார். சந்திரபாபு மீது தனக்குள் கனன்று கொண்டிருந்த கோபத்தை, பழியை,  தீர்த்துக்கொள்ள எம்.ஜி.ஆருக்கு ஒரு அருமையான சந்தர்ப்பம் வாய்த்தது. கர்வம் நிறைந்த வெள்ளந்தியான சந்திரபாபுவே அதற்கு  வழி அமைத்துக் கொடுத்தார்!


விஜி எனப்படும் வி.கோவிந்தராஜூலுவும், தயாரிப்பாளர் சுப்பையாவும் படம் தயாரிப்பதைப் பற்றி சந்திரபாபுவிடம் பேசிக்கொண்டிருந்தபோது, தன் மனதில் இருந்த மாடிவீட்டு ஏழை கதையைச் சொன்னார் சந்திரபாபு. மிகவும் புரட்சிகரமான கருத்துக்களை நகைச்சுவையாய் சொல்லும் கதையாக இருந்ததால் அவர்களுக்கு மிகவும் பிடித்து விட்டது. ஆனால் அப்போது பரபரப்பாக நடித்துக்கொண்டிருந்த எம்.ஜி.ஆர் தான் கதாநாயகனாக நடிக்கவேண்டும் என்று  அவர்கள் கண்டிஷன் போட, சந்திரபாபுவும் அதற்கு ஒப்புக்கொண்டார். இதுகுறித்து எம்.ஜி,ஆரைச் சந்திக்கப்போனபோது இருவரும் ஏதேதோ பேசிவிட்டு, இறுதியில் விசயத்திற்கு வந்தார்கள். உடனே ஒப்புக்கொண்ட எம்.ஜி.ஆர் தன் சம்பளமாக ஒரு பெரிய ஆறிலக்கத் தொகையைக் கேட்டார். அதில் பாதியை வெள்ளையாகவும், மீதியை கறுப்பாகவும் கொடுக்கவேண்டும் என்ற கண்டிஷனுடன். (இதை எல்லாம் பிலிமாலயா பத்திரிக்கையில் தன் ‘மாடி வீட்டு ஏழை’ தொடரில் எழுதியிருக்கிறார் சந்திரபாபு) கண்டிஷன்களுக்கு ஒப்புக்கொண்ட சந்திரபாபு பூஜை தேதியை அறிவிக்கும்போது முன்பணம் 25000ரூபாயைக் கொடுக்கிறேன் என கூறிவிட்டு வந்தார்.
பின் விஜியும், சுப்பையாவும் சந்திரபாபுவையும் ஒரு பங்குதாரராகச்சேரும்படி வற்புறுத்த,  கதை மேல் கொண்ட நம்பிக்கையில் சம்மதித்து அனைத்து பத்திரங்களிலும் கையெழுத்து போட்டார் சந்திரபாபு. தேதி குறிக்கப்பட்டு சந்திரபாபுவின் தோழி சாவித்திரி கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். கண்ணதாசன் இரண்டு பாடல்களை எழுதி 10000 ரூபாய் வாங்கிக் கொண்டார். அடுத்து எம்.ஜி.ஆருக்கு முன்பணம் கொடுக்கவேண்டிய கட்டம்.


இந்த காலகட்டத்தில் சுப்பையாவிடம் நிறைய பணம் புழங்கியதால் ஒரே நேரத்தில் எட்டு படங்களை அறிவித்து யாருமே எதிர்பாரா வண்ணம் மொத்தமாக திவாலானார்.  வி.ஜியோ தலைமறைவே ஆகிவிட்டார்! அதிர்ச்சியடைந்த சந்திரபாபு சாவித்திரியிடம் 25000 ரூபாய் கடன் வாங்கி அதை எம்.ஜி.ஆரின் தோட்டத்தில் அவரைச் சந்தித்துக் கொடுத்தார். இந்த சம்பவத்தை சந்திரபாபு,  ‘25000 ரூபாய் பணத்தைப் பெற்றுக்கொண்டு, “பாபு சார். அருமையாகச் செய்துவிடுவோம். போய் வேலையைப் பாருங்கள்” எனக்கூறிவிட்டு ஒரு மரத்தடிக்குச் சென்று ரூபாய் நோட்டுக்களை இடுப்பில் செருகிக் கொண்டார். அவ்வளவுதான். அவர் வயிற்றில் என் பணம் சங்கமம் ஆகிவிட்டது’ என்று எழுதியிருக்கிறார்.


பிறகுதான் எம்.ஜி.ஆரின் பழிவாங்கும் படலம் ஆரம்பித்தது. சந்திரபாபுவோ கடனுக்கு மேல் கடன் வாங்கி படத்தை வளர்க்க, எம்.ஜி.ஆரோ நான்கு நாட்கள் மட்டும் படப்பிடிப்பிற்கு வந்துவிட்டு பின் வருவதையே நிறுத்திக் கொண்டார். சந்திரபாபு அலையாய் அலைந்து ஒரு ஸ்டூடியோ வாசலில் எம்.ஜி.ஆரைக் கண்டுபிடித்து அவரிடம் பேசப் போயிருக்கிறார். பாபுவைக் கவனித்துவிட்ட எம்.ஜி.ஆர் அங்கிருந்த அசோகனை அழைத்து அரைமணி நேரம் ஏதேதோ பேசி பாபுவை கவனிக்காதவர் போலவே அரை மணி நேரத்திற்கும் மேலாக கால் கடுக்க நிற்க வைத்திருக்கிறார். பின் ஒருவழியாக ‘கால்ஷீட்டை எல்லாம் அண்ணன் தான் பார்த்துக்கொள்கிறார். அவரிடம் பேசிக்கொள்ளுங்கள்” எனக் கூறி சென்றுவிட்டாராம் எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆரின் அண்ணனை அடிக்கப்பாய்ந்த சந்திரபாபு!
பாபு தன் சொத்துக்கள் அனைத்தின் மீதும், புதிதாக 19 கிரவுண்டில் தான் கட்டிவந்த வீட்டின் மீதும் கடன் வாங்கி 3000 அடிவரை படத்தை எடுத்தபின் படம் எம்.ஜி.ஆரின் கால்ஷீட் கிடைக்காததால் நின்றிருக்கிறது. ஆசை ஆசையாக தான் கட்டிய வீட்டைப் பற்றி மனோரமாவிடம், “மனோரமா..  கீழேயிருந்து கார் நேரா ரெண்டாவது மாடிக்கு போய் நிக்கிற மாதிரி 19 கிரவுண்டுல ஒரு வீடு கட்டிட்டு இருக்கேன். அப்படி ஒரு வீட்டை எங்கயாவது பாத்தா சொல்லு.. குண்டு வச்சிடுவோம்..” என்று வேடிக்கையாகச் சொன்னாராம். “படப்பிடிப்பு நாள் தள்ளிப்போக தள்ளிப்போக விநியோகஸ்தர்களும், கடன் கொடுத்தவர்களும் என் கழுத்தை நெறிப்பார்கள். தயவுசெய்து எம்.ஜி.ஆரின் கால்ஷீட் கொடுங்கள்” என எம்.ஜி.ஆரின் அண்ணன் சக்கரபாணியைப் பார்த்துக் கெஞ்சிய சந்திரபாபுவிற்கு அவமரியாதையும், கெட்டவார்த்தைகளில் அர்ச்சனையும் மட்டுமே கிடைத்திருக்கிறது. கோபமடைந்த சந்திரபாபு ஒருகட்டத்தில் பொறுமையிழந்து அங்கிருந்த சேரை எடுத்து சக்கரபாணியை அடிக்கப் பாய்ந்திருக்கிறார். அன்றோடு அவ்வளவுதான்! புகழின் உச்சியில், பணத்தின் உச்சியில் இருந்த சந்திரபாபு ஒட்டுமொத்தமாய் சரிந்து விழுந்தார்.


சந்திரபாபு குடி விரும்பி. அதுவும் மேல்நாட்டு ஸ்டைலில் குடிப்பதை மிகவும் விரும்புகிறவர். ஆனால் அவரிடம் இருந்த ஒரு நல்லபழக்கம், படப்பிடிப்பு நாளில் என்ன ஆனாலும் குடிக்க மாட்டார். அப்படிப்பட்ட சந்திரபாபு முழுநேரக் குடிகாரனாக, போதை மருந்துக்கு அடிமையாக மாறியதை இப்படிச் சொல்கிறார், “தினமும் அளவோடு குடிப்பவன் நான். என்றைக்கு ‘மாடி வீட்டு ஏழை’ படம் எடுக்கத் துணிந்தேனோ அன்றிலிருந்து மொடாக்குடியனாக மாறிவிட்டேன். பின் அதுவும் பத்தாமல் ‘பெத்தடின்’ எனும் போதைமருந்துக்கும் அடிமையாகிவிட்டேன்”.
சந்திரபாபுவை தாங்கிப் பிடித்த ஜெயலலிதா!
சந்திரபாபுவின் வாழ்க்கையில் நடந்த இன்னொரு சம்பவம் எம்.ஜி.ஆரின் இன்னொரு முகத்தையும் காட்டுவதாய் இருக்கிறது.
மாடி வீட்டு ஏழை நட்டத்திற்குப் பின் சீரழியத் துவங்கிய சந்திரபாபுவின் வாழ்க்கை நாளடைவில் மொத்தமாகக் கெட்டது. போதைப் பழக்கத்தால் உடல்நிலை கெட, பட வாய்ப்புகளும் இல்லை. எப்போதாவது ஏதாவது ஒரு படம் என வாய்ப்பு வந்தது. இரண்டு வருடங்கள் கழித்து எம்.ஜி.ஆருடன் ‘அடிமைப் பெண்’ படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. உணவுக்கே கஷ்டப்பட்ட நிலையில் அதற்கு ஒப்புக்கொண்டார் சந்திரபாபு.  ஒரு காட்சியில் சந்திரபாபுவும், ஜெயலலிதாவும் ஒரு சுவர் மேல் ஏறி தப்பிப்பதைப் போல் காட்சி. சந்திரபாபு தவறி விழப் போக அவரை தாங்கிப் பிடித்து காப்பாற்றியிருக்கிறார் ஜெயலலிதா. அதோடு படப்பிடிப்பிற்கு ப்ரேக் விடப்பட்டிருக்கிறது.
ஜெயலலிதா மீது எம்.ஜி.ஆருக்கு கோபம்!
அடிமைப்பெண் படப்பிடிப்பின் போது எம்.ஜி.ஆர், சந்திரபாபு, ஜெயலலிதா என மூவரும் சாப்பிட அமர்ந்திருக்கிறார்கள். முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு அமர்ந்திருந்த எம்.ஜி.ஆருக்கு அவர் வீட்டிலிருந்து உணவு வந்துவிட்டது. சந்திரபாபுவுக்கோ வரவில்லை!  “என்ன சாப்பிடலையா?” என்று கேட்ட எம்.ஜி.ஆர், “இன்னைக்கு என் சாப்பாட்டை சாப்பிடுங்கள்” என ‘ஒருமாதிரி’யாகக் கூறிவிட்டு எழுந்துபோயிருக்கிறார். ஏன் கோபமாக இருக்கிறார் என குழம்பியிருந்த சந்திரபாபுவிடம் “நான் உங்களைப் பிடித்து தூக்கினேன் இல்லையா? அது அவருக்குப் பிடிக்கவில்லை” என ஜெயலலிதா சொல்லி தெளிவுபடுத்தியிருக்கிறார்.


இதில் என்ன கொடுமை என்றால் சந்திரபாபு ஜெயலலிதாவின் குடும்ப நண்பர். சிறு வயதிலிருந்தே ஜெயலலிதா சந்திரபாபுவை “அங்கிள்”என்றுதான் அன்பொழுக கூப்பிடுவாராம்! அப்படி உறவு கொண்டிருந்த ஒருவரைக் காப்பாற்றியதற்காகத்தான் எம்.ஜி.ஆருக்கு அப்படிஒரு கோபம்!!
இந்த சம்பவங்களுக்குப் பிறகு சந்திரபாபு வாழ்ந்தது மிக சொற்பகாலம்தான். சகலகலா வல்லவனாக விளங்கிய சந்திரபாபு நாற்பத்தியாறு வயதிலேயே தன் உடல்வலுவை எல்லாம் இழந்து, ஒரு சொத்தும் இல்லாமல் பிச்சைக்காரராக செத்தார். அவரது கடைசி காலத்தில் அவரைப் பார்த்துக்கொண்ட மூன்று நண்பர்கள் தேங்காய் சீனிவாசன், எம்.எஸ்.விஸ்வநாதன் மற்றும் தயாரிப்பாளர் பாலாஜி. அவரது இறுதிச் சடங்கையும் இவர்களே செய்தனர்.
எம்.ஜி.ஆரைப் பற்றிய சந்திரபாபுவின் அனுபவங்களை அவர் எழுத்திலேயே உணர்ச்சி பொங்க படிக்கும் போது, “what you see is the tip of an iceberg” என மனிதர்களின் குணத்தைப் பற்றி சிக்மண்ட் ஃப்ராய்டு சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது! மனிதர்கள் முழுமையான புரிதலுக்கு அப்பாற்பட்டவர்கள். அவர்களை நல்லவர்கள், கெட்டவர்கள் என அவ்வளவு சுலபமாக அட்டவணைப் படுத்திவிட முடியாது! மனிதனின் குணம் ஆழமானது, புதிரானது. அதை முற்றிலும் புரிந்துகொள்ள நிச்சயமாக வேறொரு மனிதனால் முடியாது! ஏன்? சில நேரங்களில் அந்தந்த மனிதனுக்கே கூட அது முடியாத காரியம் தான்!
உச்ச நடிகர்களின் பகையைச் சம்பாதித்த பத்திரிக்கை பேட்டி!
இங்கே சந்திரபாபுசெய்ததெல்லாம் சரி என்று சொல்லிவிட முடியாது. அப்படிஒரு காரியத்தைச் செய்துதான் பலரது வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டார். மது அருந்திய நிலையில் சந்திரபாபு பத்திரிக்கைஒன்றுக்கு அளித்த பேட்டி இது –
cb
ஜெமினி கணேசன் பத்தி என்ன நினைக்கிறிங்க?
அவன் என்னோட ஆதி கால நண்பன். திருவல்லிகேணியில குப்புமுத்து முதலி தெருவில ஒரு மாடியில நான் குடியிருந்தேன். அப்பா அவன்தாய் உள்ளம்படத்துல நடிச்சிகிட்டிருந்தான். அப்ப அவனுக்கு காமெடி எப்படி பண்ணனும், பேத்தாஸ்னா எப்படி பண்ணனும், லவ் சீன எப்படி பண்ணனும்னு  நான் நடிச்சி காட்டினேன். அடே அம்பி, இத்தனை வருஷம் ஆச்சேடா, இன்னும் நடிப்புல எந்த முன்னேற்றத்தையும் காணுமேடா. நீ போன ஜென்மத்துல வட்டி கடை வச்சிருந்திருப்படா, படுபாவி.
சிவாஜி கணேசன் பத்தி உங்க அபிப்ராயம் என்ன?
அவர் நல்ல நடிகர். பட், அவரை சுத்தி காக்கா கூட்டம் ஜாஸ்தி இருக்கு. அந்த ஜால்ரா கூட்டம் போயிடிச்சின்னா அவர் தேறுவார்.
எம்.ஜி.ஆர். பத்தி உங்க அபிப்ராயம் என்ன?
அவர் கோடம்பாக்கத்துல ஒரு ஆஸ்பத்திரி கட்டுறதா கேள்விப்பட்டேன். பேசாம அங்கே அவரு கம்பவுண்டரா போகலாம்.
அந்த மூன்று உச்ச நடிகர்களும், சந்திரபாபுவிடம் இருந்து விலகிச் செல்ல காரணமாக அமைந்தது இந்தப் பேட்டிதான்.
நடிகருக்கு பட்டம், பாராட்டெல்லாம் தேவைதானாபட்டங்களும், கேடயங்களும், கோப்பைகளும் வழங்கப்படும்போது அதை சினிமா நட்சத்திரங்கள் விரும்பி ஏற்றுக் கொள்கிறார்கள். இந்த மாதிரி சூழ்நிலையில் பாராட்டுக்களையும், பட்டம் கொடுப்பதையும் வெறுப்பவராக இருந்திருக்கிறார் சந்திரபாபு.

சந்திரபாபுவை ‘சிறந்த நகைச்சுவை நடிகர்’ என்று பாராட்டி ஒரு கோப்பையை பரிசளிப்பதாக அறிவித்தது சினிமா ரசிகர் சங்கம். நான் நன்றாக நடிக்காத ஒரு படத்தில் நன்றாக நடித்ததாகச் சொல்லி பரிசு தரப் போகிறார்களாம் என்று அதை வாங்க மறுத்து விட்ட சந்திரபாபு, ‘‘என் நடிப்பை ரசிப்பவர்கள் என் ரசிகர்கள். அவர்கள் பாராட்டும் அன்பும் இருந்தால் அதுவே எனக்குப் போதும்’’ என்று சொன்னார். அவரிடம் பின்னர் இது குறித்து கேட்டபோது, ‘‘பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் படம் பார்க்கிறார்கள். ஆனால் சிறந்த நடிகனைத் தேர்ந்தெடுப்பதற்குப் பத்துப் பேர்கள் தானாம்! நான் நடித்ததால் ஓடியது என்று சொல்ல முடியாத ஒரு படத்தில் நடித்ததற்காக எனக்குப் பரிசு கொடுத் தார்கள்! அப்படி என்னை சிறந்த நகைச்சுவை நடிகன் என்று தேர்ந்தெடுக்க யார் இந்தப் பத்து பேர்கள் என்று கேட்கிறேன்…’’ என்று சொல்லியிருக்கிறார் சந்திரபாபு.
‘சபாஷ்சந்திரபாபு!’ என்று சொல்லத் தோன்றுகிறது அல்லவா? சரி,அவர் பாடிய பாடல் ஒன்றோடு இக்கட்டுரையை நிறைவு செய்வோம்!
பிறக்கும் போதும் அழுகின்றாய்!  இறக்கும் போதும் அழுகின்றாய்
ஒரு நாளேனும் கவலையில்லாமல் சிரிக்க மறந்தாய் மானிடனே!
ரசிகர்களைச் சிரிக்கவைத்து சோகத்தில்இறந்து போனஅந்த மகாகலைஞனின் வாழ்க்கைநமக்கெல்லாம் நல்லதொருபடிப்பினை!
தொகுப்பு : சி.என்.இராமகிருஷ்ணன்
nakkeeran

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக