வெள்ளி, 12 ஆகஸ்ட், 2016

டாஸ்மாக்கை மூடு - ஒரு காந்தியவாதி 'தீவிரவாதி'யான கதை ! 74 வயது ஓய்வு பெற்ற பள்ளி முதல்வர். நல்லாசிரியர் விருது பெற்றவர்


சிறுதொண்ட நாயனாரின் குரலில் 74 வயதுக்குரிய முதுமை இல்லை. அவர் ஓய்வு பெற்ற பள்ளி முதல்வர். நல்லாசிரியர் விருது பெற்றவர். வரலாறு, தமிழ், பொருளாதாரம், சமூகவியல் மற்றும் காந்திய சிந்தனைகள் என்று மொத்தம் ஐந்து தனித்தனி துறைகளில் முதுகலைப் பட்டம் பெற்றவர். முனைவர் பட்டமும் பெற்றவர். ஆனால், ஜெயாவின் தமிழக அரசோ அவரைத் தீவிரவாதியாக இனங்காணுகிறது.
விருதாச்சலத்தை அடுத்துள்ள மேலப்பாளையூர் டாஸ்மாக் சாராயக் கடையை அகற்றக் கோரி நடந்த முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவர்களில் சிறுதொண்ட நாயனாரும் ஒருவர். சிறை சென்ற 13 பேரில் பதினோரு பேர் பிணையில் விடுவிக்கப்பட்டதற்கு மறுநாள் வினவு செய்தியாளர்கள் விருதாச்சலத்தில் இருந்தோம். கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலையத்தில் பிணை கையெழுத்திட்ட பதினோரு பேரையும் சந்தித்தோம்.

“அய்யா, நீங்க காந்திய சிந்தனைகளில் முதுகலைப் பட்டம் பெற்றவர். மக்கள் அதிகாரம் அமைப்போ டாஸ்மாக்கை மூடு அல்லது மக்களே உடைப்பார்கள் என்று அரசாங்கத்திற்கு சவால் விடுகிறது.. நீங்கள் இந்த அமைப்பில் இணைந்து போராடி சிறை சென்றுள்ளீர்கள். கேட்கவே கொஞ்சம் முரணாக இருக்கிறதே?”
”தம்பி, அரசாங்கம் என்பது என்ன? மக்கள் இல்லாமெ ஒரு அரசாங்கம் இருக்க முடியுமா? அதிகாரம் தான் இருக்க முடியுமா? இவங்க ஓட்டு வாங்க வந்த போது சாராயம் விற்பது எங்கள் லட்சியம் அப்படின்னு கேட்டா வந்தாங்க? மக்களாகிய நாங்கள் சொல்றோம்…. எனக்கு சாராயம் வேணாம்.. கடைய மூடு. நீ மூடாட்டி நாங்க மூடுவோம். அவ்வளவு தான்”
”சரிங்க.. உங்க கோரிக்கை நியாயமா இருக்கலாம். அதுக்காக முற்றுகை, உடைப்பு அப்படின்னு போகணுமா? அமைதியா ஒரு மனு எழுதிக் குடுக்கலாமே?”
“நீங்க இப்ப கேட்கறீங்க பார்த்தீங்களா? இதே கேள்விய அன்னிக்கு டி.எஸ்.பியும் கேட்டார். ஆனா… எத்தினி மனு எழுதறது, எத்தினி வருசமா குடுக்கறது? இத்தினி வருசம் நாங்க குடுத்த மனுவுக்கெல்லாம் என்னவாச்சி?…. எல்லா வகையிலும் கெஞ்சிப் பார்த்தும் வேலையாகலைன்னு தான் கடைசியா வேற வழியே இல்லாம நாங்களே இறங்கியிருக்கோம்”
”அதுக்காக அதிகாரத்தை நீங்களே கையில் எடுக்கலாமா?”
“ஏன் எடுக்கக் கூடாது? அவங்க கையில இருக்கிற அதிகாரத்த பயன்படுத்தி எடுத்து டாஸ்மாக்கை மூடியிருந்தா நாங்க ஏன் எடுக்கப் போறோம்?”
சிறுதொண்ட நாயனாரின் குரலில் தொனித்த ஆத்திரத்திற்கும் கோபத்திற்கும் பின்னே ஒரு நீண்ட கதை உள்ளது. அதைப் புரிந்து கொள்ள நாம் டாஸ்மாக்கின் விளைவுகளைப் புரிந்து கொள்ள வேண்டும் – அந்த விளைவுகளுக்கு ஒரு எடுப்பான வகைமாதிரியாக உள்ள மேலப்பாளையூரைப் புரிந்து கொள்ள வேண்டும்.
டாஸ்மாக்கை மூடு! ஊரை விட்டு ஓடு! – என்று 2015, ஆகஸ்டு  4-ம் தேதி விருத்தாசலம் அருகில் உள்ள மேலப்பாளையூர் கிராமத்தில் இயங்கி வந்த டாஸ்மாக் கடையை மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர், வழக்கறிஞர் சி.ராஜு மற்றும் பல வழக்கறிஞர்கள், கிராம நிர்வாகிகள் தலைமையில் மூட வைத்தனர் அந்த கிராம மக்கள். அதில் பெண்கள், வழக்கறிஞர்கள், பல்வேறு கிராம நிர்வாகிகள் என 25 பேர் கைதாகி கடலூர் மத்திய சிறையில் உள்ளனர். பெண்கள் மட்டும் சம்பவத்தன்று விடுவிக்கப்பட்டனர். அன்று முதல் இன்று வரை அந்த கிராமத்தில் டாஸ்மாக் கடையை அரசாங்கத்தால் திறக்க முடியவில்லை.
அதற்கு காரணம் கிராம மக்கள், மக்கள் அதிகாரம் அமைப்பின் மூலம் மிகப்பெரிய விழிப்புணர்வும், நம்பிக்கையும் பெற்றுள்ளனர் என்பதை காட்டுகிறது இந்த போராட்டம். காவல்துறை அதிகாரிகள், தாசில்தார் என யார் வந்தாலும் இந்த கடையை திறக்க விட மாட்டோம் என கிராம மக்கள் மிக உறுதியாக இருக்கிறார்கள். மற்ற இடங்களில் போலீஸ் பாதுகாப்போடு கடை இயங்கி வந்தாலும், இந்தப் பகுதியில் மக்களின் உறுதியான போராட்டத்தால் இன்று வரை அந்தக் கடை மூடப்பட்டுள்ளது. இது நம்முடைய 3 மாத கால பிரச்சாரத்தின் மூலம் மக்கள், இந்த அரசை நம்பி பலனில்லை, நம்முடைய அதிகாரத்தை கையில் எடுத்ததன் வெற்றியாகத்தான் பார்க்க முடியும். இங்கே காந்தியவாதியான அய்யா சிறுத்தொண்ட நாயனாரின் நேர்காணல் இடம்பெறுகிறது.  வினவு.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக