திங்கள், 8 ஆகஸ்ட், 2016

திருமாவளவன் :ஸ்டாலின் கலைஞரை விட ஜெயலலிதாவையே முன்மாதிரியாக வைத்து செயல்படுகிறார்

திருமாவளவன் தடாலடி``ஊடக வலிமை இல்லாத எந்த ஒரு கட்சியும் அரசியல் வலிமை பெற முடியாது.  திரைப்படங்கள் வெற்றிகரமாக ஓடவேண்டும் என்றால்கூட, ஊடகம் இப்போது தேவைப்படுகிறது. திரைப்படத்துக்கே அப்படி என்றால், அரசியல் கட்சிகளுக்கு நிச்சயம் ஊடகம் தேவை. அதனால்தான் எங்களுக்கான குரலாக `வெளிச்சம்' என்ற தொலைக்காட்சி சேனலை ஆரம்பித்திருக்கிறோம்'' `தொல்.திருமாவளவன் தி.மு.க-வை நோக்கி நகர்கிறார், மக்கள் நலக் கூட்டணியில் இருந்து விலகுகிறார்' என செய்திகள் வந்துகொண்டிருக்க, அவரோ தங்கள் தொலைக்காட்சிக்கான நிகழ்ச்சித் தயாரிப்புப் பணிகளில் பரபரப்பாக இருக்கிறார்.

``திரைப்படம், ஊடகம் பற்றி நீங்கள் பேசியதால், முதலில் `கபாலி'யில் இருந்தே ஆரம்பிப்போம். படம் பார்த்தீர்களா?''


`` `கபாலி' எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இரு குழுக்களுக்கு இடையே நடக்கும் மோதல் பற்றிய கதைதான் படம். இதில் எங்கேயுமே சாதி முன்நிறுத்தப்படவில்லை; தமிழர் அடையாளம், கொத்தடிமைக் கலாசாரம்தான் முன்நிறுத்தப்படுகின்றன. ஆனால், பா.இரஞ்சித் தலித் சமூகத்தைச் சார்ந்த இயக்குநர் என்ற காரணத்தினாலேயே, அவர் மீது விமர்சனம் வைக்கிறார்கள்.

ரஜினிகாந்துக்குத் தெரியாமல் இரஞ்சித்தால் ஒரு வசனம்கூட படத்தில் பேசவைத்திருக்க முடியாது. சாதி என்ற எல்லைகளைக் கடந்து, சினிமா என்ற அடிப்படையில்தான் படத்தைப் பார்த்திருக்கிறார் ரஜினிகாந்த். இந்த விமர்சனங்களை எல்லாம் கடந்து படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. கொச்சையான விமர்சனங்களால் ரஜினிகாந்தையும் இரஞ்சித்தையும் வீழ்த்த முடியாது. படம் பார்த்து முடித்ததுமே இரஞ்சித்தை அழைத்து வாழ்த்தினேன். மகிழ்ச்சி.''

``தற்போது தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடப்பவற்றைக் கவனிக்கிறீர்களா?''

 ``இது சட்டமன்றம் அல்ல; பஜனை மடம். அ.தி.மு.க-வினர் மக்கள் பிரச்னைகளைப் பற்றிப் பேசுவதைவிட... முதலமைச்சருடைய புகழ் பாடுவதற்குதான் அதிக நேரத்தைச் செலவழிக்
கிறார்கள். முக்கியப் பிரச்னைகளில் எல்லாம் தி.மு.க தலைவரை வசைபாடுவது, ஒருமையில் விளிப்பது, அதன் மூலம் சட்டமன்றத்தில் கூச்சல் குழப்பதை ஏற்படுத்துவதுதான் அவர்கள் நோக்கமாக இருக்கிறது. இதனால், மக்களின்  வரிப்பணமும் காலமும் நேரமும்தான் வீணாகின்றன. சபாநாயகர், ஆளும் கட்சி தொண்டரைப்போல செயல்படுகிறார். எதிர்க்கட்சியும் ஆளும் கட்சியும் மக்களுக்கு ஏதாவது செய்ய சட்டமன்றத்தில் வாதிட வேண்டும். எதிர்க்கட்சியும் அடிக்கடி வெளிநடப்பு செய்யாமல் எதிர்ப்பை, கண்டனத்தை அங்கேயே பதிவுசெய்துவிட்டு சட்டமன்றத்தில் பங்கேற்க வேண்டும் என்றுதான் பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்; நாங்களும் எதிர்பார்க்கிறோம்.''

``உள்ளாட்சித் தேர்தல் நெருங்குகிறது. மக்கள் நலக் கூட்டணியில் தே.மு.தி.க இன்னும் நீடிக்கிறதா?''

``தே.மு.தி.க பற்றி இப்போதைக்கு நான் எந்தக் கருத்தையும் சொல்ல முடியாது. ஆனால், ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய நான்கு கட்சிகளும் இணைந்தே இந்த உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்கும். சட்டமன்றத் தேர்தலின்போது எங்களோடு தே.மு.தி.க-வும் தமிழ் மாநில காங்கிரஸும் தொகுதி உடன்பாடு மட்டுமே வைத்துக்கொண்டன. அதனால்தான் நாங்கள் `தே.மு.தி.க - மக்கள் நலக் கூட்டணி - த.மா.க' என பெயர் வைத்தோம். மக்கள் நலக் கூட்டணியில் அவர்கள் ஐக்கியமாகியிருந்தால், அவர்களையும் சேர்த்து `மக்கள் நலக் கூட்டணி' என்றே முன்னிலைப்படுத்தியிருப்போம். சட்டமன்றத் தேர்தல் முடிந்துவிட்டது. இனியும் அவர்கள் எங்களோடு தொடர வேண்டும் என்ற எந்தக் கட்டாயமும் இல்லை. அதே சமயம் விலகி நிற்பதாலேயே, அவர்கள் வெளியேறிவிட்டதாகவும் சொல்லிவிட முடியாது.''

`` `எனது ராஜதந்திரத்தால்தான் தி.மு.க தோல்வியைச் சந்தித்தது' என ம.தி.மு.க செயல்வீரர்கள் கூட்டத்தில் வைகோ பேசியதாக...''

குறுக்கிடுகிறார். ``அந்த அவையில் நானும் இல்லை; என் கட்சித் தொண்டர்களும் இல்லை. இந்தச் செய்தி, ஊடகத்தில் வந்தது... படித்தேன். அன்று மாலையோ, அடுத்த நாளோ அவரோடு பேசும் வாய்ப்பு கிடைத்தது. `என் தொண்டர்களுக்குப் புரியவைப்பதற்காக, பல விஷயங்களைப் பேசினேன். அதில் இந்தக் கூட்டணி அமைத்ததே ஒரு ராஜதந்திரம் என்று சில விஷயங்களைப் பேசினேனே தவிர, இதுபோல நான் சொல்லவில்லை' என என்னிடத்தில் சொன்னார். அதன் பிறகு இந்த மறுப்புச் செய்தியும் ஊடகத்தில் பதிவு ஆகியிருக்கிறது.''
``தி.மு.க தலைவர் கருணாநிதியுடன் இருந்த நட்பு மு.க.ஸ்டாலினுடன் உங்களுக்கு இல்லை என்றும், அவர் தான் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் வேண்டாம் என்கிற முடிவை எடுத்ததாகவும் சொல்கிறார்களே?''

``எந்தத் தனிநபர் மீதும் ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டைச் சொல்லக் கூடாது. ஆனால், ஓர் உண்மையை இங்கு நான் சொல்ல வேண்டும். ஸ்டாலின் அவர்கள், கலைஞரை முன்மாதிரியாக வைத்துச் செயல்படுகிறார் என்பதைவிட, ஜெயலலிதாவை முன்மாதிரியாக வைத்துத்தான் செயல்படுகிறார். கலைஞர் அவர்கள், பெரியார் கொள்கை, மூடநம்பிக்கை எதிர்ப்பு, தலித்கள் போன்ற விளிம்பு நிலை சமூகத்தினரை அரவணைப்பது, பாரதிய ஜனதா கட்சி ஒரு மதவாதக் கட்சி எனச் சொல்கிற துணிச்சல் என பல பன்முகங்களைப் பெற்றிருக்கிறார்.


ஸ்டாலினைப் பொறுத்தவரையில், இதில் இருந்து விலகி ஜெயலலிதாவைப் போல இந்துத்துவத்தை விமர்சிக்காமல், பெரியார் கொள்கைகளைத் தூக்கிப் பிடிக்காமல், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நிற்கிறோம் எனக் காட்டிக்கொள்ளாமல், ஒரு வெற்றியைப் பெற வேண்டும் என நினைக்கிறார். இத்தனை ஆண்டுகளாக பெரியார் கருத்துக்களைச் சிலாகித்துப் பேசியோ, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உரத்துக் குரல்கொடுத்தோ, ஈழத்துப் பிரச்னையில் கலைஞர் காட்டிய வேகத்தையோ, செயலையோ ஸ்டாலினிடம் நான் பார்க்கவில்லை. இவை எல்லாம் இனி அரசியலில் எடுபடாது என ஸ்டாலின் நினைக்கிறார். பா.ஜ.க., அ.தி.மு.க எப்படிப்பட்ட அரசியல் செய்கிறதோ, அது மாதிரியான ஓர் அரசியலைச் செய்ய வேண்டும் என ஸ்டாலின் எண்ணுகிறார். முக்கியமாக, தோழமைக் கட்சிகளுக்கு நிறையத் தொகுதிகளைக் கொடுத்து ஊக்கப்படுத்தக் கூடாது, எல்லாருக்கும் ஒரு ஸீட் கொடுப்பது, எல்லோரையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க நினைப்பது என ஜெயலலிதாவை ரோல்மாடலாகக்கொண்டு ஸ்டாலின் செயல்படுவதுபோல தெரிகிறது. என்னைப் பொறுத்தவரை ஸ்டாலின், இன்னொரு ஜெயலலிதா!''

``ஸ்டாலினை விமர்சிக்கிறீர்கள். அதேசமயம் எதிர்காலத்தில் தி.மு.க-வுடன் சேர வாய்ப்பு இருப்பதை மறுக்க முடியாது என்றும் சொல்கிறீர்களே?''

``நான் சொன்ன சம்பவங்களை எல்லாம் பெரிய பகை எனச் சொல்ல முடியாது. இது அணுகுமுறையில் ஏற்படக்கூடிய ஓர் இடைவெளி; பகைவெளி அல்ல. பொதுநலன் கருதி சில நேரங்கள் சிலரோடு கைகோக்கும் சூழல் நிலவும். நாங்களும் எந்த இடத்திலும் எதிர்காலத்தில் தி.மு.க-வோடு உறவே கிடையாது எனச் சொல்லவும் கிடையாது; சொல்லவும் மாட்டோம்.''

``சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு விஜயகாந்த்தைச் சந்தித்தபோது என்ன சொன்னார்?''

``எல்லா தலைவர்களும் விஜயகாந்த் கட்சி அலுவலகத்தில் ஒன்றாகச் சந்தித்துப் பேசினோம். விஜயகாந்த் இந்தத் தோல்வியை பெரிய பொருட்டாகவே எடுத்துகொள்ளவும் இல்லை; இதற்காக வருத்தப்பட்டதாகவும் தெரியவில்லை. அவர் யார் மீதும் குற்றம் சுமத்தவில்லை. ஆனால், `நீங்க எலெக்‌ஷன்ல நின்னு இருக்கணும். நீங்க நிற்காமல்போனது எனக்கு வருத்தம்தான்' என  அண்ணன் வைகோவிடம் மட்டும் சொன்னார்.''

``கடந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்கு சதவிகிதத்தில் பா.ம.க மூன்றாவது இடம் பிடித்திருக்கிறதே. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?''

``அது மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடு. இரண்டு பெரிய கட்சிகளும் சேர்ந்து 75 சதவிகிதத்துக்கும் மேல் வாக்குகள் பெற்றிருக்கிறார்கள். அதை ஒப்பிடும்போது பா.ம.க சதவிகிதம் எல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளவே கூடாது. எங்களைவிட அவர்கள் கூடுதலான வாக்குகளைப் பெற்றிருக்கிறார்கள். அவ்வளவுதான்.''

``இன்று வரையில் விஜயகாந்தையும் வைகோவையும் டார்கெட் செய்து நிறைய மீம்ஸ்கள் மற்றும் காமெடி வீடியோக்கள் பரப்பப்படுவதை எப்படிப் பார்க்கிறீர்கள். சோஷியல் மீடியாவின் தாக்கம் உங்கள் கூட்டணியை அதிகம் பாதிப்பதாகக் கருதுகிறீர்களா?''

``விமர்சகர்களுக்கு எப்போதும் மல்ட்டி டைமன்ஷன் பார்வை இருக்க வேண்டும். ஆனால், சமூக வலைத்தளங்களில் சிங்கிள் டைமன்ஷன் பார்வை உள்ளவர்களே அதிகம் இருக்கிறார்கள். அவர்கள் நினைப்பதை அந்தத் தலைவர் செய்ய வேண்டும் என நினைக்கிறார்கள். அவரவர் மனதில் தோன்றுவதை எழுதுகிறார்கள். அது ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. விஜயகாந்தால் சரியாகப் பேச முடியவில்லை. வார்த்தைகள் சரியாக வரவில்லை, கமாண்டிங்காகப் பேச முடியவில்லை என்பது எல்லாம் உடல்நலத்தோடு தொடர்புடையது. அதைக் குறை சொல்லவும் முடியாது. இதை எல்லாம் சமூக ஊடகங்களில் கிண்டல் அடித்ததை நினைத்து, அதைப் பரப்பியவர்கள் பிற்காலத்தில் வருத்தப்படுவார்கள்.''

``நீங்கள் எல்லா பிரச்னைகளையும் சாதிரீதியாக அணுகுகிறீர்கள் என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. சுவாதி கொலையைக்கூட அப்படித்தான் பார்க்கிறீர்கள் எனச் சொல்கிறார்களே?''

``இது அப்பட்டமான அறியாமை; காழ்ப்புஉணர்வு. சுவாதி கொலை செய்யப்பட்டதும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினேன். சுவாதியின் பெற்றோரைச் சந்தித்துப் பேசி, அவர்கள் சார்பாக பல கோரிக்கைகளை அரசாங்கத்திடம் வைத்தேன். இதை சாதியப் பிரச்னையாக மாற்றியது சுவாதிக்கு நெருக்கமான நண்பர்கள்தான். ஒய்.ஜி.மகேந்திரன்தான் முதலில் சாதியைக் குறிப்பிட்டுப் பேசினார். அதுவரை நாங்கள் எங்குமே சாதியைப் பற்றி பேசவில்லை. அதன் பிறகு கிருஷ்ணமூர்த்தி என்கிற வழக்குரைஞர், `ராம்குமார் கொலையாளி இல்லை' எனச் சொன்னார். அடுத்து ஹெச்.ராஜா ஒரு தொலைக்காட்சியில் `இந்தக் கொலையை ராம்குமார் செய்ய வாய்ப்பு இல்லை; யாரோ ஒரு பயங்கரவாதிதான் செய்திருக்கணும்' எனச் சொன்னார். இப்படிப் பேசினது எல்லாமே அவர்கள்தான். நான் அதில் உள்ள முரண்பாடுகளைப் புறம்தள்ளக் கூடாது என்று சொன்னேன். `தமிழ்நாடு காவல் துறையின் மேல் எனக்குப் பல சந்தேகங்கள் இருக்கின்றன. இனி, சி.பி.ஐ விசாரிக்க வேண்டும்' எனச் சொன்னேன். சி.பி.ஐ என்ன பாகிஸ்தானில் இருக்கும் ஓர் உளவுத் துறையா? இல்லையே. அது மத்திய அரசாங்கத்திடம் இருக்கும் ஒரு துறைதானே! அப்படிப்பார்த்தால் ஹெச்.ராஜாவும் சுவாதிக்கு வேண்டியவர்களும் என்னை வரவேற்றுப் பாராட்டியிருக்க வேண்டும்தானே? இந்தக் கொலையில் இன்னமும் பல சந்தேகங்கள் இருக்கின்றன. அதற்குத்தான் சி.பி.ஐ விசாரணை வேண்டும் எனக் கோருகிறேன். எப்போதும் எல்லா பழிகளையும் சுமத்துவதுபோல, இப்போதும் எங்கள் மீது பழி சுமத்துகிறார்கள். அவ்வளவுதான்.''    vikatan.com  நா.சிபிச்சக்கரவர்த்தி, படம்: தி.குமரகுருபரன் ஓவியம்: கார்த்திகேயன் மேடி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக