வெள்ளி, 5 ஆகஸ்ட், 2016

மாநிலங்களை கையேந்தும் நிலைக்குத் தாழ்த்திவிடாதீர்”: நாடாளுமன்றத்தில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு

சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டமுன்வடிவு கொண்டுவரப்படுகையில் மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்படக்கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி எம்.பி. கூறினார். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. புதனன்று மாநிலங்களவையில் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்புக்கு (ஜிஎஸ்டி) வகை செய்யும் விதத்தில் அரசமைப்புச்சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவதற்கான சட்டமுன்வடிவு தாக்கல் செய்யப்பட்டது.
இதில் பங்கேற்று சீத்தாராம் யெச்சூரி பேசியது:
இப்போது கொண்டுவந்திருக்கிற இந்தச் சட்டத்திருத்தம் அரசமைப்புச் சட்டத்தில் மிகவும் முக்கியமான திருத்தம். எனவே இதனை ஆழ்ந்த கவனத்துடன் பரிசீலித்திட வேண்டும். இதுதொடர்பாக ஐந்து அம்சங்களை உங்கள் முன் வைக்கிறேன்.

1 முதலாவது அம்சம், “நம் அரசமைப்புச் சட்டத்தின் கூட்டாட்சிக் கட்டமைப்பு பற்றியதாகும். இந்திய அரசமைப்புச்சட்டத்தில் முதல் பிரிவு என்ன கூறுகிறது? “இந்தியா, அதாவது பாரதம், மாநிலங்களின் ஓர் ஒன்றியமாகும்.’’மாநிலங்கள் இல்லையேல், இந்தியா இல்லை. நம் அரசமைப்புச் சட்டத்தின் கூட்டாட்சிக் கட்டமைப்பே அந்தக் கருத்தாக்கத்திலிருந்துதான் மலர்கிறது. எனவே, ஒட்டுமொத்த, கூட்டாட்சிக் கட்டமைப்பும், மாநிலங்களின் உரிமைகளும் நம் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை அம்சங்களாகும். நம் அரசமைப்புச் சட்டம் இப்படி உருவாக்கப்பட்டிருப்பதால்தான், நாம் அனைவரும் இங்கே இருக்கிறோம். பொது சரக்கு மற்றும் சேவைகள் வரி குறித்து நம் அரசமைப்புச் சட்டம் உருவான காலத்தில் விவாதிக்கப்படவில்லை. அப்போது விவாதிக்கப்பட்டது என்னவென்றால், சரக்குகள் மீதான வரி. எனவே சரக்கு வரி என்பது இப்போது வந்துள்ள புதிய கருத்தாக்கம் அல்ல. அரசியல் நிர்ணயசபையில் விவாதங்கள் தொடங்கிய காலத்திலிருந்தே இது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அம்பேத்கர் என்ன சொன்னார்?
இப்போது பிரச்சனை என்னவென்றால், மாநிலங்கள் விற்பனை வரிக்கான உரிமையைப் பெற்றிருக்க வேண்டுமா என்பதாகும். இந்தப் பிரச்சனையில் டாக்டர் அம்பேத்கர் என்ன கூறினார்? அவர் அரசியல் நிர்ணயசபையில் பேசியதை மேற்கோள் காட்டுகிறேன்:“மாநிலங்கள் விற்பனை வரியை வசூலிப்பதற்கு நாம் அனுமதிப்போமானால், மாநிலங்கள் விற்பனை வரி விகிதத்தை சரி செய்துகொள்வதற்கான சுதந்திரத்தையும் பெற்றுக்கொள்ள வேண்டும். எனவே, மத்தியில் இருந்து ஓர் உச்சவரம்பு விதித்தோமானால் அது விற்பனை வரி விதிப்பிற்கு ஒரு பெரிய முட்டுக்கட்டையாக அமைந்துவிடும்.’’ அவர் மேலும் கூறுகிறார்: “மாநிலங்கள் தங்களைச் சார்ந்திருக்கக்கூடிய விதத்தில் ஏராளமான வளங்கள் இருக்கின்றன. அந்த வளங்கள் மத்தியப் பட்டியலில் குவிக்கப்பட்டிருக்கிறது. அவற்றில் குறைந்தபட்சம் ஒரு முக்கியமான வருவாய் வாய்ப்பையாவது மாநிலங்களுக்கு அளித்திட வேண்டியது விரும்பத்தக்கதாகும். எனவே, விற்பனை வரியை மாநிலங்களின் கைகளில் ஒப்படைப்பதற்கான முன்மொழிவு, இந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கப்படுகையில், மிகவும் நியாயமான ஒன்றாகும்.’’இப்படியாக, இந்தப் பிரச்சனை அப்போதிருந்தே விவாதப் பொருளாக இருந்திருக்கிறது.
மாநிலங்களுக்கு உரிமை இல்லை
நாம் வாட் அறிமுகப்படுத்தினோம். அதில், மாநிலங்களின் உரிமைகளில் அதிக அளவுக்கு பறிக்கப்பட்டுவிட்டது. இப்போது சரக்கு மற்றும் சேவைகள் வரியானது சேவைகளையும் சரக்குகளுடன் சேர்த்து மாநிலங்களிடமிருந்து இழுத்துக்கொண்டு வந்துவிடுகிறது. இப்போது, மாநில அரசுகள் தங்கள் வளங்களை அதிகரித்துக் கொள்ள எந்த உரிமையும் கிடையாது. தங்கள் மாநில மக்களின் நலன்களுக்கு எது முக்கியம் என்று மாநில அரசு கருதினாலும், அவை இனி தடைசெய்யப்பட்டுவிடும். இந்தப்பிரச்சனையை எப்படி நீங்கள் எதிர்கொள்ளப் போகிறீர்கள்? நான் இதுகுறித்து நிதி அமைச்சரிடம் சொன்னபோது, அவர், சரக்கு மற்றும் சேவைகள் வரி சட்டமுன்வடிவு வரும்போது, இது குறித்து ஆராயப்படும் என்று சொன்னார். மாநிலங்களுக்காக சில நீக்குப்போக்குகள் இருக்கும் என்றார்.
கேரள வரியும், வங்க வரியும்
இன்றைக்கும்கூட கேரள அரசாங்கம், ஒரு வரி விதித்திருக்கிறது. சுகாதார வரி. துரித உணவுகள் (ஃபாஸ்ட் புட்) மீது வரி விதித்திருக்கிறது. அனைத்துவிதமான துரித உணவு வகைகளும் மிகவும் குண்டாகும் நிலையை ஏற்படுத்துகின்றன. எனவே அதன்மீது வரி என்பது ஓர் உன்னதமான சிந்தனை. இது சர்வதேச அளவில் வரவேற்கப்பட்டிருக்கிறது. ஆனால் தற்போது ஜிஎஸ்டி வரிக்கான சட்டத்திருத்தம் நிறைவேறிவிட்டதால் அத்தகைய உரிமைகள் பறிக்கப்பட்டு விடுகின்றன. மேற்கு வங்கத்தில் சிகரெட்டுகள் மீது சர்சார்ஜ் விதிக்கப்படுகிறது.
எதற்காக என்றால் சாரதா ஊழலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக விதிக்கப்பட்டிருக்கிறது. இது நிறைவேற்றப்பட்டுவிட்டால் அந்த உரிமை இருக்காது. எந்தப் பேரிடராக இருந்தாலும் அதனை தேசியப் பேரிடர் என்று கூறி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங்கங்களை மத்திய அரசிடம் கேயேந்தும் நிலைக்கு மாற்றப்போகிறோமா?மாநிலங்களின் சட்டப்படியான உரிமைகள் தான் என்ன? இங்கே அமர்ந்திருக்கிற நாம் அனைவரும் மாநிலங்களின் பிரதிநிதிகள்தான். இந்த உரிமையை நாம் எப்படிப் பாதுகாக்கப் போகிறோம்? இது ஒரு முக்கியமான அம்சமாகும். இது குறித்து தெளிவுபடுத்தப்பட வேண்டும்.
கையேந்தும் நிலைக்குத் தாழ்த்திவிடாதீர்
சரக்குகள் மற்றும் சேவைகள் வரி சட்டமுன்வடிவு உண்மையிலேயே நடைமுறைக்கு வரக்கூடிய சமயத்தில் மாநில அரசுகளுக்கான உரிமைகளைத் பாதுகாத்திட வழிகாணப்பட வேண்டும். மாநிலங்கள் மத்திய அரசிடம் கேயந்தும் நிலைக்குத் தாழ்த்திடக் கூடாது. அவ்வாறு செய்தீர்களானால் நம் அரசமைப்புச் சட்டம் உருவாக்கித்தந்துள்ள மத்திய- மாநில அரசுகளுக்கு இடையிலான கூட்டாட்சித் தத்துவம் அழிக்கப்பட்டுவிடும். இதனை ஏற்க முடியாது. எனவே இது தொடர்பாக உறுதிமொழியை இந்த அரசாங்கம் தந்திட வேண்டும். சரக்குகள் மற்றும் சேவை வரிகளுக்கான சட்டமுன்வடிவு கொண்டுவரப்படுகையில் அதற்கான ஷரத்துக்கள் அதில் காணப்பட வேண்டும்.
ஜிஎஸ்டி என்பது மறைமுக வரிதான்
2 இரண்டாவது அம்சம், சரக்குகள் மற்றும் சேவைகள் வரி என்பது உண்மையிலேயே ஒரு மறைமுக வரி விதிப்புதான். மறைமுக வரியே ஒரு பிற்போக்குத்தனமான வரிதான். இது ஏழைகளை மேலும் கடுமையாகத் தாக்குகிறது. இந்தியாவில், இன்றையதினம் நேர்முக வரி 37.7 சதவீதமாகும். மீதம் உள்ள 62.3 சதவீதம் மறைமுக வரி ஆகும். அதாவது, மக்கள் மீது சுமைகள் ஏற்றப்பட்டிருக்கிறது என்று அர்த்தம். கடந்த பட்ஜெட்டின்போது நிதி அமைச்சர், “மறைமுக வரிகள் 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு உயர்த்தப்படும் என்றும் அதே சமயத்தில் நேரடி வரிகள் ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்குக் குறைக்கப்படும்,’’ என்றும் கூறினார். என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்? பணக்காரர்களை மேலும் வளமானவர்களாக மாற்றுகிறீர்கள். ஏழைகளை மேலும் வறிய நிலைக்குத் தள்ளுகிறீர்கள். இந்தப் பின்னணியில் இந்த 37.7 சதவீத நேரடி வரி சேகரிப்பை, தெற்கு ஆசியாவில் உள்ள இதர நாடுகளின் பொருளாதாரத்துடன் ஒப்பிட்டுப் பாருங்கள்.இந்தோனேசியாவில் நேரடி வரி வருவாய் 55.8 சதவீதம்.பிரிக்ஸ் (BRICS) நாடுகளில் ஓர் அங்கமாக உள்ள தென் ஆப்பிரிக்காவில் நேரடி வரி வருவாய் 57.5 சதவீதம். ஆனால் நம் நாட்டில் அது 37.7 சதவீதம் மட்டுமே. இவை எல்லாவற்றிற்கும் மேலாக, இப்போது சரக்குகள் மற்றும் சேவைகள் வரி. இதற்கு நீங்கள் உச்சவரம்பு விதிக்க வேண்டும். விதிக்கவில்லை எனில் அது சாமானிய மக்கள் மீது கடும் பாதிப்புகளை ஏற்படுத்திடும். இன்று நாட்டின் எதார்த்த நிலை என்ன?கடந்த ஓராண்டில், நம் நாட்டில் உள்ள பெரும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 100இலிருந்து 150ஆக உயர்ந்திருக்கிறது. உங்கள் கூற்றின்படியே “இந்தியா ஒளிர்கிறது.’’ ஆனால் 2011 பொருளாதார ஆய்வு அறிக்கை என்ன கூறுகிறது?“இந்தியாவில் 90 சதவீதக் குடும்பங்களில், குடும்பத்தலைவர் நிலையில் இருப்பவர் மாதத்திற்கு 10 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாகவே வருவாய் ஈட்டி வருகிறார்,’’ என்று கூறியிருக்கிறது. இவ்வாறு இருவிதமான இந்தியர்கள் நாட்டில் இருக்கிறார்கள். இந்தப் பின்னணியில் நீங்கள் கொண்டுவரும் சரக்குகள் மற்றும் சேவைகள் வரி விதிப்புச் சட்டம் இவ்விரு வகை இந்தியர்களுக்கும் இடையிலான இடைவெளியே மேலும் அதிகரித்திடவே இட்டுச் செல்லும்.எனவே இச்சட்டமுன்வடிவைக் கொண்டுவருகையில் அரசு இதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
3 மூன்றாவது அம்சம் துல்லியமான திருத்தங்கள் குறித்ததாகும்.திருத்தங்கள் தொடர்பாக அரசு கொண்டுவந்துள்ள பரிந்துரைகளில் குழப்பங்கள் நீடிக்கின்றன. அவை தெளிவாக்கப்பட வேண்டும்.
4 நான்காவது அம்சம், சரக்குகள் மற்றும் சேவைகள் வரி தொடர்பாக தாவா ஏற்பட்டால் அதனை எப்படிச் சரிசெய்துகொள்வது என்பதற்கான தாவா தீர்வு நடைமுறை குறித்ததாகும். இது தொடர்பாக துல்லியமான முறையில் விவாதித்து,இச்சட்ட முன்வடிவு கொண்டுவரப்படுகையில் அதில் இணைக்கப்பட வேண்டும்.
5 இறுதியாக நான் கூறவிரும்பும் அம்சம் என்னவெனில், இது ஓர் ஆழமான சட்டமுன்வடிவாகும். மாநிலங்களின் வரி வருவாயில் கடும் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய விதத்தில் இச்சட்டமுன்வடிவைக் கொண்டுவர இருக்கிறோம். அதேபோன்று இதில் பெறக்கூடிய வருவாயை எதற்கு செலவழிக்கப்போகிறோம் என்பதிலும் மிகப்பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட இருக்கின்றன. எனவே சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டமுன்வடிவு மட்டுமல்ல, அதனுடன் தொடர்புடைய மத்திய, மாநில சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டமுன்வடிவுகளும் நம் விவாதத்திற்காக இங்கே கொண்டுவரப்பட்ட, உரிய விவாதங்களுக்குப்பின் நிறைவேற்றப்பட வேண்டும். அவை நிதிச் சட்டமுன்வடிவாக கொண்டுவரப் படக்கூடாது. எதை எதை நிதி சட்ட முன்வடிவாகக் கொண்டுவரலாம் என்பது குறித்து நம் சக உறுப்பினர் ஒருவர் ஏற்கனவே உச்சநீதிமன்றத்தை நாடி இருக்கிறார். நாம் அதன் தீர்ப்புக்காக காத்திருப்போம்.
பச்சையும் சிவப்பும்
காலனிய ஆட்சிக் காலத்திலிருந்த பல நடைமுறைகளை பாரம்பரியமாக இப்போதும் நாம் தொடர்ந்து கொண்டிருக்கிறோம். அதில் ஒன்று, நிறம் தொடர்பானது. மக்களவைக்குப் பச்சை நிறம், மாநிலங்களவைக்கு சிவப்பு நிறம்.மக்களவை ஒரு சட்டத்தை நிறைவேற்றி, அது மாநிலங்களவையின் அறிவுக்குப் பொருந்தி வரவில்லை என்றாலோ அல்லது நாட்டு மக்களின் நலன்களுக்குப் பாதகமானது என்று கருதினாலோ அதனைத் தடுத்து நிறுத்த வேண்டும், நம் சிவப்பு நிறத்தைக் காட்ட வேண்டும் என்ற அடிப்படையில்தான் அவ்வாறு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அந்த உரிமை மறுக்கப்படக் கூடாது. அரசமைப்புச் சட்டத்தின்படி இறையாண்மையின் உச்சபட்ச அதிகாரம் மக்கள்தான். நாம் நம் அரசமைப்புச் சட்டத்தை, “மக்களாகிய, நாம்… என்றுதான்… துவக்குகிறோம். எனவே, நாட்டு மக்களின் நலன்கள்தான் உச்சபட்சம்.சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தைக் கொண்டுவரும்போது நாட்டு மக்களின் நலன்களை மேம்படுத்தப்போகிறோமா அல்லது கீழிறக்கப் போகிறோமா என்று பார்க்க வேண்டும்.
அனுபவம் என்ன?
இந்தச் சட்டம் தொடர்பாக சில நாடுகளின் அனுபவங்கள் என்ன கூறுகின்றன.?கனடாவில் கன்சர்வேடிவ் கட்சியின் சார்பில் முல்ரோனி 1991இல் இந்தச் சட்டத்தை கொண்டு வந்தார். அப்போது அவருக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இருந்தது. நாட்டில் இதற்கெதிராக பெரும் அமளி ஏற்பட்டது. பின் அது 1993இல் நிறைவேறியது. பின்னர் நடைபெற்ற தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைக் கொண்டிருந்த கட்சி, வெறும் இரு உறுப்பினர்களை மட்டுமே பெறக்கூடிய கட்சியாக மாறியது. இதனை மனதில் கொள்ள வேண்டும்.மக்களின் நலன்கள் தலையாயது; முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியது. அந்த அடிப்படையில் இது தொடர்பான இதர சட்டமுன்வடிவுகளையும் கொண்டு வரலாம், பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளலாம்.
நன்றி: தீக்கதிர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக