புதன், 31 ஆகஸ்ட், 2016

சிங்கூர் நிலத்தை மீண்டும் விவசாயிகளிடமே ஒப்படைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

tamil.thehindu.com : மேற்குவங்க மாநிலம் சிங்கூரில் விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட நிலத்தை மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்குமாறு மேற்குவங்க அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் 10 ஆண்டுகளாக விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வந்ததால் அரசு அவர்களுக்கு வழங்கிய இழப்பீட்டுத் தொகையை திரும்பத் தர தேவையில்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சிங்கூர் நிலம் விவசாயிகளிடமிருந்து சட்டவிரோதமாக கையகப்படுத்தப்பட்டதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. இதனால் பத்து ஆண்டுகால சட்டப் போராட்டத்தில் சிங்கூர் மக்களுக்கு நியாயம் கிடைத்துள்ளது. வழக்கு பின்னணி:
கடந்த 2006-ம் ஆண்டு மேற்குவங்க மாநிலத்தின் சிங்கூர் மாவட்டத்தில் நானோ கார் தொழிற்சாலை அமைக்க 1000 ஏக்கர் நிலத்தை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கையகப்படுத்தியது.
விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட ஆயிரம் ஏக்கர் நிலத்தை அப்போதைய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு டாடா நிறுவனத்துக்கு ஒதுக்கி உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து நில உரிமையாளர்கள், விவசாயிகள் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், நிலம் கையகப்படுத்தப்பட்டது செல்லும் என கொல்கத்தா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதனை எதிர்த்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு புதன்கிழமை நீதிபதிகள் வி.கோபால கவுடா, அருண் மிஸ்ரா அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், "மேற்குவங்க மாநிலம் சிங்கூரில் விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட நிலத்தை மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்க வேண்டும். இதற்கான ஆய்வுகளை 10 வாரங்களுக்குள் மாநில அரசு செய்து முடித்து. 12 வாரங்களுக்குள் சம்பந்தப்பட்ட விவசாயிகளிடம் நிலத்தை திருப்பி ஒப்படைக்க வேண்டும்.
மேலும் விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இத்தனை ஆண்டுகளாக இழந்து தவித்து வந்ததால் அவர்களுக்கு அரசு இது காலம் வரை வழங்கி வந்த இழப்பீட்டுத் தொகையை அவர்கள் திரும்பித்தர தேவையில்லை" என உத்தரவிட்டனர்.
மாறுபட்ட கருத்து:
வழக்கு விசாரணையின்போது நிலம் கையகப்படுத்தப்பட்டதற்கான காரணம் தொடர்பாக நீதிபதி கவுடாவும், மிஸ்ராவும் மாறுபட்ட கருத்தை தெரிவித்தனர்.
நீதிபதி கவுடா கூறும்போது, "ஒரு தனியார் நிறுவனத்துக்கு சாதகமாக விவசாய நிலத்தை கையகப்படுத்துவதை எப்படி பொது நன்மைக்காக எனக் குறிப்பிட முடியும். சிங்கூர் நிலம் கையகப்படுத்தப்பட்டது முற்றிலும் சட்டவிரோதமான செய்கை" என்றார்.
இந்த கருத்தில் இருந்து நீதிபதி மிஸ்ரா மாறுபட்ட கருத்து தெரிவித்தார். டாடா மோட்டார்ஸ் நிலம் கையகப்படுத்தியதில் ஒரு பொது நன்மை இருக்கிறது. சிங்கூரில் நானோ கார் தொழிற்சாலை அமைந்திருந்தால் அங்கு ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கும்" என்றார்.
இருப்பினும் இறுதியில் இரண்டு நீதிபதிகளும் நிலம் கையகப்படுத்துதல் முறையாக அமையவில்லை என்ற கருத்தில் உடன்பட்டனர். நிலம் கையகப்படுத்துதல் சட்டபூர்வமாக நடைபெற வேண்டும் அப்படியில்லாவிட்டால் நிலம் கையகப்படுத்தக் கூடாது என கூட்டாக தெரிவித்தனர்.
இறுதியாக நீதிபதி மிஸ்ரா கூறும்போது, "நிலம் கையகப்படுத்துதல் பொது நன்மைக்காகவே செய்யப்பட்டிருந்தாலும் நானோ கார் தொழிற்சாலை திட்டம் தற்போது குஜராத்தில் செயல்பட்டு வருகிறது. எனவே, நிலத்துக்கான தேவை இப்போது இல்லை. எனவே சிங்கூர் நிலம் கையகப்படுத்தப்பட்டது ரத்து செய்யப்படுகிறது" என்றார்.
விவசாயிகள் வாதம் வென்றது:
2006-ம் ஆண்டு சிங்கூரில் உள்ள 1000 ஏக்கர் நிலத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு ஒதுக்கியதில் நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தின் 4,5 பிரிவுகள் பின்பற்றப்படவில்லை. அதாவது நிலத்தை கையகப்படுத்தும் முன் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படவில்லை என்ற வாதத்தை விவசாயிகள் முன்வைத்திருந்தனர்.
இந்த வாதத்தை ஏற்றுக் கொண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கம்யூனிஸ்ட் ஆட்சியை சரிய வைத்த சம்பவம்
சிங்கூரில் நிலம் கையகப்படுத்துதலை எதிர்த்து விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் போலீஸார் நிகழ்த்திய அடக்குமுறை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், மேற்குவங்கத்தில் கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு மக்கள் விடை கொடுத்து திரிணாமூல் காங்கிரஸின் மம்தா பானர்ஜியை முதல்வராக தேர்ந்தெடுக்க வழிவகுத்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக