செவ்வாய், 30 ஆகஸ்ட், 2016

ரூ.69 கோடி- திருப்பி தருகிறார் பச்சமுத்து! Too late Too little ?

மின்னம்பலம்.காம்: பச்சமுத்துவின் ஜாமீன் மனு மீது சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. எப்படியாவது ஜாமீன் பெற்றுவிட வேண்டும் என்று பச்சமுத்து தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில் மோசடி பணம் மற்றும் மாயமான மதன் குறித்தும் பச்சமுத்துவை ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, போலீஸ் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்மனுக்கள் மீது இன்று விசாரணை நடைபெற உள்ளது. இந்நிலையில் திடீர் திருப்பமாக மாணவர்களிடம் வசூலித்த ரூ.69 கோடியைத் திருப்பித் தர பச்சமுத்து ஒப்புதல் தெரிவித்துள்ளதாகவும் பணத்தை திருப்பித் தருவதால் அவரை விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவர் சார்பில் மகன் ரவி பச்சமுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. விசாரணையின் முடிவில் பச்சமுத்துவின் மனு மீது பதிலளிக்குமாறு போலீஸார், மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
இதுகுறித்து மாணவர்கள் தரப்பில் பேசிய வழக்கறிஞர் பால் கனகராஜ், ‘மதனை பிப்ரவரி மாதமே பணியில் இருந்து நீக்கிவிட்டோம் என்கிறார் பச்சமுத்து. ஆனால், மாணவர்களிடம் பணம் வாங்கப்பட்டது ஜனவரியிலேயே ஆகும். ஆக, அவர் கூறிய அடிப்படையிலேயே முன்கூட்டியே பணம் வாங்கியது தெரியவருகிறது. நீதிமன்றத்தில் மனு போட்டு பணம் கட்டட்டும். ரூ.69 கோடியை நேரடியாக மாணவர்கள் கையிலேயே கொடுக்கட்டும். மேலும் பச்சமுத்து ஜாமீனில் வெளிவந்தால் மாணவர்கள் தரப்புக்குப் பணம் கிடைக்குமா என்று தெரியவில்லை. எனவே, நாங்கள் ஜாமீனுக்கு எதிர்ப்பு தெரிவிப்போம். முழுமையாக பச்சமுத்து மாணவர்களுக்குப் பணத்தை செட்டில் செய்தால் நாங்கள் ஜாமீனை எதிர்க்க மாட்டோம்’ என்றார்.
மதனின் தாயார் தரப்பு வழக்கறிஞர் தினேஷ், ‘மதனை பச்சமுத்து தரப்பு தான் சட்டவிரோத காவலில் அடைத்து வைத்திருப்பதாக சந்தேகிக்கிறோம். மாணவர்கள் பணம் கொடுக்கப்பட்டாலும் மதன் கிடைக்க வேண்டும். எனவே, நாங்கள் ஜாமீன் மீது எதிர்ப்பு தெரிவிப்போம்’ என்றார். இன்று மதியம் பச்சமுத்து ஜாமீன் மனு விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
‘முன்னதாக பச்சமுத்துவை கைது செய்வதற்கு சென்றபோது கிட்டத்தட்ட ஒன்பது மணிநேரம் போலீஸார் விசாரணை செய்தனர். அப்போதே பணத்தைத் திருப்பி கொடுத்து விடுங்கள். பிரச்சனை முடிந்துவிடும் என்று பேசினர். ஆனால், அப்போது பச்சமுத்து ஒப்புக்கொள்ளவில்லை. அதன்பின் கைது, சிறை என பயணித்தார். இப்போது அவர் மகன் பணத்தைத் திருப்பி கொடுப்பதாக ஒப்புக்கொண்டுள்ளார்’ என்கின்றனர் இவ்வழக்கை ஒட்டி விசாரணையில் ஈடுபட்டு வரும் போலீஸார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக