சனி, 16 ஜூலை, 2016

ராகிங் கொடுமையால் கல்லூரி மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற....

சேலம், சேலத்தில் உள்ளாடையுடன் நடனம் ஆட சொல்லி ‘ராக்கிங்’ செய்த விவகாரத்தில் தனியார் கல்லூரி மாடியில் இருந்து குதித்து மாணவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கல்லூரி வார்டன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
கல்லூரி மாணவர் சேலம் உடையாப்பட்டி பகுதியில் ஒரு தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் சேலம் மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு மாணவ–மாணவிகள் தங்கி படிப்பதற்காக தனித்தனியே விடுதி வசதி உள்ளது. தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தை சேர்ந்த கோகுல்ராஜ் (வயது 18) என்ற மாணவர், கல்லூரி விடுதியில் தங்கியிருந்து பி.காம்., முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

இவர், நேற்று முன்தினம் மதியம் திடீரென கல்லூரியின் 2–வது மாடியில் இருந்து குதித்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள், அவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் இந்த சம்பவம் பற்றிய தகவல் இரவு தான் அம்மாபேட்டை போலீசாருக்கு தெரியவந்தது. அதன்பேரில் அம்மாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையில் சப்–இன்ஸ்பெக்டர் அங்கப்பன் மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட தனியார் கல்லூரிக்கு சென்று நேரடியாக விசாரணை நடத்தினர்.
தற்கொலை முயற்சி இதில் மாணவர் கோகுல்ராஜ் ‘ராக்கிங்’ கொடுமையால் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், விடுதியில் தங்கி படித்து வரும் கோகுல்ராஜை, 2–ம் ஆண்டு மற்றும் 3–ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் நான்கு பேர் சேர்ந்து ராக்கிங் செய்துள்ளனர். அதாவது பேண்ட், சட்டையை கழற்றி உள்ளாடையுடன் வந்து தங்கள் முன்னால் ஆடுமாறு கூறியதாக தெரிகிறது.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான கோகுல்ராஜ், கல்லூரி நிர்வாகத்திடம் புகார் செய்துள்ளார். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே விரக்தியில் இருந்த மாணவர் கோகுல்ராஜ் திடீரென கல்லூரியின் 2–வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். கீழே விழுந்ததில் அவருடைய காலில் எலும்பு முறிவும், முதுகு தண்டுவடத்தில் பலத்த காயமும் ஏற்பட்டது தெரியவந்தது.
வார்டன் உள்பட 5 பேர் கைது இந்தநிலையில், மாணவர் கோகுல்ராஜ் தற்கொலை முயற்சிக்கு காரணமாக இருந்த மாணவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்த அம்மாபேட்டை போலீசார் நேற்று காலையில் சம்பந்தப்பட்ட தனியார் கல்லூரிக்கு சென்றனர். அப்போது, ‘ராக்கிங்’கில் ஈடுபட்ட 4 மாணவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், கோகுல்ராஜை ‘ராக்கிங்’ செய்ததை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
இது தொடர்பாக தர்மபுரி மாவட்டம் திப்பம்பட்டியை சேர்ந்த பூபதி (19), பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த ஏ.பள்ளிப்பட்டியை சேர்ந்த பாலாஜி (20), விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் பகுதியை சேர்ந்த அலெக்சாண்டர் (21), அரியலூர் பெரியகிருஷ்ணாபுரம் அஜித்சரண் (20) மற்றும் சேலத்தை சேர்ந்த விடுதி வார்டன் கிருஷ்ணமூர்த்தி (40) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள், சேலம் 5–வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
சிறையில் அடைப்பு பிறகு வருகிற 29–ந் தேதி வரை கல்லூரி மாணவர்கள் 4 பேரையும் ராசிபுரம் கிளை சிறையில் அடைக்கவும், விடுதி வார்டன் கிருஷ்ணமூர்த்தியை சேலம் மத்திய சிறையில் அடைக்கவும் மாஜிஸ்திரேட்டு கணேசன் உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். பூபதி, பாலாஜி, அஜித்சரண் ஆகிய 3 பேரும் 2–ம் ஆண்டு படித்து வருகின்றனர். அலெக்சாண்டர் 3–ம் ஆண்டு படித்து வருகிறார். தனியார் கல்லூரியில் ‘ராக்கிங்’ கொடுமையால் மாணவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. dailythanthi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக