வெள்ளி, 29 ஜூலை, 2016

மனிதர்கள் மலக்குழிக்குள் இறங்குவதை ஒழிக்கப் போராடி வரும் பெஜவாடா வில்சனுக்கு ரமோன் மகசசே விருது


இந்தியாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பெஜவாடா வில்சனுக்கும் ரமோன் மகசசே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவைச் சேர்ந்த பெஜவாடா வில்சன், மனிதக் கழிவை மனிதர்களே அள்ளும் முறைக்கு எதிராக 30 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வருகிறார்.‌ இதற்காக, சஃபாய் கர்மசாரி அந்தோலன் என்ற மனித உரிமை அமைப்பை உருவாக்கியுள்ள வில்சன், தலித் மக்களின் மேம்பாட்டிற்காக போராட்டங்களை நடத்தி வருகிறார்.
கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் பிறந்தவரான பெஜவாடா வில்சனின் தந்தையும் சகோதரரும் உறவினர்கள் பலரும் துப்புரவுத் தொழிலாளர்களாக பணிபுரிந்தவர்கள். இளமைக்காலத்தில் விடுதியில் தங்கிப்படித்தபோது, பெஜவாடா வில்சனின் சாதியைக் குறிப்பிட்டு மனிதக்கழிவை அகற்றுபவர் என சக மாணவர்கள் கேலி செய்துள்ளனர்.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில், பெஸ்வாடா வில்சனிடம் கேட்காமலேயே, அவரது விருப்பமான வேலை துப்புரவுத்தொழில் என அதிகாரிகள் எழுதியதாகவும் கூறப்படுகிறது. சாதி அடிப்படையில், தான் அடிமைப்படுத்தப்படுவதைக் கண்ட வில்சன், மனிதக் கழிவை மனிதனே அள்ளும் சமூக அவலத்தை இந்தியாவிலிருந்து அகற்ற 1986ஆம் ஆண்டு முதல் போராடி வருகிறார். அவரது இந்த சமூகநலப் பணிக்காக தற்போது, ரமோன் மகசசே விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.
நன்றி: புதிய தலைமுறை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக