வியாழன், 25 ஆகஸ்ட், 2016

தீப்பொறி’ ஆறுமுகம் -மு.க.ஸ்டாலின் உணர்வுபூர்வ சந்திப்பு


இப்போது தொலைக்காட்சிகளில் விவாதங்களைப் பார்க்கிறோம். காரசாரமாக விவாதித்துக் கொள்கின்றனர். தங்கள் கட்சி நியாயங்களை தங்கள் மொழியில் எடுத்துரைக்கின்றனர். இதுவே ஒரு பொதுமேடையில் நிகழ்ந்தால்? எதிரே மக்கள் திரண்டிருக்க, தமது ‘மொழியில்’ தாம் நம்பும் கட்சிக்காக எதிர்க்கட்சிகளின் தவறுகளை அம்பலப்படுத்துவார். எதிர்த்து பொதுமக்கள் தரப்பில் புகுந்த எதிர்க்கட்சியினர் யாரேனும் கேள்விகேட்டாலும் சளைக்காமல் பதிலளிப்பார். ‘வெளிப்படையான’ இவரின் பேச்சு சிலரால் விமர்சனத்துக்கு ஆளானாலும், தான் சார்ந்த கட்சிக்காக பல மேடைகளைக் கண்டு தொண்டாற்றினார். பல மேடைகள்கண்ட அந்த முழக்கம்தான் இன்று குரல் உடைந்து மௌனித்து கட்டிலில் சுருண்டு கிடக்கிறது.


காற்றைப்போல குரல் மெலிசாக வந்தாலும் ‘மு.க.ஸ்டாலின் எனை கைவிடமாட்டார். வந்து பார்ப்பார்’ என, கம்பீரமாக உச்சரித்தபடியே இருக்கும் அவரின் உச்சரிப்பு ஓசைகள் மதுரையிலிருந்து சென்னை அறிவாலயம் காதுகளில் ஒலித்தன. இன்று மதுரைக்கு வந்துவிட்டார் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின். அவரைக் கண்டதும் முகம் மலர்கிறது. ‘நல்லாருக்கீங்களா?’ என்கிறார் மு.க.ஸ்டாலினிடம். இந்த நேரத்திலும் பண்போடு வந்திருப்பவர்களின் நலம் விசாரிக்கும் அவர், ‘தீப்பொறி’ ஆறுமுகம். தமிழகம் முழுக்க பல ஆண்டுகளாக பல்வேறு ஊர்களுக்குச் சென்று திமுக மேடைகளில் முழங்கிவருகிறார். அப்போது நேரம் தவறிச் சாப்பிடுவது, ஹோட்டலில் சாப்பிடுவது போன்ற காரணங்களால் கல்லீரல் கெட்டுவிட்டது. இதனால் பல நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையாக இருந்தார். மருந்துகள் வாங்கவே தினம் பதினைந்தாயிரம் ரூபாய் செலவாகிறது என, அவர் மனைவி பத்திரிகையில் கண்ணீரோடு பேட்டி கொடுத்தது திமுக தலைமைக்கு எட்டியது. சமூக வலைதளங்களிலும் இந்தச் செய்தி பரவியது. இப்படிப்பட்ட சூழலில் இன்று, ஆகஸ்ட் 25ஆம் தேதி மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தீப்பொறி ஆறுமுகத்தை நேரில் சந்தித்தார் மு.க.ஸ்டாலின். மருத்துவச் செலவுக்காக திமுக சார்பில் ஒரு லட்சம் ரூபாய் வழங்கினார் மு.க.ஸ்டாலின்.
அவருக்கு நன்றி சொல்லிவிட்டு, ‘எனது உடல்நிலை சரியானவுடன் முன்பைவிட முழுமூச்சாக திமுக-வுக்காக முழங்குவேன்’ என்றார். அதுதான் தீப்பொறி ஆறுமுகம்.  மின்னம்பலம்.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக