புதன், 13 ஜூலை, 2016

எம்.ஜி.ஆர்' விஜயன் கொலை வழக்கு..ஏழு பேருக்கும் ஆயுள் தண்டனை..!

;எம்ஜிஆர் உறவினர் விஜயன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள் சுதா. இவரது கணவர் விஜயன் என்ற எம்.ஜி.ஆர். விஜயன். இவர், கடந்த 2008ம் ஆண்டு ஜூன் மாதம் 4ம் தேதி இரவு காரில் கோட்டூர்புரம் அருகே சென்று கொண்டிருந்தபோது, ஒரு மர்ம கும்பல் காரை வழிமறித்து விஜயனை இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்தது. இதுகுறித்து கோட்டூர்புரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து முதலில் விசாரணை நடத்தினர். பின்னர், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. காவல்துறையினர் நடத்திய விசாரணையின்போது, விஜயன் மனைவி சுதாவின் தங்கை பானு, கூலிப்படை மூலம் விஜயனை கொலை செய்திருப்பது தெரியவந்தது. கருணா என்ற போலீஸ்காரர் இந்த கூலிப்படையை அமர்த்தி கொலைக்கு உதவி செய்திருப்பதும் தெரியவந்தது.


இதையடுத்து பானு, காவலர் கருணா, கூலிப்படையை சேர்ந்த சுரேஷ், ஆர்.கார்த்தி, தினேஷ்குமார், சாலமன், வெங்கடேசன் உள்பட 7 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயசந்திரன், தீர்ப்பை 13ம் தேதி (இன்று) பிறப்பிப்பதாக கடந்த 6ம் தேதி உத்தரவிட்டார்.

அதன்படி, இந்த வழக்கின் இன்று தீர்ப்பளித்த நீதிபதி ஜெயசந்திரன், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேரும் குற்றவாளிகள் என்று அறிவித்தார்.  தண்டனை விவரத்தை பின்னர் அறிவிப்பதாக தெரிவித்தார்.
இதையடுத்து, 7 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்த நீதிபதி, தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததோடு, அபராதத்தை கட்டத் தவறினால் மேலும் 6 மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கில் தீர்ப்பை தெரிந்து கொள்ள விஜயன் மனைவி சுதா நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். கணவர் கொலை வழக்கில் 7 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதை வரவேற்ற சுதா, நீதிமன்றத்தின் தீர்ப்பு ஆறுதல் அளிக்கிறது என்றார்  விகடன்.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக