சனி, 30 ஜூலை, 2016

மலேசியத் தமிழ்த் தொழிலாளர்களை நேசித்த பெரியார்! - மறக்கக்கூடாத வரலாறு

மலே(சி)யா தமிழ்த் தொழிலாளர்களின் நலனில் அக்கறை கொண்ட தமிழகத் தலைவர்களில் தந்தை பெரியாரின் இடத்தை எவராலும் இட்டு நிரப்ப முடியாது.>1929-30ம் ஆண்டில் முதல் முறையும்; 1954 ஆம் ஆண்டில் இரண்டாவது முறையும் அவர் நேரில் சென்று அங்கு வாழும் தமிழர்களை சந்தித்தார். பெரியாருக்கு எதிராக அங்கும் இந்து சனாதனிகள் வரிந்து கட்டினார். சுயமரியாதை இயக்கத்திற்கு எதிராக மகம்மதிய அமைப்பினர் சிலரும் கண்டனம் தெரிவித்தனர். எதிர்ப்புகளை, மயிரைப் பொசுக்கும் நெருப்பாக எதிர்கொண்டு, தன் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தார் பெரியார்.அந்நாட்டில் வாழும் பல தரப்பு தமிழ் மக்களிடமும் அவருக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்தபோதும், அவர் அதிக மகிழ்ச்சி அடைந்தது தோட்டத் தொழிலாளர்களுடனான சந்திப்பில்தான்.>இதுகுறித்து 1955ல் வெளியான பதிவு…புக்கிட்  ராசா லெட்சுமித் தோட்டத்தின்  வாயிலெல்லாம் தோரணங்கள் அலங்கரிக்க, வழியெல்லாம்  தொண்டர்கள் அணிவகுத்து  நிற்க, தொழிலாளர்களும் அவர்களுடைய  குடும்பத்தினரும்  வாழ்த்தொலி  எழுப்பி மகிழ்வு  முகம் காட்டி  சமூக  சீர்திருத்தச் செம்மலை வரவேற்றனர்.
தொழிலாளர்கள்  ஆண்களும்  பெண்களும்  சிறுவர்களுமாய்  இரண்டாயிரம்  பேர் குழுமியிருந்தனர். பெரியாரை  வரவேற்று   திரு.வே.காளிமுத்து பேசினார்.  பெரியாருக்கு திரு.சி.திருவேங்கடம் கங்காணி  மாலை  அணிவித்தார்.  பெரியாரின் பெரும்பணியைப் பாராட்டி  திரு.கி.நடேசன்  வரபேற்பிதழ்  வாசித்தளித்தார்.  கூட்டத்திற்கு,  திரு.ஆ.சுப்பையா  தலைமை  வகித்தார்.
<>1947ல் -இல்  பெரியாரை  அழைப்பதற்காக  காப்பார்  தமிழ்  மக்கள்  வசூலித்த  214 வெள்ளி (மலேசிய கரன்சி) 15 காசையும்  திரு.முனியாண்டி,  பெரியாரிடம் ஒப்படைத்தார்.   புக்கிட் ராசா லெட்சுமித் தோட்டத் தொழிலாளர்கள்  60 வெள்ளி பண முடிப்பை  கொடுத்தனர்.   6 வயது  சிறுவன்  ஒருவனும்  3 வயதி சிறுமி ஒருத்தியும் தாங்கள்  சேர்த்து  வைத்த  காசை  பண  முடிச்சாக்கி  பெரியார் தாத்தாவிடம்  கொண்டு  வந்து  கொடுத்தனர்.  சிறுவர்கள்  இருவரிடமும் கொஞ்சிப் பேசி தம் அன்பைத் தெரிவித்தார்  பெரியார். >பாடுபடுகிற  தோட்டத்  தொழிலாளியைக்  கண்டு  பரவசமுற்ற  பெரியார் தொடர்ந்து  பேசுகையில் சொன்னார்:  நான் மலாயாவில்  இதுவரை  சுற்றியதில் அதிகாரிகளையும் , மந்திரிகளையும்  செல்வர்களையும்  பார்த்தேன்! அவர்களிடையே  பேசினேன்.  ஆனால், என்  சொல்லினால்  ஏதாவது  பயன் ஏற்படுமானால் அது  உங்களிடம்தான்  ஏற்படும் .   உங்களிடம் தான்  ஏற்பட வேண்டும். ஏனெனில்  சமுதாயத்தின்  கீழ்நிலையில்  உள்ளவர்கள்  உயர வேண்டும்.  படியாதவர்களாக-  பாமரர்களாக இருக்கிறவர்கள்  நிலை  திருந்த வேண்டும் என்பதுதானே  என்னுடைய  லட்சியம். >சமுதாயத்தில்  மாறுதல்  வேண்டுபவர்கள்  நீங்கள்தான்.  பணக்காரனுக்கு மாறுதல் என்றால் அது அவனுடைய  பணம்  பெருகுவதாக  இருக்கும்.  ஆனால்  8 மணி நேரமும் 10  மணி  நேரமும்  பாடுபட்டு  வயிற்றுச் சோற்றுக்கே இழுபறியாக   இருக்கும்  உங்கள்  நிலையில் தான்  பெருத்த  மாறுதல்  ஏற்பட வேண்டும்.  நாளெல்லாம்  பாடுபட்டு  கிடைக்கிற  வரும்படி  சோற்றுக்குத்தான் ஆகும்.  மீதியிருந்தால்  கள்ளுகடை,  மிச்சமிருந்தால்  நாசமாய்ப்போன சாமிகளுக்கு  அழுவது  என்ற  போக்கில்  மாறுதல்  காண  வேண்டும். ">நான்  சாமி  வேண்டாம் என்று சொல்லவில்லை.  ஆனால் கற்பனைக்  கடவுள்கள் நம்மைப்  பாப்பராக்கிவிடுகின்றனவே  என்றுதான்  நொந்து  கொள்கிறேன்.">கடவுளிடம் பக்தி  செலுத்துங்கள், அன்பு செலுத்துங்கள், கடவுளுக்கு பயப்படுங்கள்.  வேண்டாம் என்று நான் சொல்லவில்லை.  கடவுள்  மனிதர்களாக இருக்கிறார்; நடமாடும் ஜீவன்களாக இருக்கிறார்; நீங்கள் மனிதர்களிடம் , உங்களிடம் காட்டுகின்ற   அன்பை  கடவுள் இருந்தால்  கட்டாயம்  ஏற்றுக் கொள்வார்.">தொழிலாளி  மகன்  தொழிலாளியாக,  தொழிலாளி  பேரன்  தொழிலாளியாக இருக்கலாகாது.  இருக்க கூடாது  என்று  இடித்துரைத்தார்.  பண்டிகைகள்  என்று நீங்கள்  பாழாக்குகிற  பணத்தை  மகனின்  படிப்புக்குச் செலவிடுங்கள், உருப்படலாம்.

>ஒவ்வொரு  மனிதனும்  தன்  பங்குக்குக்  கொஞ்சம்  பாடுபடத்தானே  வேண்டும் என்ற  நிலை நம் சமுதாயத்தில்  இருக்குமானால்  பேச்சில்லை.   பரம்பரை பரம்பரையாக  ஒரு  பிரிவினர்  உழைப்பது,  மற்றவன்  கொழிப்பது  என்ற  நிலை ஏன்  இருக்க  வேண்டுமென்று  கேட்டார்  பெரியார்.  என் தலைமுறையோடு இந்தப் பிழைப்பு  ஒழியட்டும்.  என்  பிள்ளை  என்னைப் போல் இந்த வேலை செய்யவேண்டாம் என்று நீங்கள்  கங்கணம்  கட்ட  வேண்டும்.    உங்கள் பிள்ளைகளையெல்லாம்  தவறாமல்  பள்ளிக்கூடத்துக்கு  அனுப்பி  படிக்க வைப்பதுதான்  உங்கள் நிலையை  மாற்றிக் கொள்ளூம் ஒரே  வழி.>கல்வியறிவும்  சுயமரியாதை  எண்ணமும்  பகுத்தறியும்  தன்மையுமே  தாழ்ந்து கிடக்கும்  உங்களை  உயர்த்துமென்பதை  மறந்து விடாதீர்கள். ஒற்றுமையாக இருங்கள் நன்றாக பாடுபடுங்கள். மிச்சப்படுத்துங்கள். யாருக்கும் மோசம்  செய்யாதீர்கள்;  கள் குடிக்காதீர்கள்;  கல்  சாமியை  கும்பிடாதீர்கள்; பிள்ளைகளுக்கு  கல்வி தாருங்கள்.(சிங்கப்பூர் கவி தொகுத்த, ’மலாயா தமிழ் முன்னோடிகளும் பெரியார் வருகையும்’ புத்தகதிலிருந்து)  nakkeeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக