செவ்வாய், 2 ஆகஸ்ட், 2016

சசிகலா புஷ்பா சோனியாவை சந்திக்கிறார்.. காங்கிரஸ் பலத்தோடு களத்தில்...


அதிமுக-வின் ராஜ்யசபா உறுப்பினரான சசிகலா புஷ்பா, தன் கட்சித் தலைமைக்கு எதிராக ராஜ்யசபாவில் கொந்தளித்துத் தீர்த்த நிலையில், இன்னும் டெல்லியிலேயே முகாமிட்டுள்ளார். அவர் ராஜ்யசபாவில் பேசியபோது தனக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியையும், ராகுல் காந்தியையும் சந்திக்க விரும்புகிறார். அவர்களிடம் அதற்கான அனுமதியும் கேட்டு, வாய்ப்புக்காக காத்திருக்கிறார். சசிகலா புஷ்பா நேற்று ராஜ்யசபாவில் கொந்தளித்துக் கொண்டிருந்தபோது திமுக உறுப்பினர்கள் அமைதியாகவே இருந்தனர். திமுக உறுப்பினரான திருச்சி சிவா நேற்று ராஜ்யசபாவுக்கு செல்லவேவில்லை. ஆனாலும், திமுக-வின் கனிமொழியையும், திருச்சி சிவாவையும்கூட சந்தித்து நன்றி சொல்வதாகத் தெரிவித்திருக்கிறார் சசிகலா புஷ்பா.

ராஜ்யசபாவில் குரல் கொடுத்த நிலையில் டெல்லியில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், சசிகலா புஷ்பா தமிழகம் திரும்பும்போது சென்னை விமான நிலையத்திலேயே அவருக்குக் கடும் எதிர்ப்பைக் காட்ட அதிமுக-வினர் முடிவு செய்திருக்கின்றனர். தவிரவும் சென்னை வீட்டிலோ, தூத்துக்குடி வீட்டிலோகூட இப்போதைக்கு தங்குவது நல்லதல்ல என்று உறவினர்கள் சொல்வதால், தகுந்த முன்னேற்பாடுகளுடன்தான் தமிழகம் வருவாராம். அந்த முன்னேற்பாடு என்பது ‘காங்கிரஸ் கட்சியில் இணைந்து, தன்னைக் காத்துக்கொள்ளும் வலிமையோடுதான் வருவார் புஷ்பா’ என்கிறது டெல்லி வட்டாரம்
முந்தய செய்தி :நேற்று ராஜ்யசபாவில் அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், தன்னைக் கட்டாயப்படுத்தி எம்.பி. பதவியை ராஜினாமா செய்யச் சொல்கின்றனர் என்ற பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார். மேலும் தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவைத் தலைவரிடம் கோரிக்கை வைத்தார். தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்த, அதிமுக எம்.பி. சசிகாலா புஷ்பாவின் இந்தப் பேச்சு, மாநிலங்களவையில் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் மிகப் பெரிய அதிர்வலை ஏற்படுத்தியது.மாநிலங்களவையில் அவர் பேசும்போதே, காங்கிரஸ் எம்.பி.க்கள், சசிகலா புஷ்பாவுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அவருக்கு ஆதரவாக கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து பேசிய காங்கிரஸ் எம்.பி. குலாம் நபி ஆசாத், “சசிகலா புஷ்பா பேசுவதை புறக்கணித்துவிட முடியாது. அவருக்கு முழுப் பாதுகாப்பு வழங்குவதற்கு, அவை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
இதையடுத்து, சசிகலா புஷ்பாவின் டில்லி வீட்டுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில், தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும், சசிகலா புஷ்பாவிற்கு ஆதரவாக பேசியுள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், தாக்குதலும், அச்சுறுத்தலும் அதிமுகவுக்கு ஒன்றும் புதிதல்ல என்று தெரிவித்தார்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணியும் சசிகலா புஷ்பாவை ஆதரித்துப் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.minnambalam.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக