ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2016

கனவுக்குள் காவல் இருப்பேன் என்ற கவிஞர் .நா.முத்துகுமார் கவிதைக்குள் கரைந்தது ஏன்?


Suresh Kannan ;நா.முத்துகுமார் எழுதிய பாடலின் ஒரு வரியை சிலாகித்து சில நாட்களுக்கு முன் எழுதியது. :(
****
லக்கேஜை தோளுக்கு மேல் சிரமப்பட்டு தூக்கி மேலேயுள்ள லாஃப்டிற்குள் எப்படியாவது அடித்துப் பிடித்து திணித்து பெருமூச்சுடன் இறங்கி வருவதைப் போல இசையமைப்பாளரின் சிக்கலான மெட்டிற்குள் தமிழை மடக்கி ஒடித்து துண்டித்து கொலை செய்து திணிக்கும் 'மீட்டர்' பாடலசிரியர்களின் இடையே அந்த வணிக சிக்கல்களுக்குள்ளும் தங்களால் இயன்றவரைக்குமான கவித்துவத்தையும் கதைச் சூழலுக்கான பொருத்தமான வார்த்தைகளையும் இட்டு மேலதிக அழகு செய்யும் பாடலாசிரியர்களும் இன்னமும்் இருக்கத்தான் செய்கிறார்கள்.

பாலாஜி சக்திவேலின் 'காதல்' திரைப்படத்தில் வரும் இந்தப் பாடல் எனக்கு பிடித்தமானது. கேட்பவர்களின் மனதையும் உயிரையும் கரைக்கும் சோகத்தின் பாவம் இதில் மிக அருமையாக வெளிப்பட்டிருக்கும். ஹரிசரண் அற்புதமாக பாடியிருப்பார். இதற்கு அபாரமாக இசையமைத்த ஜோஷ்வா SRIDHAR ஏன் பிறகு காணாமற் போய் விட்டார் என்று தெரியவில்லை..
இந்தப் பாடலை எத்தனையோ முறை கேட்டிருக்கிறேன். சமயங்களில் கண்கசியவும். ஆனால் இன்று காலையில் கேட்கும் போது இந்த ஒரு வரியின் பொருத்தமும் அழகும் என்னை பிரமிக்க வைத்தது.
'மின்சார கம்பிகள் மீது மைனாக்கள் கூடுகட்டும்'
இந்தப் பாடலின் சூழல் நமக்கு தெரியும். ஆதிக்க சாதியைச் சேர்ந்த பெண் ஒருத்தியை தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்த இளைஞன் கூட்டிக் கொண்டு ஓடுகிறான். தன்னை நம்பி வந்து விட்ட அவளை ஆறுதல்படுத்தும் நோக்கில் அந்த இளைஞன் பல நம்பிக்கையான வார்த்தைகளை கூறுகிறான்.
தந்தையும் தாயையும் தாண்டி வந்தாய் தோழியே
இரண்டுமாய் என்றுமே நான் இருப்பேன்
தோளிலே நீயுமே சாயும் போது
எதிர்வரும் துயரங்கள் அனைத்தையும் நான் எதிர்ப்பேன்
இது பொதுவாக ஆண் சொல்லும் நம்பிக்கையான உறுதிமொழிகள்தான்.
ஆனால் முன்னர் குறிப்பிட்ட வரியின் பொருள் மிகவும் ஆழமானது. பொருளியல் உலகைக் கூட எப்படியாவது எதிர்கொள்ள முடியும். ஆனால் சாதிமறுப்பு திருமணம் செய்த காரணத்திற்காக, தாம் எதிர்கொள்ளவிருக்கும் சாதி ஆவணக் கொலைகளின் பயங்கரத்தை அந்த இளம் காதலர்கள் உணர்ந்துதான் இருக்கிறார்கள்.
சுற்றிலும் ஆபத்து. எவர் வேண்டுமானாலும் காட்டிக் கொடுக்கலாம், தகவல் சொல்லலலாம். இதற்கிடையில்தான் வாழ்ந்தாக வேண்டும்.
என்றாலும் கூட அந்த நம்பிக்கையை இளைஞன் ஊட்டுகிறான்.
'மின்சார கம்பிகள் மீது மைனாக்கள் கூடுகட்டும்'
சுற்றிலும் உயர்அழுத்த மின்சாரம் பாயும் கொலைகாரக் கம்பிகள் இருந்தாலும் காகங்களும், மைனாக்களும் அதன் இடையில்தான் ஊடாடுகின்றன, கூடுகட்டுகின்றன, வாழ்கின்றன. அதிர்ஷ்டம் இல்லாத பறவைகள் மின்சாரத்தில் கருகி சாகின்றன. என்றாலும் வாழும் நம்பிக்கையை அவை விடுவதில்லை.
சாதி வெறியர்களின் ஆபத்தை மின்சாரத்திற்கும் அதற்கு இடையில் வாழ வேண்டிய காதலர்களை கூட்டுப்பறவைகளுக்கும் உவமையாக எழுதிய நா.முத்துகுமாரை வியக்கிறேன்.  முகநூல் பதிவு . சுரேஷ் கண்ணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக