திங்கள், 8 ஆகஸ்ட், 2016

சமத்துவபுரம் கண்ட தமிழகத்தில் மீண்டும் ஜாதியம் .....நவீன பிராமணச்சேரிகள்-....


நகரமயமாதலின் விளைவாக நமது நகரங்களில் உள்ள தெருக்களில் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் சார்ந்து வாழ்ந்து வருவது சாதீய அடுக்குகளை உடைக்கும் ஒரு முக்கிய நிகழ்வு என்று ஒரு நண்பர் சொன்னார். இந்தக் கூற்றில் உண்மை உள்ளது; புறந்தள்ளி விட இயலாது. அவர்
குறிப்பாகச் சொன்னது… சென்னை போன்ற நகரங்களில் பிராமணர்கள் அதிகம் வாழும் பகுதியான மயிலை, தி.நகர், மேற்கு மாம்பலம், திருவல்லிக்கேணி பிறகு, அடையாறு போன்ற பகுதிகளில் பிராமணல்லாதோர் பெருமளவு குடி புகுந்திருப்பது பற்றி. இது முற்றிலும் உண்மை.
இதற்கு பல காரணங்கள் உள்ளன. வாழ்வாதாரத்துக்காக கிராம மக்கள் நகரத்துக்கு குடிபெயர்வது, வியாபாரம், பொருளியல் போன்ற காரணங்களினால் நில மதிப்பு கூடுகையில் லாப நோக்கம் கருதி தங்கள் வீடுகளை பில்டர்களுக்கு அல்லது மற்றவர்களுக்கோ விற்பது; குடும்பத்தினர் அயல்நாடுகளுக்குச் சென்று விடுவதால் வீட்டை விற்பது என்று பல காரணங்கள் உள்ளன. ஆனால் சாதி மறுப்பு, சமத்துவச்சேரி உருவாக்கம் இக்காரணங்களில் ஒன்று என நான் கேட்டது கிடையாது.

எனக்குத் தெரிந்து சமூகநீதி பேசும் பிரக்ஞையுள்ள பல பிராமண நண்பர்கள் தங்களுடைய வீட்டை வாடகைக்கு விடுகையில், குறிப்பாக முஸ்லிம் அல்லது தலித் குடும்பத்தினருக்கோ முன்னுரிமை கொடுத்து பிராமணச்சேரியின் கதவுகளை உடைக்க முயற்சித்ததாக நான் கேள்விப்பட்டதில்லை. யோசித்துப் பார்த்ததில் ஒருவர் உள்ளார். இதைப்போல ஏதேனும் ஒன்றிரண்டு இடங்களில் நடந்திருக்கலாம். அப்படி இருந்தால் நல்லதாகும். மகிழ்ச்சி. அதே போல பிராமணர்கள் வீட்டை விட்டு காலி செய்து மற்றொரு இடத்துக்குச் செல்லுகையில் அவர்கள் சேரும் இடமும் பிராமணச்சேரிக்கு நிகரான புறநகர் பகுதியாகவோ அல்லது மற்றொரு பிராமணச்சேரியாக அமைந்திடுவது வெள்ளிடை மலை.
இதனால் பிராமணச்சேரிகளின் வசிப்பவர்கள் ஒரே சாதிக்காரர்கள் என்று பொருளல்ல. இச்சேரிகளின் சாதீயக் கூறுகள் நிறையவே மாறியிருக்கிறது. நான் மேலே குறிப்பிட்ட மாதிரி நகரமயமாக்குதலாலும், வணிகத்தன்மையாலும் அண்டிவாழும் தன்மை தவிர்க்க முடியாததாகி இருக்கிறது. இதன் விளைவாக சாதி அடுக்குகள் குலைத்துப் போட்டபடி உள்ளன. ஆனால், இந்தக் குலைத்துப் போட்ட பாவனை சமத்துவத்தின் அடிப்படையிலும், சாதி மறுப்பின் அரசியலினாலும் ஏற்படவில்லை என்றே நம்புகிறேன்.
பிராமணச்சேரிகளில் மற்றவர்கள் குடிவந்த பின் அங்கு நிகழும் மாற்றங்கள் வரவேற்கப்படுகிறதோ இல்லையோ, அம்மாற்றங்கள் தவிர்க்க முடியாததாகி விடுகிறது. இதை எதிர்கொள்ளும் வகையிலேயே அசைவம் உண்ணுபவர்களுக்கு வீடு இல்லை, பிராமணர்களல்லாத சைவர்களுக்கு முன்னுரிமை எல்லாம் பிராமணச்சேரிகளில் குடியேறும் எழுதா விதிகளாக இருந்து வருகிறது. பிராமணச்சேரிகளில் பல்வேறு சாதியினரும் குடிவந்து விட்டாலும் பிராமணச்சேரி என்ற சாதீயக் கருத்தாக்கம் அப்படியே இன்னும் உயிருடன் இருக்கிறது. மீண்டும் உயிர் பெற்று வருகிற நவீன பிராமணச்சேரிகள் இதற்கு சாட்சிகளாகும். குறிப்பாக கர்நாடகத்தில் பெங்களூரு, அடுத்ததாக நம் சென்னையில் இப்படிப்பட்ட நவீனச்சேரிகள் மறுபடி உயிர்த்தெழ ஆரம்பித்துள்ளன. வேதிக் அக்ரஹாரம், ப்ராமின் காலனி என்று பல்வேறு உருவத்தில் ஆவியெழுப்பப்பட்டுள்ள இந்த சாதிச்சேரிகளுக்கு அரசாங்க, ஊடக ஆதரவு உள்ளது. கர்நாடகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள வேதிக் அக்ரஹாரத் திட்டத்துக்கு கர்நாடக அரசு முழு ஆதரவு / அனுமதியளித்துள்ளது. திட்டத்தின் ஒரு பகுதி முடியும் தருவாயில் உள்ளது என்று சொல்லப்படுகிறது. 2020 இறுதியில் ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டிருக்கும் என்று அக்ரஹாரம் இணையத்தளம் சொல்கிறது. இந்த முயற்சியை இந்தியா முழுவதும் பெருகி வரும் இந்துத்துவ வெறியின் வெளிப்பாடு என்றெல்லாம் தட்டையாக ஒதுக்கி விட முடியாது. ஏன் பிராமணர்கள் வீடு வாங்க வேண்டும்? அதாவது இந்த நவீனச்சேரிக்கான தேவையை வேதிக் அக்ரஹாரம் அவர்களின் இணையத்தளத்தில் பதினொரு காரணங்களாகப் பட்டியலிடுகிறது.
அதில் ஒன்று, இந்தியாவின் ஐடி தொழில்நுட்பப் புரட்சி ஒரு பிராமணரான நாராயணசாமியினால் பெங்களூருவில் ஆரம்பிக்கப்பட்டது. எனவே நீங்கள் கர்நாடகத்தில் வாங்குவது ஒருவிதமான சாதியப் பெருமிதமாக விற்கப்படுகிறது. இந்தியாவில் ஐடி புரட்சி (அப்படி ஒன்றை நீங்கள் கண்டுபிடித்தால்) என்பது பிராமணர்களினால் உருவாக்கப்பட்டது என்ற ஒரு பச்சைப் பொய், சமூக ஆய்வாளர்கள் மத்தியில் தொடர்ந்து உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
ஐடி, பிராமணர்கள், தாராளமயமாக்கம்
மானுடவியலாளர்கள் கிறிஸ் ஃபுல்லர், ஹரிபிரியா நரசிம்மன் எழுதிய ‘தமிழ் பிராமணர்கள்’ என்ற வரைவியல் ஆய்வில் பிராமணர்கள் ஐடி தொழிலில் வெற்றிகரமாக இருப்பதற்குக் காரணம் சாதியல்ல, பிராமணர்களின் வெற்றிகரமான நடுத்தர நகர வாழ்க்கையே என்று கூறுகின்றனர். நகர வாழ்க்கையில் (குறிப்பாக ஐடி துறையில்) சாதிய அடையாளங்கள் அடிபட்டுப் போவதாகவும், வணிகச் சூழலில் வர்க்க அடையாளங்களும், திறமைகளுமே ஒருவரின் வளர்ச்சியைத் தீர்மானிக்கிறது என்று இந்த ஆய்வு சொல்கிறது. இருந்தபோதிலும் இந்த ஆய்வினில் வரும் ‘வெற்றிகரமான நடுத்தர மக்கள்’ அனைவரும் பிராமணர்கள் ஆவர். இந்திய ஐடி தொழில்நுட்ப துறையின் வெற்றிக்கான காரணம் பிராமணர் என்று சாதியக் குழுவே என்ற பெருமிதமும், அதன் விளைவாக மீண்டும் வேதிக் அக்ரஹாரம் போன்ற நவீனச்சேரிகள் எழுப்பப்படுவதையும் காணும்பொழுது நகரமயமாக்குதல் சாதீய அடையாளங்களை வேறு முறையில் கட்டியெழுப்பும் வல்லமையுள்ளது என்பது தெளிவுறத் தெரிகிறது (மானுடவியலாளர் டேவிட் மோஸ் இந்த ஆய்வுக்கு எழுதிய மதிப்புரை இங்கே உதவியாக இருக்கும்).
ஐடி துறையில் சாதியத்தின் பங்களிப்புப் பற்றி பொருளியல் மேதை அமர்த்தியா சென்னும் புகழ்ந்திருக்கிறார். 2007இல் இந்திய மென்பொருள் சங்கக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், பல நச்சு விதைகளுக்கு காரணமான இந்தியச் சாதிமுறையின் கொடையாக - ஒரே வேலையை மீண்டும் மீண்டும் செய்வதால் வருகிற ‘தொழில் நிபுணத்துவம்’ இந்திய ஐடி துறையின் வெற்றிக்குக் காரணம் என்று அருளியிருக்கிறார். இந்தத் திரிபு மேற்கத்திய ஊடகங்களிலும் காணப்படுகிறது. நடுவுநிலை இடதுசாரிப் பத்திரிகையான ‘ப்ரொஸ்பெக்ட்’ (அருந்ததி ராய் போன்றோர் எழுதும் தளம்) 2004இல் இந்திய ஐடி புரட்சியின் வெற்றிக்குக் காரணம் வேத காலத்தில் பிராமணர்கள் பிழையின்றி செய்த மனனப் பயிற்சியே மென்பொருள் எழுதுவதற்கு மிகவும் உறுதுணையாக இருந்தது என்று கண்டுபிடித்துக் கூறியது. ஆனால், அம்பேத்கரின் பார்வையோ இதற்கு முற்றிலும் மாறானது. சாதியாகப்பட்டது உழைப்பில் பிரிவினை ஏற்படுத்துவது மட்டுமல்ல, உழைப்பாளர்களுக்கிடையில் பிரிவினை உண்டாக்கும் தன்மை கொண்டது (not just a division of labour but divisions of labourers) என்ற நுட்பமான சாதியின் அசமத்துவக் கோட்பாட்டை நம்முன் போட்டு உடைக்கிறார்.
நவீனச்சேரியின் நாசூக்குத் தன்மை
நகரத்துப் பிராமணர்கள் தங்கள் அடையாளத்தை மற்ற சாதியினரை விட வீட்டுக்குள்ளே மிகக் கட்டுக்கோப்பாகவும், வெளியே நீக்குப்போக்காகவும் வைத்திருக்கிறார்கள் என்றே நான் நம்புகிறேன். இந்தக் குறிப்பை எழுதுவதற்கு முன்னர் எனது சில நண்பர்களிடம் எத்தனை பேர் தங்களது பிராமண நண்பர்களால் வீட்டுக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று கேட்டேன். ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் ‘இல்லை’ என்ற பதிலையே சொன்னார்கள். அதைவிட முக்கியம் ‘கூப்பிட்டால் தான் ஆச்சர்யம்’ என்று அவர்கள் சொன்னதுதான். நான் கண்ட வரையில், நகர் வாழ் பிராமணர்களின் வாழ்வியல் இரு பிளவாக உள்ளது. வீட்டுக்கு வெளியே ஒன்று, உள்ளே ஒன்று. ‘நான் அப்படியெல்லாம் இல்லை, என்னைப் பார்’ என்று சொல்பவர்களில் இதைப் படிக்கும் நீங்களும் ஒருவர் என்றால், எனது பதில்: மிக்க நன்றி. தொடர்ந்து செயல்படுங்கள். இந்த உள்ளே / வெளியே வாழ்வு முறை நகரத்துப் பிராமணர்களின் ஒரு தனித்தன்மை என்று கூறலாம். பொதுத் தளம் (public sphere) போல அகத் தளம் (private sphere) என ஒன்று இயங்குவதாக கூறலாம். இந்த அந்தரங்கத் தளமானது மிகவும் நீக்குப்போக்கானது, நாசூக்கானது என்றே நான் பார்க்கிறேன். அதே சமயம், இத்தளங்கள் பிராமணர்களுக்கு மட்டும் உரித்தானதல்ல - சமூகங்களில் பலருக்கும் - உதாரணமாக, பெண்கள் பொது இடத்தில் ஒரு போலவும் வீட்டில் அல்லது தனது நெருக்கமான இடத்தில் வேறு போலவும் நடந்து கொள்கிறார்கள். அதாவது பால் சமத்துவமின்மை காரணமாக நடந்து கொள்ளுமாறு நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். ஆனால், நகர் வாழ் பிராமணர்களோ, வெளியாரின் எந்த நிர்ப்பந்தமுமின்றி, பொது மற்றும் அகத் தளத்திலுள்ள தங்களின் நடத்தைகளை சாதிய அடையாளத்தின் அடிப்படையில் பிரித்து வைக்கின்றனர். 20 ஆண்டுகளுக்கு முன்னர் இடதுசாரி கொள்கைகளில் மிகத் தீவிரமாக இருந்து வருகிற ஒரு பெண் தோழர் (மார்க்ஸிஸ்ட் கட்சியில் இந்நாள் பிரமுகர்) அவர்களின் வீட்டுக்குச் செல்ல நேர்ந்தது. ஒரு அவசர லெட்டர் டெலிவரி, வேறு வழியில்லாததால் வீட்டுக்கு வந்து தரச் சொன்னார். அவரது வீடு கிட்டத்தட்ட கோயில் மாதிரி இருந்தது. எனக்குப் பெருத்த ஆச்சர்யம். குழப்பமும்கூட. அவர் தன்னை சாதி கடவுள் மறுப்பாளர் என்று தன்னை அறிமுகப்படுத்துவார். இதை அந்நாளில் நான் பெரிதும் மதித்த இதழாளர், நாடக ஆர்வலர், சமத்துவ விரும்பி, சாதி எதிர்ப்பாளர் ஒருவரிடம் பகிர்ந்து கொண்டதுபோது சலிப்பாக, “எல்லாத்தையும் இப்படிப் பிரிச்சுப்பிரிச்சுப் பார்த்தா யாருமே தேற மாட்டாங்க. அது அவங்க வீட்டுல இருக்கிறவங்களுக்காக” என்று என்னைக் கடிந்து கொண்டார். அந்த இடதுசாரித் தோழர், நான் மதித்த நபர் இருவருமே பிராமணர்கள்தான். இருவருடைய வீடும் பிரமாண சாதீயப் பழக்கத்தில் வெவ்வேறு அளவில் ஊறியிருந்தது. அதற்காக அவர்கள் பொதுத்தளத்தில் தீண்டாமையைக் கடைப்பிடித்து யாரையும் எனக்குத் தெரிந்தவரையில் விலக்கம் செய்யவில்லை என்று என்னால் சொல்ல முடியும். அதே சமயத்தில் அவர்களது அகத் தளமானது பிராமணியப் பழக்கங்களோடும் சாதீய முரண்களோடும் இருந்தது பற்றி அவர்களுக்கு எந்தக் குழப்பமும் இல்லை. நகர பிராமணர்களின் வீடுகளும் அவர்களின் வாழ்வு முறையும் பெரும்பாலும் நாசூக்கானது. இதை நான் ஏதோ ரகசிய சதித் திட்டம் போன்று சொல்லவில்லை. கிராமத்துச்சேரிகள் வெளியே, அனைவரின் பார்வைக்கும் விலக்கி வைக்கப்பட்டிருக்கிறதென்றால், நவீனச்சேரிகள் நீக்குப்போக்குடன் நகரங்களில் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது. கிராமத்துச்சேரி வன்முறை, மனிதகுலத்தின் அவமானச் சின்னமெனில் நகரத்துப் பிராமணச்சேரிகள் இந்துப் பாரம்பரியத்தின் கலாச்சாரத்தின் அடையாளமாக மறு கட்டமைப்பு செய்யப்படுகிறது. இந்து சமூக அமைப்பில் 'யின் யாங்' போல இந்த இரண்டு பௌதீக வெளிகளும் எதிரெதிர் வினையுள்ளது. ஆனால், பிணைந்திருக்கிறது என்றே புரிந்து கொள்கிறேன். இது எனக்கு மிக ஆர்வமூட்டும் ஆய்வுப் பொருளாகவும் இருக்கிறது என்கிறேன்.
ஆனால், ஆய்வுகளுக்குக்கூட இந்தக் கதவுகள் அவ்வளவு எளிதில் திறந்து விடாது என்றே அஞ்சுகிறேன். தலித் வீடுகள், பிறமலைக் கள்ளர்களின் வீடுகள், நாடார்களின் வீடுகள், கவுண்டர்களின் வீடுகள் எல்லாம் ஆய்வுக்களமாகி பல பத்தாண்டுகளாகி விட்டன. இன்னும் கூட, நவீனச்சேரிகள் நமக்கு எட்டாத தூரத்தில் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது. அறுபதுகளில் அண்ட்ரெ பெத்தெல் சிறீபுரத்தில் உள்ள பிராமண வீட்டில் தங்கி தலித் குடியிருப்பை ஆய்வு செய்தது ஒரு விபத்தல்ல. ஆய்வில் உள்ள அரசியலது. எனவேதான் ஓர் ஆய்வாளர் என்ற முறையில் இந்த மறைத்து வைத்தல்; யாரை எங்கிருந்து எவர் ஆய்வு செய்கிறார் என்பதெல்லாம் ‘அதி சுவாரசியமாக’ உள்ளது. பிராமணர்களின் வீடு, இந்திய தெற்காசிய இன வரைவு ஆய்வுகளின் களமாவது மிக அரிதாகவே இருக்கிறது, இல்லையென்றே சொல்வேன். நண்பர்களுக்கு தெரிந்தால் சொல்லலாம். பயன்பெறுவேன். கிறிஸ் ஃபுல்லர் போன்ற சில ஓரிரு விதிவிலக்குகள் உண்டு. சமீபத்தில் ரமேஷ் பைரியின் ஆய்வு, பிராமண வீடுகளைப் பற்றியானது. தற்போது ஒரு பிராமண மடத்தைப் பற்றிய ஆய்வில் ஈடுபட்டுள்ளதாகச் சொன்னார். ‘நான் பிராமணன் என்று அறியப்படுவதால் மட்டுமே இந்த ஆய்வுப் பொருள் சாத்தியமானது’ என்று என்னிடம் கூறினார். பிராமணராக அறியப்படும் ஆய்வாள அன்பர்கள் இப்பணியை மேற்கொள்ள வேண்டும். ஏனெனில், வேறு யாராலும் இச்சேரிகளுக்குள் செல்ல இயலாது என்பதே கசப்பான உண்மை.
கலாச்சாரமாகும் நவீனச்சேரிகள்
அக்ரஹாரங்கள் ‘பாரம்பரியம்’ மிகுந்தவைகளாகவும், அவை நடைமுறைப் படுத்தும் சாதீயப் பழக்கங்கள் கலாச்சாரமாகக் கட்டமைக்கப்பட்டு, மறு அறிமுகம் செய்யப்படுத்தப்படுகிறது. இதனடிப்படையில் நவீனச்சேரிகள் புதிய மொந்தையில் பழைய கள் என்று சொல்லலாம். வேதிக் அக்ரஹாரம் தனது காலனியை பிராமணர்களின் வாழ்வியலாகவே சித்தரிக்கிறது. இதன் மூலம் பிராமண சாதீயப் பழக்கங்களும் கலாச்சாரமாகத் திரிக்கப்படுகின்றன (culturing caste). கலாச்சாரமாக மறு உற்பத்தி செய்யப்படும் சாதீயப் பெருமிதம் அனைவரும் ஏற்கப்பட வேண்டிய ஒரு பொதுப் பொருளாக்கப்படுகிறது. இந்த உத்தி தேவர், கள்ளர், கவுண்டர் ஆகியவர்களின் சாதீய பெருமிதத்துக்காக நிகழ்த்தப்படும் வன்முறைகள், கொலைகள் போன்றவைகளில் இருந்து முழுக்க வேறுபட்டு மிக நாசூக்காக செயல்படுகிறது. பின்னவைகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது எளிது. ஆனால், அவற்றுக்குக் கொடுக்கும் விலை அவ்வப்போது உயிர், உடல் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதே சமயத்தில் சாதீயம் கலாச்சாரமாவது மிக நுட்பமானது. நாம் அறியாமலே நம்முள் வளரும் தன்மையுள்ளது, கேன்சர் போன்றது. கடந்த எழுபது, எண்பதாண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துவிட்ட அக்ரஹாரங்கள், மீண்டும் நவீனச்சேரிகளாக வலம் வர ஆரம்பித்திருக்கின்றன. ரியல் எஸ்டேட் மாஃபியாக்கள், அரசு நிறுவனங்கள், ஊடகங்களின் விளம்பர ஆதரவுடன் வெளிநாடு வாழ் பிராமணர்களின் பொருள் இந்நவீனச்சேரியை உருவாக்கி வருகின்றன என்று தோன்றுகிறது. ஹைதராபாத்தில் ஒருவர் இதை வைத்து பணம் பண்ணி ஏமாற்றும் முயற்சியில் ஈடுபட்டார் என்பது நவீனச்சேரிகளுக்கான சந்தையில் இதற்குள்ள தேவையை குரூரமாகச் சொல்கிறது. அது மட்டுமல்ல, பொருளாதாரம் சாதியை அழித்திட முடியாது என்பதும் தெளிவுறப் புரிகிறது. எழுபதுகளிலும் எண்பதுகளிலும் நகரமயமாக்கல் அக்ரஹாரங்களை கபளீகரம் செய்தது போலத் தோன்றினாலும், அதே வணிகமும் தாராளமயமாக்குதலும் மீண்டும் நவீன பிராமணச்சேரிகளை உருவாக்குவது ஒரு முக்கிய நிகழ்வாகும். ‘சிவிக்’ பிரச்னைகளுக்கு அரசினைச் சாடும் நீதியரசர்கள் இதைப் போன்ற அரசியல் சாசனத்துக்கு எதிரான சேரி எழுப்புதலுக்கு எப்படி அமைதி காக்கின்றனர் என்பது கொஞ்சம் கூட புரியவில்லை. இதை ஏதோ ஓரிடத்தில் நடப்பதாக நான் நினைக்கவில்லை. இதை ஒரு முக்கிய சாதீய நிகழ்வாகக் கருதுகிறேன். இது குறித்து உரையாடல்களும், ஆய்வுகளும் நடக்க வேண்டும். நவீனச்சேரிக்கான தேவை இன்றும் இருக்கிறது என்பதை ரியல் எஸ்டேட் அதிபர்கள் எவ்வாறு தெரிந்து கொண்டனர் என்ற கேள்வியும் என்னுள் தொக்கி நிற்கிறது. இது ஒரு பொருளியல் கேள்வி மட்டுமல்ல. சாதியம் சார்ந்த சமூகவியல் கேள்வி. ஒருவேளை இதற்கான தேவையை உணர்ந்த வெளிநாடு பிராமணர்கள் இது குறித்து செயல்பட முன்வந்தார்களா? வேதிக் அக்ரஹாரம் ஒரு டிரஸ்ட் அமைப்பாக செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஆனால், மற்ற இடங்களில் இந்நவீனச்சேரிகள் வணிக நோக்கோடும் செயல்படுத்தப்படுவதாகத் தெரிகிறது. இதனின் தொடர்ச்சியாக நாளை சைவப் பிள்ளை, முதலியார், நாடார், கவுண்டர் மற்றும் செட்டியார் சேரிகள் சாத்தியமா? இல்லையெனில், பிராமணச்சேரிகள் மட்டும் ஏன் மீண்டும் முளைக்கின்றன என்பதும் ஒரு முக்கியக் கேள்வியாகும். வெளியில் நிற்கும் என்னைப் போன்றவர்களால் கேட்கத்தான் முடியும். இதற்கான பதில்கள் பிராமண அன்பர்களிடமே உள்ளன. உண்மைக் குறையிருப்பின், உரையாட வேண்டும். இப்படிப்பட்ட நவீனச்சேரிகளை எதிர்க்கும் பிராமண குடும்பத்தில் பிறந்த அன்பர்கள் தங்களின், தங்கள் குடும்பத்தாரின் வாழ்வியல் முறைகள் இந்த நவீனச்சேரி கருத்தியலுக்குப் பங்களித்திருக்கிறதா என நேர்மையுடன் உரையாடுவது மிகப் பயனுள்ளதாக அமையும். எதிர்காலத்தில் பிற நவீன சாதிச்சேரிகள் உருவாகாமல் தடுக்க உபயோகமாக இருக்கும். பிராமண குடும்பத்தில் பிறந்த முற்போக்கு அன்பர்கள் குப்பத்துக்குச் சென்று இசை விழா நடத்தி 'social inclusiveness’ஐ - ஆர்வத்தோடு கொண்டு வர முயற்சிப்பதையெல்லாம் நான் இந்த அறிவுப் பின்புலத்தில்தான் புரிந்துகொள்கிறேன். சாதி ஒழிப்பில் உள்ள பல கூறுகளில் பௌதீக-வெளியும் (geo-spatial feature) என்பது ஒரு முக்கியக் கூறாகும்.
படம்: தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரு அக்ரஹாரம்.
நன்றி: https://en.wikipedia.org/wiki/Agrah...

கட்டுரையாளர்: முரளி சண்முகவேலன், லண்டன் பல்கலைக்கழகத்தில் ஊடக மானுடவியல் ஆய்வாளர்.  மின்னம்பலம்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக