சனி, 20 ஆகஸ்ட், 2016

தீப்பொறி ஆறுமுகம்: காசு வாங்கிட்டுதானே கட்சியில சேர்ந்தேன்னு ஜெயலலிதா கேட்டிச்சு

தனது பதினைந்தாவது வயதில்  தந்தை பெரியாருடன் மேடைகளில் பேசி பேச்சாளராக வாழ்வைத் துவக்கியவர். கடந்த ஐம்பது ஆண்டுகளில் தமிழகம் முழுக்க தி.மு.க. பொதுக்கூட்டங்களில் அனல் பறக்கப் பேசிய நட்சத்திரப் பேச்சாளர் தீப்பொறி ஆறுமுகம். எந்த ஊரில் பொதுக்கூட்டம் என்றாலும் விடிய…... விடிய...…விடிய...… மதுரைத் தமிழில் பொளந்து கட்டும் 73 வயதாகும் தீப்பொறி ஆறுமுகம், இப்போது கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். தகவல் கேள்விப்பட்டு தீப்பொறி யாரைச் சந்திக்கச் சென்றோம். >""ஊசி, மருந்து, மாத்திரை, பரிசோதனை, டாக்டர்கள் ஃபீஸ் என்ற வகையில் தினமும் பதினைந்தாயிரம் செலவாகுதுங்க'' என நம்மிடம்  கண் கலங்கினார் தீப்பொறியாரின் மனைவி சங்கரவடிவு.
""அட ஏத்தா இதெல்லாம் போய் தம்பிகிட்ட சொல்லிக்கிட்டு, அவரு என்ன நோட் அடிக்கிற மிஷினா வச்சிருக்காரு''. என மனைவியிடம் கூறிவிட்டு, நம்மிடம் மனம் திறந்தார் தீப்பொறியார்.


"1967 ஜனவரி 17-ந் தேதி அன்னைக்கி அப்போதைய தென்னாற்காடு மாவட்டம் விழுப்புரம் மந்தைக் கடை மைதானத்தில் அறிஞர் அண்ணா தலைமையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய இந்த ஆறுமுகத்துக்கு அண்ணா தந்த பட்டம்தான் தீப்பொறி. இன்னைக்கும் நான் தீப்பொறி'தான். அய்யா பெரியார், அறிஞர் அண்ணா இந்த ரெண்டு பேரின் மொத்த உருவம்தான் தலைவர் கலைஞர்.

எம்.ஜி.ஆர். அமெரிக்காவுல இருக்குறப்ப, நெல்லை தேரடி வீதியில பொதுக்கூட்டம், நான் போறதுக்கு கொஞ்சம் லேட்டாயிப் போச்சு. கூட்டத்துல ரகளை பண்ண ஆரம்பிச்சுட்டாய்ங்க. மேடை ஏறுனதுமே சோடா குடிச்சுட்டுத்தான் எப்போதுமே பேச ஆரம்பிப்பேன், அன்னைக்கு சோடா வர்றதுக்கு லேட்டாகிப் போச்சு. காட்டுக்கத்தல் கத்துறாய்ங்க. எனக்கு சுர்ருன்னு ஏறிப்போய் மைக்கைப் பிடிச்சி, "அங்க அமெரிக்காவுல ஒருத்தரு பேசாம கெடக்காரு, அதப்பத்தி எவனும் கேட்காத, நான் பேசலைன்னா மட்டும் ஒனக்கு பொத்துக்கிட்டு வருதாக்கும்'னு பேசிப்புட்டேன். ஒடனே மறுநாள் தலைவரு, "நீ என்னோட நண்பரைப் பத்தி தப்பா பேசிட்டே, அதனால ஆறு மாசம் கட்சியிலிருந்து உன்னை சஸ்பெண்ட் பண்றேன்'னுட்டாரு. அதே மாதிரி மதுரை பொதுக்கூட்ட மேடைக்கு எதுத்தாப்ல ஒருத்தன் உடல் மண்ணுக்கு, உயிர் ரஜினிக்குன்னு போஸ்டர் ஒட்டியிருந்தான். நம்மளோட அசைவ பாஷையில ஒண்ணைக் கேட்டுப்புட்டேன். அதுக்கு 6 மாசம் சஸ்பெண்ட். இந்த ரெண்டு சஸ்பெண்ட்டப்ப வும் சோத்துக்கு ரொம்பவே கஷ்டப்பட்டேன்.

ப்பக்கூட என்னைப்பத்தி தலைவர்ட்ட வத்தி வச்சாய்ங்க, "மனசுல பட்டதை ஆறுமுகம் பேசிருவான்யா, மத்தபடி அவன் நல்லவன்யா'ன்னு சர்ட்டிபிகேட் கொடுத்தாரு. ஒருவாட்டி  மன்னார்குடி பொதுக்கூட்டம் முடிஞ்சதும் மன்னை நாராயணசாமி வீட்டு விருந்துல கடைசி வரிசையில உட்காந் திருப்பதைப் பார்த்து "ஏன்யா கடைசி வரிசை'ன்னு கேட்டார் தலைவர். "நான் சைவம் தலைவரே'ன்னு சொன்னதும், "பேசுறதெல்லாம் அசைவம், சாப்பாடு மட்டும் சைவமாய்யா'ன்னு கமெண்ட் அடிச்சாரு.

நான் என் மகனுக்கு ஏ.பி.ஆர்.ஓ. வேலை கேட்டதும் சரின்னு ஆர்டர்ல கையெழுத்தெல்லாம் போட்டாரு முதல்வரா இருந்த தலைவர். அப்ப அழகிரி அண்ணன் தன்னோட பி.ஏ.பாஸ்கருக்கு அந்தப் போஸ்டிங் வேணும்னு கேட்டதால, என் மகனுக்கு வேலை இல்லைன்னுட்டாரு.

அந்தக் கோபத்திலும் என் வீட்டுக்காரம்மா அனத்தல் தாங்க முடியாமலும் தான் ஏ.டி.எம்.கே.வுக்குப் போனேன்.
அங்க போயும் அந்த வேலையக் கேட்டப்ப, "காசு வாங்கிட்டுத் தானய்யா கட்சிக்கு வந்த, நான் சசி குடும்பத்து ஆளுகளுக்கே ரெகமெண்ட் பண்ணுறதில்லை'ன்னு ஜெயலலிதா சொல்லவும் திரும்பவும் தி.மு.க.வுக்கே வந்துட்டேன்.
சோடா குடிக்கிறதைத் தவிர எனக்கு வேறு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. பேச்சாளராக ஊரெல்லாம் சுத்துனதால, ஐம்பது வருஷா ஓட்டல் சாப்பாடு, ஊறுகாய், அப்பளம்தான் தம்பி. அதான் கல்லீரல் போச்சு. தலைவரும் தளபதியும் என்னைக் காப்பாத்து வாங்கன்னு நம்பிக்கை இருக்கு தம்பி. இந்த ஒடம்புல உசுரு இருக்குற வரைக்கும் தி.மு.க.தான்'' இன்னமும் உறுதி குலையாமல் பேசினார் தீப்பொறியார். சுற்றும் முற்றும் பார்த்தோம். கரைவேட்டிக்காரர்கள் கண்ணில்படவில்லை.

-முகில்
படம் : அண்ணல்   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக