புதன், 17 ஆகஸ்ட், 2016

சட்டசபையில் காவல்துறை கோரிக்கை மீது ஸ்டாலின் பேசக்கூடாது என்று திட்டம்போட்டு... சபையை திருடிய கூட்டம்

அடுத்தடுத்து, இரண்டாவதுமுறையாக பதவியேற்ற முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான சட்டமன்றத்தில் திமுக, அதிமுக உறவு ஒப்பீட்டளவில் சுமுகமாகவே இருந்தது. ஆனால் கடந்த 15 நாட்களில் இருமுறை அவை ஒத்திவைக்குமளவுக்கு சட்டமன்ற நிகழ்வுகள் சூடு கிளம்பியது. இன்று, நமக்கு நாமே திட்டம் தொடர்பாக அதிமுக உறுப்பினர் குணசேகரன் கொளுத்திய நெருப்பு, ஸ்டாலின் உட்பட 80 திமுக உறுப்பினர்களின் ஒரு வார சஸ்பெண்டில் முடிந்துள்ளது. நாளை தொடங்கி அடுத்த ஏழு நாட்களுக்கு இந்த 80 உறுப்பினர்களும் அவை நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது. இது தொடர்பாக, சட்டமன்றத்தில் ஐ விட்னஸாக இருந்த நெய்வேலி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் சபா.இராஜேந்திரனிடம் பேசியபோது,
“முதல்வர் வழக்கமாக சட்டமன்றத்துக்கு வராமல் தலைமைச் செயலகத்தில் இருக்கும் முதல்வர் அறையில் அமர்ந்துகொண்டார். சட்டமன்றத்துக்குள் நாங்கள் போகும்போது அதுவே எங்களுக்கு ஒருமாதிரி மிரட்சியாக இருந்தது. காரணம், எப்போதும் இல்லாதளவுக்கு சபை காவலர்கள் பத்து மடங்கு அதிகமாகக் குவிக்கப்பட்டிருந்தார்கள். அப்போதே நாங்கள் நினைத்தோம், ஏதோ பெரிய சதித் திட்டம் ஒன்றை அரங்கேற்றப் போகிறார்கள் என்று.

சட்டமன்றம் தொடங்கியதும் வீட்டு வசதி வாரியத்துறை, தகவல் தொழில்நுட்பத்துறை மானியக் கோரிக்கை என இரு அமைச்சர்கள் பதில் சொல்லவேண்டிய விவாதம் அது. அவர்கள், அம்மா புகழ் பாடிவிட்டு மானியக் கோரிக்கைக்குள் வருவதற்குள் போதும்போதுமென்றாகி விடுகிறது. எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஆன நாங்கள் அமைதியாக இருந்தோம். எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலினும், துணைத் தலைவர் துரைமுருகனும் அவர்கள் அம்மா புகழ் பாடும் நேரத்தில் தேனீர் அருந்தி வரலாம் எனச் சென்றார்கள். அவையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் இல்லாத நேரத்தில்தான் அதிமுக உறுப்பினர் குணசேகரன், ‘நமக்கு நாமே பயணம்போனவரின் பாச்சா பலிக்கவில்லை’ என்றார். உடனே, ‘நாங்கள் எழுந்து உறுப்பினரின் வார்த்தைகளை அவைக் குறிப்பில் இருந்து நீக்கவேண்டும்’ என்று சொன்னோம். நாங்கள் அந்தக் கோரிக்கையை வைத்துக் கொண்டிருந்தபோது ஸ்டாலினும், துரைமுருகனும் சபைக்குள் நுழைந்தனர். நடந்ததைக் கேட்டுவிட்டு பேசத் தொடங்கிய ஸ்டாலின், ‘நமக்கு நாமே திட்டத்தைப்பற்றி இந்த அவையில் பேசுகிறார்கள் என்றால் அந்தத் திட்டம் அந்தளவுக்கு மக்களிடம் போய்ச் சேர்ந்திருக்கிறது. முதல்வரே பொதுக்குழுவைக் கூட்டி நமக்கு நாமே திட்டம்பற்றி பாராட்டிப் பேசினார். அது நமக்குப் பெருமைதான். அதனால் அதைப் பெரிதாக்க வேண்டாம். நீங்கள் அமைதியாக இருங்கள்’ என்று எங்களை அமரச் சொன்னார் ஸ்டாலின்.
அவர்கள் எதிர்பார்த்தது ஸ்டாலின் பிரச்னை செய்வார். அதைக் காரணமாக வைத்து அவரை வெளியேற்றி சஸ்பெண்டு செய்யலாம் என எதிர்பார்த்தார்கள். ஆனால் அவர் பெருந்தன்மையுடன் பேச, அவர்களின் திட்டம் வெற்றிபெறாமல் போனது. உடனே, அதிமுக உறுப்பினர் ஓ.பன்னீர்செல்வம் எழுந்து சபாநாயகரிடம் ஒரு ரகசியம் சொன்னார். உடனே சபாநாயகர், ‘முதல்வர் பொதுக்குழுவில் நமக்கு நாமே திட்டத்தைப் பற்றி பாராட்டிப் பேசியதாகக் கூறிய ஸ்டாலின் பேச்சை அவைக்குறிப்பிலிருந்து நீக்குகிறேன்’ என்றார்.
உடனே ஸ்டாலின் எழுந்து, ‘இதை நீக்கினால் அதையும் நீக்குங்கள்’ என்றார். உடனே கருத்து மோதல் உருவானது. சபாநாயகருக்கு ஒன்றும் புரியவில்லை. அப்படி இப்படி திரும்பிப் பார்த்தவர் ‘நீங்கள் சபைக்கு ஒத்துழைக்கவில்லை என்பதால் உங்களை ஒரு வாரத்துக்கு அவை நடவடிக்கைகளில் இருந்து சஸ்பெண்டு செய்கிறேன்’ என்று, சபைக் காவலர்களுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களை வெளியேற்ற உத்தரவு பிறப்பித்தார்.
ஓடிவந்த சபைக் காவலர்கள், ‘சார் சார்... ப்ளீஸ் வாங்க, வந்திடுங்க...’ என்று கெஞ்சிக்கெஞ்சி அழைக்க, ஸ்டாலின் மறுக்க, அவரை குண்டுக்கட்டாக அப்படியே தூக்கிப் போனார்கள். பத்து எம்.எல்.ஏ.க்களை மிகவும் கஷ்டப்பட்டு தூக்கிப் போனார்கள். சிலரோ, தூக்கவந்த காவலர்களைப் பார்த்து ‘மேல கை வைக்காதீங்க நல்லாயிருக்காது’ என்று சொல்ல, அவர்கள் கொஞ்சநேரம் கெஞ்சிப் பார்த்தார்கள். அப்போது நாகரிகம் தெரியாத ஆளும் கட்சி உறுப்பினர் ஒருவர் பாட்டில்களை வீச, நாங்கள் கடுமையான எச்சரிக்கைகளை விடுத்தோம். அதன்பின்னர் அமைதியானார்கள். அவையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் 89 பேர். அதில் ஒன்பதுபேர் இன்று அவைக்கு வரவில்லை. ஆக மொத்தம், 80 உறுப்பினர்கள் சஸ்பெண்டு ஆகியிருக்கிறோம்’ என்றவர் தொடர்ந்து,
“இதில் பேசப்படாத விஷயம் ஒன்று உள்ளது. நாளை முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு அவை நடவடிக்கைகளில் இந்த 80 உறுப்பினர்களும் கலந்துகொள்ள முடியாது. வருகிற 22ஆம் தேதி காவல் துறை மானியக் கோரிக்கை வரவிருக்கிறது. இந்த மானியக் கோரிக்கை விவாதத்தின்போது திமுக உறுப்பினர்களும் குறிப்பாக, ஸ்டாலினும் அவையில் இருக்கக்கூடாது என ஆளும் கட்சி நினைக்கிறது. காரணம், காவல்துறையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா தங்களுக்குப் பெரிதாக எதையும் செய்யவில்லை என்ற அதிருப்தி நிலவுகிறது. அந்த அதிருப்திதான் காவல்துறை தபால் வாக்குகளை திமுக பக்கம் கொண்டு சேர்த்தது. இப்போதும், அவர் பெரிதாக எதையும் செய்துவிட மாட்டார் என்று நினைக்கும் காவல்துறை உயரதிகாரிகள் மானியக் கோரிக்கையின்போது தங்களுக்காக பேசும்படி ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். அதற்கான தயாரிப்புகளிலும் ஸ்டாலின் ஈடுபட்டிருந்தநிலையில், இப்போது சஸ்பெண்டு செய்யப்பட்டிருக்கிறார்; அவரும் திமுக உறுப்பினர்களும். இப்போது நீங்கள் புரிந்துகொள்ளலாம், முதல்வர் ஏன் சட்டமன்றத்துக்குள் வராமல் அவரது அறையில் அமர்ந்திருந்தார்’ என்று முடித்துக்கொண்டார் சபா.இராஜேந்திரன்.
-எம்.பி. காசிநாதன்  மின்னம்பலம .காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக