செவ்வாய், 16 ஆகஸ்ட், 2016

கேரளா கன்னியாஸ்திரி மேரி செபஸ்டியன் மீது உடல், உள துன்புறுத்தல்கள் மேற்கொள்ளும் திருச்சபை

கத்தோலிக்க திருச்சபையானது அன்பு, இரக்கம், தொண்டுள்ளம் ஆகியவற்றை  நாம் ஒவ்வொருவருக்கும் போதித்து வருகிறது. ஆனால்
கத்தோலிக்க சபையில் துறவறம் மேற்கொண்டு வரும் கன்னியாஸ்திரீ மேரி செபாஸ்டின் விவகாரத்தில் அவ்வாறு இல்லை. 45 வயதான சகோதரி மேரி செபாஸ்டின் தான் 25 ஆண்டு காலம் சேவை செய்து வந்த நிறுவனம் தனக்கு துன்புறுத்தல்களைத் தரக்கூடும் என்ற அச்சத்தில் தற்போது உள்ளார். இதனை தொடர்ந்தே அவர், கத்தோலிக்க சபையிலிருந்து விலக முடிவு செய்துள்ளார்.
கேரளா மாநிலம் கோட்டையத்தை அடுத்த பாலாவில் சீரோ மலபார் சபையின் மதர் ஆப் கார்மலின் கீழ் வரும் சேர்த்துங்கல் நாசரேத்து பவன் கான்வெண்டில் தான் மேரி கன்னியஸ்தீரியாக இருந்து வருகிறார். கடந்த மூன்று ஆண்டுகளாக இங்கு வசித்து வரும் அவருக்கு, சபையில் அவருக்கு மேலிருக்கும் பொறுப்பாளர்களால் தொடர்ச்சியாக துன்புறுத்தல்கள் தரப்படவே அவர், சபையை விட்டு வெளியேறுவது என இந்த ஆண்டு ஜனவரி மாதம் முடிவெடுத்தார்.

இதனை தொடர்ந்து, கன்னியாஸ்திரீ மேரி சபையிலிருந்து வெளியேறி 3 ஆண்டுகள் சாதாரணமாக வாழ அனுமதிக் கேட்டு சபையின் தலைமையை அணுகினார். ஆனால், அவ்வாறு அனுமதி கொடுத்தால், பிற கன்னியாஸ்திரீகளும் இது போன்று அனுமதி கேட்க, இந்த முயற்சி ஊக்கமளிக்கக் கூடும் என்ற காரணத்தால் அவரது கோரிக்கையை சபையின் தலைமை நிராகரித்தது.
தொடர்ந்து, அவர் அளித்த புகாரை விசாரிக்க சபை காலதாமதம் செய்ததை தொடர்ந்து மேரி, கேரளா மாநில கத்தோலிக்க சீர்த்திருத்த இயக்கத்தை தொடர்பு கொண்டார். இந்த நிறுவனம், கத்தோலிக்க சபையில் பணியாற்றிய முன்னாள் ஊழியர்களின் மறுவாழ்வுக்காக செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பினர், இவ்விவகாரத்தில் தலையிடவே, விவகாரம் மேலும் சூடுபிடிக்க துவங்கியது.
இதனை தொடர்ந்து கடந்த மேய் மாதம் சபையிலிருந்து வெளியேறும்படி சபை தரப்பிலிருந்து மேரிக்கு கூறப்பட்டது. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட மேரி, தொடர்ந்து சபைக்கு வெளியே பிரச்சினையின்றி வாழ வசதியாக தனக்கு அளிக்கப்படவேண்டிய பண பாக்கிகளை அளிக்கும்படி கோரினார். ஆனால், சபை நிர்வாகிகள் தரப்பில் மேரியின் இந்த கோரிக்கையை எதிர்த்தனர்.
ஆனால், கானான் சட்டப்படி, கேரள கத்தோலிக்க சபை சீர்த்திருத்த இயக்கத்தின் ஏதேனும் ஒரு கத்தோலிக்க மதகுருவோ அல்லது கன்னியாஸ்த்ரீயோ சபையை விட்டு வெளியே செல்ல விரும்பினால் அவருக்கு தேவையான பணத்தை பெற உரிமையுண்டு என சீர்த்திருத்த இயக்கத்தின் செயலாளர் ரெஞ்சி கூறுகிறார். ஆனால், கத்தோலிக்க சபையானது, மேரி கேட்ட 30 லட்சம் ரூபாயை தர மறுத்ததுடன், ஒரு லட்சம் ரூபாய் மட்டுமே வழங்க முடியும் என பேரமும் பேசியது.
இதனை தொடர்ந்து, இரண்டு வாரங்களுக்கு முன், மேரி மனித உரிமை மற்றும் பெண்கள் ஆணையங்களுக்கு தான் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தன்னுடைய மேலதிகாரிகளால் துன்புறுத்தப்படுவதாக கூறி புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளார். பெண்கள் ஆணையத்திற்கு, மேரி புகார் அனுப்பியதன் எதிரொலியாக சபை நிர்வாகத்தினர் மேரிக்கு எதிராக பழி வாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளத் துவங்கினர்.
மேரியின் மீது திருட்டுக் குற்றம் சுமத்தி சபை நிர்வாகிகள் தரப்பில் போலீஸில் புகார் கூறப்பட்டுள்ளது. இதனடிப்படையில், போலீசார் தன்னை அழைத்து சபையின் உத்தரவை ஏற்று சபையை விட்டு வெளியேறுமாறு மிரட்டியதாக மேரி கூறுகிறார்.
இதனிடையே கடந்த வாரம், காண்வென்டுடன் இணைந்துள்ள குழந்தைகள் நலவாழ்வு மையத்தில் உள்ள குழந்தைகளை துன்புறுத்தியதாக மேரி மீது குற்றஞ்சாட்டி குழந்தைகள் நல ஆணையத்தில் மற்றொரு புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், நிர்வாகக் குழுவினர், குழந்தைகளிடமிருந்து விலகியிருக்கும் வகையில் தன்னிடமிருந்து வலுக்கட்டாயமாக உறுதிமொழிப் பத்திரம் ஒன்றை எழுதி வாங்கியதாக மேரி கூறுகிறார்.
இதுகுறித்து நியூஸ்மினிட்டிடம் தொலைபேசியில் பேசிய மேரி “ நான் எனது வாழ்க்கையை குறித்து மிகவும் பயந்து போயுள்ளேன். அவர்கள் மிகவும் அதிகாரம்மிக்கவர்கள். தங்களுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி மேலும் என்னை துன்புறுத்தக் கூடும்” என்றார்.
மேலும் அவர், தான் சபையில் சேர்ந்தது முதற்கொண்டே பொய் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக்கப்பட்டு வருவதாகவும் கூறுகிறார். 1997 ஆம் ஆண்டு, சமூக சேவை தொடர்பான முதுநிலை மாணவியாக இருந்த போது காண்வெண்டில் உள்ள அவரது பொறுப்பாளர், மதக் குரு ஒருவருடன் உறவு இருப்பதாகக் கூறி பொய்யாக குற்றஞ்சாட்டியதாக கூறினார்.
“யாருமே எனது தரப்பு கருத்தை கேட்கவில்லை.என் மீதுள்ள குற்றச்சாட்டு தவறு என நிரூபிக்க எனக்கு எந்த வாய்ப்பும் அளிக்கப்படவில்லை. அதனாலேயே நான் வலுக்கட்டாயமாக யாருடனும் பேச அனுமதிக்கப்படாத முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டேன். அந்த நாள்களில் வெளியுலகுடன் எந்த தொடர்பும் இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டேன்.” என்றார் அவர்.
ஆனால், 2000 களின் துவக்கத்தில் நிலைமை மேலும் மோசமானது. பாலாவில் சபை சார்பில் சாந்திநிலையம் என அழைக்கப்படும் சிறப்புப் பள்ளியில் நடந்த மோசடிக்கு மேரி எதிர்ப்பு தெரிவித்தார்.
“பல்கலைகழக நிதியை பெற மோசடியாக அவர்கள் கன்னியாஸ்தீரிகளையும் ஆசிரியர்கள் பட்டியலில் சேர்த்த போது, நான் அதனை எதிர்த்தேன். இதுகுறித்து எனது சக கன்னியாஸ்தீரிகளிடமும், பொறுப்பாளர்களிடமும் விவாதித்தேன். அதிலிருந்து , நான் மனநலம் பாதிக்கப்பட்டவள் என அவர்கள் முத்திரை குத்த ஆரம்பித்தனர் “ என்றார் அவர்.
சபையின் உத்தரவின் பேரில், கல்வியாண்டின் இடைப்பட்ட காலங்களில் கூட தான் ஒரு காண்வெண்டிலிருந்து மற்ற காண்வென்டுகளுக்கு இடமாற்றலை எதிர்கொள்ள வேண்டியிருந்ததாக அவர் கூறினார். மேரி சபை சார்பில் நடத்தப்படும் பள்ளி ஒன்றில் ஆசிரியராகவும் இருந்து வருகிறார். இவ்வாறு, மாற்றலாகி செல்லும் கான்வென்டுகளில் உள்ள பொறுப்பாளர்களால் பல்வேறு சந்தர்ப்பங்களில் தான் கடுமையாக தாக்கப்பட்டதாகவும் மேரி கூறுகிறார்.
இப்படிப்பட்ட தொடர் துன்புறுத்தல்களின் எதிர்வினையாக சபையை விட்டு வெளியேற மேரி முடிவு செய்துள்ளார். இதற்கு முன்னர் ஜெஸ்மி என்ற  33 வயது கன்னியாஸ்திரீயும் சபையின் பொறுப்பாளர்களின் துன்புறுத்தலுக்கு ஆளாகி வெளியே சென்றுள்ளார். அப்போது, “ ஆமேன். ஒரு கன்னியாஸ்திரீயின் சுயசரிதை” என்ற அவரது சுயசரிதை மிகப்பெருமளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது போன்றே மற்றொரு கன்னியாஸ்தீரி அபயா கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி ஒரு மதக் குரு என்பதன் மூலம் கத்தோலிக்க சபையில் எத்தகைய சீர்கேடுகள் நிலவுகின்றன என்பதை அறிந்து கொள்ள முடியும்.
இதனிடையே, மேரி சபையை விட்டு வெளியேறினால் அவரை ஏற்றுக்கொள்ள அவரது குடும்பத்தினர் தயாராக இல்லை. “உண்மையில்  நான் சபையை விட்டு வெளியேறுவதை அவர்கள் விரும்பவில்லை. அவ்வாறு வெளியேறினால் தங்களுக்கும் களங்கம் ஏற்படக்கூடும் என்றும் சமூகத்தில் பலரும் எனது நடவடிக்கையை குறைகூறுவார்கள் என்றும் கருதுகின்றனர்.” என்று கூறினார் அவர்.
இதனிடையே, பொறுப்பாளர்கள் மீது கூறப்பட்டுள்ள துன்புறுத்தல் குற்றச்சாட்டை மறுத்து பேசினார் சீறோ மலபார் சபையின் செய்தித் தொடர்பாளர் டாக்டர் பால் திலக்கட். மேலும் சபையை விட்டு வெளியேற சபை யாரையும் தடுக்கவில்லை எனவும் கூறினார். அத்துடன், இந்த விவகாரம் குறித்து விளக்கமாக தனக்கு எதுவும் தெரியாது எனக் கூறிய அவர், கானான் சட்டம், சபையை விட்டு வெளியேறும் எவருக்கும் இழப்பீடு கொடுக்க வேண்டும் எனக் கூறவில்லை என்றும் கூறினார்.
மேலும், சபையை விட்டு வெளியேறுபவர்களுக்கு நிதி உதவி செய்வது மனிதாபிமான அடிப்படையில் மட்டும் தான் எனவும், துறவறம் என்பது சேவை தான். பணம் சம்பாதிப்பதற்கு அல்ல என்றும் கூறினார் அவர். thenewsminute.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக