வெள்ளி, 22 ஜூலை, 2016

தமிழக முதல்வரின் உடல்நிலை ரிவேஸ் கியரில்.. பட்ஜெட் கூட்டத்தொடரில் சோர்வு?

ஜெயலலிதாவுக்கு என்ன ஆச்சு?
வாட்ஸ் அப், கோட்டையில் இருந்தபடி பட்ஜெட் கூட்ட செய்திகளை அப்டேட் செய்தபடியே இருந்தது.
”பட்ஜெட் பற்றிய செய்திகளை எல்லாம் டி.வி.யில் பார்த்தபடிதான் இருப்பீர்கள்… உள்ளே நடந்த சுவாரஸ்யமான தகவல்களை மட்டும் சொல்றேன்!’’ என்று வந்து விழுந்தது முதல் மெசேஜ்.
ஃபேஸ்புக், ஓ.கே. சொல்ல… அடுத்த அப்டேட் ஆரம்பமானது. “காலையில் சரியாக 11 மணிக்கு பேரவை கூடியது. 10.55 மணிக்கு முதல்வர் ஜெயலலிதா வந்துவிட்டார். ஆனால், பேரவைக்குள் நுழைந்தபோதே அவரது முகத்தில் உற்சாகம் இல்லை. ரொம்பவும் சோர்ந்துபோய்தான் வந்தார். பேரவைத் தலைவர் நிகழ்வுகளை தொடங்கிவைத்ததும், நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசுவதற்கு எழுந்தார். முதல் ஐந்து நிமிடங்கள் ஜெயலலிதா புகழ் பாடினார். அப்போது மட்டும் பன்னீரை பார்த்தபடி அமர்ந்திருந்தார் ஜெயலலிதா. அவர் புகழ்பாடி முடிக்கும்போது முதல்வரைப் பார்த்து வணக்கம் சொல்ல… ஜெயலலிதாவும் பதில் வணக்கம் சொன்னார். அதன்பிறகு, பன்னீர் படிக்க…படிக்க… ஜெயலலிதா எந்த ரியாக்‌ஷனும் காட்டாமல் குனிந்தபடியே இந்தார்.

ஒருகட்டத்தில், ஜெயலலிதாவுக்கு தூக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. சிறிதுநேரம் கண்களை மூடுவதும், எம்.எல்.ஏ.க்கள் மேஜையைத் தட்டும்போது விழித்துப் பார்ப்பதுமாக இருந்தார். அவ்வளவு சோர்வு அவரது முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது. அதுமட்டுமல்ல… ஜெயலலிதா பெரும்பாலும் பொது மேடைகளில் கொட்டாவி விட மாட்டார். அதில், ரொம்பவே கவனமாக இருப்பார். ஆனால், இன்று பேரவையில் அவரையும்மீறி கொட்டாவி வந்தது. எல்லாவற்றையும் சமாளித்தபடிதான் அமர்ந்திருந்தார். அண்மைக்காலத்தில் ஜெயலலிதா ஒரே இடத்தில் இரண்டரை மணி நேரம் உட்கார்ந்திருப்பது இதுவே முதன்முறை. பாதியில் எழுந்து போகமுடியாது. போனால், தேவையில்லாத சர்ச்சைகள் வரும் என்பதால், சமாளித்தபடி இரண்டரை மணி நேரத்தைக் கழித்தார். அந்த இரண்டரை மணி நேரத்தில் பெரும்பான்மையான நேரம் கண்களை மூடியபடியேதான் இருந்தார்.
இதில், இன்னொரு ஆச்சரியம் என்ன தெரியுமா? வழக்கமாக, சட்டமன்றத்தில் கண்களை மூடியும், கழுத்தை பின்னால் சாத்தியும் அமர்ந்திருப்பவர் துரைமுருகன். ஆனால், அவரோ இன்று கொஞ்சமும் அசராமல் நிமிர்ந்து உட்கார்ந்து, பன்னீர் பேசுவதையே உற்று கவனித்துக் கொண்டிருந்தார்.” என்று முடிந்தது அடுத்த மெசேஜ்.
“என்னாச்சு முதல்வருக்கு?” என்று அடுத்த கேள்வி கேட்டது ஃபேஸ்புக்.
வாட்ஸ் அப் டைப்பிங் செய்ய ஆரம்பித்தது. “கடந்த நான்கு நாட்களாகவே ஜெயலலிதாவுக்கு உடல்நிலை சரியில்லை. சுகரும் அதிகமாகியிருக்கிறது. லேசான காய்ச்சலும் இருந்ததாகச் சொல்கிறார்கள். இதற்காக, ராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்து டாக்டர்கள் டீம் கார்டனுக்கு வந்துபோயிருக்கிறது. அவர்கள் அட்வைஸ்படி சில மருந்துகளை அவர் சாப்பிட்டு வருகிறார். அந்த மருந்துகளை சாப்பிட்டால், தூக்கம் வரும் என்றும் டாக்டர்கள் சொன்னார்களாம். பட்ஜெட் கூட்டத்தொடருக்கு தேதி அறிவித்துவிட்டு மாற்றினால், சரியாக இருக்காது என்பதால்தான், குறித்த தேதியில் நடக்கட்டும்… என்று ஜெயலலிதா சொல்லியிருக்கிறார். உடல்நிலை பூரணமாக சரியாகாத நிலையில்தான் அவர் இன்று சட்டமன்றத்துக்கு வந்தார். அதனால்தான் அவர் சோர்வாக இருந்தார் என்று சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.” என்பதுதான் அந்த பதில் மெசேஜ்.
”எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் எல்லாம் என்ன செய்தார்கள்” என்ற அடுத்த கேள்வியையும் தயாராக வைத்திருந்தது ஃபேஸ்புக். அதற்கும் பதில் சொன்னது வாட்ஸ் அப். “ஜெயலலிதா வருவதற்குமுன்பே அதாவது, 10.20க்கே சபைக்கு வந்துவிட்டார் எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின். அதேநேரம், துரைமுருகனும் வந்து சேர… இருவரும் ஏதோ பேசியபடியே இருந்தார்கள்.
ஜெயலலிதாவைப் பற்றி முதல் ஐந்து நிமிடங்கள் பன்னீர் புகழ்ந்து தள்ளியபோது, ஸ்டாலினும், துரைமுருகனும் ஒருவரையொருவர் பார்த்து நக்கலாக சிரித்துக் கொண்டனர். பன்னீர் பேச ஆரம்பித்ததும், பேரவை உறுப்பினர்களுக்கு நிதிநிலை அறிக்கை புத்தகத்தை விநியோகித்தார்கள். ஸ்டாலினும், துரைமுருகனும் அந்தப் புத்தகத்தில் முழ்கிப் போனார்கள். ஸ்டாலின், அந்தப் புத்தகத்திலிருந்து படித்துப் பார்த்து ஏதோ குறிப்பெடுத்தபடியே இருந்தார். எதிர்க்கட்சியினரும் பாதிக்குப்பாதி இருந்த காரணத்தினால், பன்னீர் வாசிக்கும்போது மேஜையைத் தட்டும் சத்தம் பெரிதாகக் கேட்கவில்லை. திமுக எம்.எல்.ஏ-க்கள் பலர் நிதிநிலை அறிக்கை புத்தகத்தை மூடி வைத்துவிட்டு, பன்னீர் பேசுவதையும் மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதையுமே கவனித்தபடி இருந்தனர்.” என்ற மெசேஜைப் படித்த ஃபேஸ்புக், அதை காப்பி செய்து ஷேர் செய்தது.
”வேறு என்ன நடந்தது?” என்றும் கேட்டது ஃபேஸ்புக்.
“தற்போது சட்டமன்றத்தில் இருக்கும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் பலரும் அவைக்குப் புதியவர்கள். அதனால், அவர்கள் அந்த மிரட்சியிலிருந்தே இன்னும் வெளியே வரவில்லை. கூட்டம் நடக்கும்போது அங்கே திரும்புவதும், இங்கே பார்ப்பதும், மேலே பார்ப்பதுமாகவே இருந்தனர். ஜெயலலிதாவுக்கு பக்கத்தில் ஒரு ஃபிளாஸ்க் இருந்தது. ஆனால், அவர் கிளம்பும் வரை அதிலிருந்து எதுவும் குடிக்கவே இல்லை. பேரவை மீண்டும் வரும் 25ஆம் தேதி கூடவிருக்கிறது. நாளை பேரவை நடத்தி இருக்கலாம். முதல்வரின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டுதான் 25ஆம் தேதிக்கு பேரவையை ஒத்திவைத்ததாகச் சொல்கிறார்கள்.” என்ற தகவலைச் சொன்னது வாட்ஸ் அப்.

(இளவரசி மகன் விவேக்)
சைன் அவுட் ஆவதற்கு முன்பு ஃபேஸ்புக் அப்டேட் செய்த போஸ்ட் இது. “இளவரசியின் மகன் விவேக்கிற்கு சம்பந்தம் பேசியிருக்கும் பெண்ணின் அப்பா பெயர் பாஸ்கர் என்றும், அவர் செம்மரக் கடத்தல் விவகாரத்தில் தொடர்புடையவர் என்றும் ஒரு தகவல், சில நாட்களாக உலா வருகிறது. ஆனால், விவேக்கிற்கு சம்பந்தம் பேசியிருக்கும் பெண்ணின் அப்பா பெயர் சிட்டிபாபு. அவருக்கும் இந்த விவகாரத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. தேவையில்லாமல் சிலர் கிளப்பிவிடும் வதந்தி இது என்று சொல்கிறார்கள் மன்னார்குடி வட்டாரத்தில். என்ன உண்மையோ?"  மின்னம்பலம்.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக