ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2016

ஏழைகளுக்கு உள்ள கடைசி வழி கிட்னி விற்பதுதான்.. விரைவில் மற்ற உறுப்புக்களையும் விற்க வசதி செய்து தருவாய்ங்க ?

Dr-L-H-Hiranandani-Hospitalடெல்லி அப்பல்லோ மருத்துவமனையை தொடர்ந்து மும்பையின் ஹிரநந்தனி கார்ப்பரேட் மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துமனையிலும் கிட்னி திருட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி உள்ளிட்ட ஐந்து மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அம்மருத்துவமனையில் வேலை செய்யும் ஊழியர் ஒருவர் கொடுத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஜூலை 14-ம் தேதி நடக்கவிருந்த ஒரு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தடுத்து நிறுத்தப்பட்டது. விசாரணையில் குஜராத்தை சேர்ந்த சோபா தாகூர் என்ற பெண்ணிடமிருந்து கிட்னி எடுக்கப்பட்டு பிரிஜ்கிஷோர் ஜெய்ஷ்வால் என்ற தொழிலதிபருக்கு மாற்றப்படவிருந்தது தெரியவந்தது. சட்டப்படி உறவினர்களிடையே மட்டுமே உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட வேண்டும். அதனால் ஜெய்ஷ்வால் சோபாதாகூர் இருவரையும் கணவன் மனைவியாக காட்டியிருக்கிறார்கள். அதற்காக போலி சான்றிதழ்கள் தயாரிக்கப்பட்டு கிட்னி திருட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

தன்னிடம் 21 லட்ச ரூபாய் பெற்றுக்கொண்டு ஹிரநந்தனி மருத்துவர்கள் கிட்னி மாற்று அறுவைசிகிச்சைக்கு ஏற்பாடு செய்ததாக தெரிவித்திருந்தார் ஜெய்ஷ்வால். இது தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட அரசின் மூன்று நபர் கமிட்டி ஹிரநந்தனி மருத்துவமனை நிர்வாகத்திற்கும் இதில் தொடர்பு இருப்பதை உறுதிசெய்துள்ளது.
மூவர் குழு விசாரணையில் சிறுநீரக  மருத்துவர் சேத் இக்குற்றத்தில் நேரடியாக ஈடுபட்டுள்ளார் என்றும் மருத்துவர்கள் ஷா மற்றும் செட்டி இவருக்கு உதவியுள்ளனர் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இம்மருத்துவர்கள் அனைவரும் 15 முதல் 24 ஆண்டுகளுக்கு மேல் அனுபவமுள்ள மூத்த மருத்துவர்கள் ஆவர். மேலும் மருத்துவமனையில் நடந்து வரும் இது போன்ற குற்றங்களை தடுக்க தவறியதாக அதன் தலைமை செயல் அதிகாரி மீது குற்றம் சாட்டியுள்ளது.
மேலும் உறுப்புதானம் கொடுப்பவர் மற்றும் பெறுபவரின் வீடியோ ஒப்புதல் வாக்குமூலங்களை வேண்டுமென்றே கண்டுபிடிக்க முடியாதவாறு குறைந்த தரத்தில் வீடியோ பதிவு செய்துள்ளனர். மேலும் வீடியோ பதிவில் கிட்னி எடுக்கப்படவிருந்த சோபா தாகூர் சோடிக்கப்பட்ட முகவரியை சரியாக சொல்லவில்லை. மருத்துவர்களே முகவரியை சரியாக சொல்லும்படி அறுவுறுத்துவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது. மேலும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளின் போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகளை பின்பற்றபடவில்லை என்பதும் போதுமான ஆவணங்களை பெறப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. பெறப்பட்ட ஆவணங்களும் போலியானவை .
கிட்னி திருட்டில் ஏஜெண்டாக செயல்பட்ட பிரிஜேந்திர பிசென் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் 2007-ம் ஆண்டு மற்றொரு கிட்னி திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்டவர். குஜாராத்தின் பல கிராமங்களிலும் தனது வலைபின்னலை கொண்டுள்ள பிரிஜேந்திர பிசென் கடனில் சிக்கியுள்ள மக்களின் வறுமையை பயன்படுத்தி கார்ப்பரேட் மருத்துவமனைகளின் கிட்னி திருட்டில் சிக்கவைத்துள்ளான்.
அவர்களிடமிருந்து ஒன்று முதல் இரண்டு லட்சங்களுக்கு கிட்னி பறித்துக்கொள்கிறார்கள் இக்கார்ப்பரேட் கொள்ளை கும்பல். மேற்கண்ட சம்பவத்தில் கிட்னி விற்க தயாராக இருந்த சோபா தாகூர் தினமும் 50 ரூபாய் கூலியில் தன் வாழ்க்கையை கழித்து வந்தவர். சோபா தாகூரை போன்று அவரது அருகாமை கிராமத்தை சேர்ந்த ரபீக் அகமது தனது 50,000 ரூபாய் கடனுக்காக தனது கிட்னியை விற்றிருக்கிறார்.
மேலும் இவ்வலைப் பின்னலில் கிட்னியை விற்க தயாராகவிருக்கும் நபரை அறிமுகம் செய்துவைத்தால் அவர்களுக்கு 25,000 ரூபாய் வழங்கப்படுகிறது. கிட்னியை விற்றவர்கள் தங்களுக்கு தெரிந்தவரகள் உறவினர்களை கிட்னி விற்க சம்மதிக்க வைக்கிறார்கள். அதன் மூலம் ஏஜெண்டுகளிடம் உதவி பணம் பெறுகிறார்கள்.
மறுகாலனியாக்க கொள்கைகளின் விளைவாக விவசாயம் அழிக்கப்பட்டு நகர்புற வேலைவாய்ப்புகளும் குறைந்து மக்கள் நாளுக்கு நாள் வறுமைக்கு தள்ளப்படுவது இக்கொள்ளைகும்பலுக்கு வாய்ப்பாக அமைகிறது. புதிய பொருளாதார கொள்கைகளின் வண்ணமிகு பக்கத்தில் இடம்பெற்றிருக்கும் மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனைகள் அதே கொள்கைகளினால் துரத்தியடிக்கப்பட்ட மக்களை இங்கனம் காவு கொள்கின்றது.
தண்ணீர் முதல் அனைத்தையும் விற்பனை சரக்காக மாற்றிய முதலாளித்துவம் ஏழைகளின் கிட்னியையும் விற்பனை சரக்காக மாற்றியிருக்கிறது. மருத்துவர்கள் திருடர்களாகியிருக்கிறார்கள். டிசண்டிங் டையக்னசிஸ் என்ற புத்தகத்தில் இதே போன்ற பல மருத்துவ மோசடிகளை நேர்மையான மருத்துவர்கள் அம்பலப்படுத்தியுள்ளதை ஏற்கனவே எழுதியிருந்தோம். ஆக ஒட்டுமொத்த மருத்துவ துறையும் அழுகிநாறிக்கொண்டிருப்பதை தொடர்ந்து வெளிவரும் செய்திகளும், நேர்மையான மருத்துவர்களும் உறுதிப்படுத்துகிறார்கள்.
முதலாளித்துவத்தின் கோர முகத்திற்கு கார்ப்பரேட் மருத்துவமனைகளின் கிட்னி திருட்டு செய்திகள் சான்றாக அமைந்துள்ளன.
– ரவி  வினவு.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக