வியாழன், 7 ஜூலை, 2016

கோபாலசாமி நாயுடு பச்சை தலைப்பாகையை கைவிட்டார்...காரணம் கூற மறுப்பு .. சபாஷ் நாயுடு!

கோவை: தமிழக சட்டமன்ற தேர்தலின்போது, தான் அணிந்த பச்சை தலைப்பாகையை சொன்னபடி  தேர்தலுக்குப்பின் அணியாதது ஏன் என்ற கேள்விக்கு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பதிலளிக்க மறுத்துவிட்டார். அண்மையில் நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது, தூத்துக்குடி மாவட்டம்,  விளாத்திக்குளம் புதூரில் நடந்த கூட்டம் ஒன்றில், பச்சைத் தலைப்பாகை அணிந்து தோன்றினார் வைகோ. அப்போது பேசிய வைகோ, "நான் இந்த பச்சை தலைப்பாகையை தேர்தலுக்காக அணியவில்லை. விவசாயிகளின் மேம்பாட்டுக்காக, அவர்களோடு எப்போதும் இருக்க வேண்டும் என்பதன் அடையாளமாக அணிந்துள்ளேன். இனிமேல் இதனை கழற்றப் போவதில்லை" என்று உருக்கமாக பேசினார். தொடர்ந்து எல்லா பிரசாரக் கூட்டங்களிலும் இதைப் பேசி கைதட்டல் பெற்றார்.


ஆனால் தேர்தலுக்குப் பின் அவர் அணிந்திருந்த பச்சைத் தலைப்பாகை மாயமானது. அதை அணிவதை வைகோ தவிர்த்துவிட்டார். தற்போது தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வரும் வைகோ, பச்சைத் துண்டு அணிவதில்லை.
இந்நிலையில், இன்று கோவை வந்த வைகோவிடம்,  'பச்சை தலைப்பாகை ஏன் அணிவதில்லை' என பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளிக்க மறுத்த வைகோ, 'அதெல்லாம் வேணாமே' என அந்த கேள்வியை தவிர்த்தார்.

"மக்கள் நலக்கூட்டணியில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியில் உள்ள 4 கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திப்போம். உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக, திமுக பணத்தை வாரி இறைக்கும் பணியை இப்போதே துவங்கி விட்டன. அதையும் மீறி வெல்வோம்," என அப்போது வைகோ தெரிவித்தார்.

- ச.ஜெ.ரவி  vikatan.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக