சனி, 23 ஜூலை, 2016

கபாலி: கோட் – காந்தி – டாக்டர் அம்பேத்கர் – பெரியார்... மதிமாறன்

கபாலி: காந்தி சட்டைய கழட்டுனதுக்கும் அம்பேத்கர் கோட் போட்டதுக்கும் உள்ளாற இருக்கிற அரசியல் உங்களுக்கு புரியாது. (பெரியார் உடை?)
*
அண்ணல் அம்பேத்ரின் உடை ஆதிக்கத்திற்கு எதிரான குறியீடு, காந்தியின் உடை அடிமைத்தனத்தை நிலை நிறுத்துவதற்கான குறியீடு.-2011 அக்டோபர்.
*
டாக்டர் அம்பேத்கருடைய உடல் மொழியும் எப்போதும் எதிர்ப்புணர்வை வெளிப்படுத்துவதாக இருக்கும். காந்தி, நேரு போன்ற தலைவர்களை சந்திக்கும் படங்களில் கம்பீரமும், அலட்சியமும் வெளிப்படும்.
எல்லோரையும் குற்றவாளிகளாக பார்க்கிற தொனியும், என்னை விட பெரிய அறிவாளி எவன் இருக்கான் இங்கே, என்கிற ஆயிரம் ஆண்டு கோபம் அவருடைய ஒவ்வொரு அசைவுகளிலும் வெளிப்படும்.
கோட் சூட் அணிந்து, கால்மேல் கால் போட்டு உட்கார்ந்து இருக்கிற அந்த கம்பீரம் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் இருக்கும்.
‘காந்தி, நேரு, பட்டேல் இன்னும் அனைத்து ஆதிக்க ஜாதிக்காரர்கள் நீங்க எல்லோரும் ஒரு அணி. நான் தனி. மோதிப் பாக்கலாமா? தில்லு இருக்கா?’ என்று சவால் விட்டு கூப்பிடுவதுபோலவே இருக்கும் அவர் கம்பீரம்.
அந்த எதிர்ப்பு குறியீட்டின் வடிவமாகத்தான் அவருடைய உடையும் இருக்கும். அவருடைய உடல் மொழியும், அவரின் எழுத்துக்களைப்போல் கூர்மையானது.
காந்தி உடை அவருடைய சிந்தனைகளைப்போலவே செயற்கையாக இருக்கும். அது அவருக்கு தேவையான உடை என்பதை விடவும், அவர் போட்டுக் கொண்ட வேடத்திற்கு பொருத்தமான உடை என்கிற பாணியில்தான் இருக்கும்.

அதனால்தான், கடும் குளிர் கொண்ட டெல்லி போன்ற ஊர்களில் இருக்கும்போது கூட அந்தக் குளிருக்கு ஏற்ற உடை உடுத்தாமல், தன் வேடத்திற்கு ஏற்ற அரை ஆடை உடுத்தினார். காரணம் ‘கன்டினியுட்டி காஸ்ட்யூம்’ என்பதினால்தான்.
‘ஏழைகள் உடுத்துகிற உடை’ என்று காரணம் சொன்னார் காந்தி. ஆனால், ஏழைகளை தன் வசப்படுத்துகிற பாணியில்தான் அதை உடுத்தினார். அதனால்தான் பிர்லா மாளிகையில் இளைப்பாறினார்.
அண்ணல் அம்பேத்ரின் உடை ஆதிக்கத்திற்கு எதிரான குறியீடு என்றால், காந்தியின் உடை அடிமைத்தனத்தை நிலை நிறுத்துவதற்கான குறியீடு.
காந்தி எளிமையாக வாழ்வதற்கு நிறைய செலவு செய்தார். உண்மையில் எளிமை என்பது, ஒரு இடத்தில் எது எளிதில் கிடைக்கிறதோ அதைப் பயன்படுத்திக் கொள்வதுதான்.
இஸ்லாமியர் வீட்டு திருமணத்தில், பிரியாணி மட்டும்தான் கிடைக்கிறது என்றால் அங்கு அதை உண்பதுதான் எளிமை. மாறாக, அங்கு இல்லாத தயிர்சாதம் தான் நான் சாப்பிடுவேன் என்றால், அந்த நேரம் அதை வாங்குவதற்கு நிறைய செலவு செய்யவேண்டும். அதுபோல் எளிமைக்காக நிறையச் செலவு செய்தவர் காந்தி.
பெரியார்தான் தனக்கென்று எந்த சுயமதிப்பும் கொள்ளாதவர். பெரியார் தன்னை ஒரு தமிழனாகவோ, இந்தியனாகவோ, தமிழ்த் தேசியவாதிகள் சொல்வதுபோல் கன்னடனாகவோ, தன்னை ஒரு பார்ப்பனரல்லாதவனாகவோ, தன்னை ஒரு ஆணாகவோ கூட அவர் மதிப்பிட்டது கிடையாது. அது அவர் உடுத்தும் உடையில் எப்போதும் பிரதிபலிக்கும்.
எது சவுகரியமாக இருக்கிறதோ அதுதான் அவருக்குரியது. வீட்டில் இருக்கும்போது ஒரு உடை. வெளியில் இருக்கும்போது வெறு ஒரு உடை என்கிற பாணி ஒருபோதும் அவரிடம் இல்லை.
வீட்டிலும் லுங்கிதான். டெல்லியில் ஜின்னா வீட்டு விருந்தில் கலந்து கொண்டபோதும் லுங்கிதான்.
நல்ல உடை, கெட்ட உடை என்றெல்லாம் அவர் யோசித்ததாகவே தெரியவில்லை.மக்களின் சுயமரியாதைக்கு பாடுபட்ட அவர் ஒருபோதும் தன் சுயமரியாதை குறித்து அக்கறை எடுத்துக் கொண்டதே இல்லை.
தன் மீது வீசப்பட்ட செருப்பையும், அணிவிக்கப்பட்ட மாலையையும் ஒரே மாதிரியாக பார்த்தவர்.
துறவிகள் பற்றற்ற நிலை என்கிறார்களே அது பெரியாரிடம் மட்டும்தான் இருந்திருக்கிறது. தன்மதிப்பு அற்ற தலைவர் பெரியார்.
அண்ணல் அம்பேத்கரின் உடை ஆதிக்க எதிர்ப்பு குறியீடு. காந்தியின் உடை ஏழ்மையை தன் செல்வாக்கிற்கு பயன்படுத்திய பாணி, (கிழிந்த உடையில் இருக்கும் கிழவியை கட்டிப்பிடித்து போட்டோவுக்கு போஸ் கொடுத்த எம்.ஜி.ஆர். பாணி) பெரியாரின் உடை இயல்பானது, எளிமையானது.
**
2011 அக்டோபர் மாதம் தங்கம் இதழில் எழுதியது.
**
2 ஆண்டுகளில் 4 பதிப்புகள் வந்த என்னுடைய ‘காந்தி நண்பரா? துரோகியா?’ என்ற நூலிலிருந்து..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக