புதன், 31 ஆகஸ்ட், 2016

ஞானதேசிகன், அதுல் ஆனந்த் உட்பட 8 அதிகாரிகள் ஒரேநாளில் சஸ்பெண்ட்! வைகுண்டராஜன்...?

Why Former Chief Secretary among 8 officials suspended?சென்னை: தொழிலதிபர் வைகுண்டராஜனின் தாது மணல் கொள்ளைக்கு உடந்தையாக இருந்த முன்னாள் தலைமைச் செயலர் ஞானதேசிகன் உட்பட 8 அதிகாரிகள் ஒரே நாளில் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தாது மணல் கடத்தல் வழக்கில் வைகுண்டராஜன் எந்த நேரத்திலும் கைது செய்யப்படக் கூடும் என கூறப்படுகிறது.
தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலர் ஞானதேசிகன், புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையர் அதுல் ஆனந்த் ஆகியோ கடந்த திங்கள்கிழமையன்று அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அதே நாளில் மேலும் 6 அதிகாரிகளும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.


இந்த 6 அதிகாரிகளில் 3 பேர் புவியியல் மற்றும் சுரங்கத்துறையை சேர்ந்தவர்கள்; மற்ற 3 பேரும் சுற்றுச் சூழல் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள். இவர்கள் அனைவருமே வைகுண்டராஜனின் தாது மணல் கொள்ளைக்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் தமிழக அரசு இதுவரை இந்த 8 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கான காரணத்தைத் தெரிவிக்கவில்லை. இருப்பினும் வைகுண்டராஜனின் தாது மணல் தொழிலுக்கு அனுமதி அளிக்கும் மத்திய அரசின் சுற்றுச் சூழல் அமைச்சக கோப்புக்கு இவர்கள் 8 பேரும் ஒப்புதல் அளித்ததாலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் 2013-ம் ஆண்டு முதல் தாது மணல் ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ககன்தீப்சிங் பேடி தலைமையில் தாது மணல் முறைகேடு குறித்து விசாரிக்க ஒரு குழுவும் அமைக்கப்பட்டிருந்தது. இக்குழுவும் தாது மணல் கொள்ளை தொடர்பாக ஆய்வு செய்து மாநில அரசிடம் அறிக்கை அளித்திருந்தது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு வைகுண்டராஜனின் தாது மணல் ஏற்றுமதிக்கு அனுமதி அளித்த மத்திய அரசின் கோப்பில் 8 அதிகாரிகளும் கையெழுத்திட்டதாலேயே தற்போது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் கூறுகின்றன. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா எம்.பி., முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்குவதன் பின்னணியில் வைகுண்டராஜன்தான் இருப்பதாக அவரது அண்ணன் குமரேசன் குற்றம்சாட்டியிருந்தார்.
ஆனால் தாம் சசிகலா புஷ்பாவை ஆதரிக்கவில்லை; முதல்வர் ஜெயலலிதாவின் கோபத்தைத் தூண்டி என் மீது நடவடிக்கை எடுக்க வைக்கவே இத்தகைய அவதூறுகள் பரப்பப்படுவதாக வைகுண்டராஜன் கூறியிருந்தார். இந்த நிலையில் திடீரென வைகுண்டராஜனுக்கு உடந்தையாக இருந்ததாக 8 அதிகாரிகள் ஒரே நாளில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதனால் வைகுண்டராஜன் எந்த நேரத்திலும் கைது செய்யப்படக் கூடும் என்றே கூறப்படுகிறது.   /tamil.oneindia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக