வெள்ளி, 22 ஜூலை, 2016

கபாலி விமர்சனம் : நாலு பேருக்கு நல்லது செய்யும் சினிமா ரவுடிக்கும் இதர சினிமா கெட்ட ரவுடிகளுக்கும்... பர்மா பஜாரில் உள்ள பழைய தெலுங்கு சிடிக்களை பார்க்க......

IMG_20160722_062559கார்ப்பரேட்டுகளுக்கு மட்டும்தான் கபாலி டிக்கெட்டுகள், சாதா ரேட்டுகளான ரசிகர்களுக்கு இல்லை! கோபத்தில் பேனரைக் கிழிக்கும் ரசிகர்கள்!
விளம்பர வருமானங்களுக்காக கபாலி காய்ச்சலை உருவாக்கும் ஊடகங்கள்! கொள்ளையில் பங்காளிகள்!
 இதுதாண்டா கபாலி கதை : மனநலம் பாதிக்கப்பட்ட மனைவி சென்னையில் இருக்கிறாள் என்ற சேதி தெரிந்ததும் அரண்மனை வீட்டு புல்வெளியில் முட்டியிட்டவாறு முதுகைக் காண்பித்து ரஜினி அழுவதை பிரமதாமான நடிப்பு என்று உலக சினிமா ஜெங்கிஸ்கான்கள் எழுதுகிறார்கள். 
கபாலி படத்தின் கதை என்ற வஸ்து கோடம்பாக்கத்து சிற்பிகளால் கொத்தி கைமா போடப்பட்ட பாலிதீன் போன்றோதொரு அயிட்டம் என்பதால் அதை எந்த பழையை பொருள் கடைக்காரரும் பத்துரூபாய்க்கு கூட வாங்க மாட்டார். ஒரு ஊருல ஒரு நல்ல ரவடியாம். ஊருக்கு நல்லது செய்யிற அந்த நல்ல ரவுடியை குடும்பம் குட்டியா வாழ விடாம கெட்ட ரவுடிங்க சேந்து பிரச்சினை பண்றாங்களாம். பிறகு நல்ல ரவுடி கெட்டவுங்களை அழிக்கிறாராம்.
இந்த பாட்டி வடை சுட்ட கதையை மலேசியாவில் எடுத்தால் என்ன, மணிப்பூரில் எடுத்தால் என்ன? கபாலியை பார்ப்பதற்காக பணம் பறிக்கப்படுபவர்கள் தமிழ் என்பால் மலேசியா, தோட்டத் தொழிலாளிகள், குடும்பம், காதல், பாசம், பிரிவு, ஏக்கம் என்று வடபழனி சிக்னலில் கிடைக்கும் இத்துப் போன சினிமா காஸ்ட்யூமால் போர்த்தியிருக்கிறார்கள்.

முதல் காட்சியில் ரஜினி சிறை வாயில் கம்பியில் தொங்கு தண்டால் எடுக்கும் போதே காமரா கவனமாக இடுப்பளவோடு நிற்கிறது. நாமும் நைந்துபோன பாலீதீன் பை ஓட்டைகளைப் பார்த்து கதை இதுதான் என்று 2.30 மணி நேர சித்திரவதைக்கு தயாராகிறோம். படம் முழுக்க ரஜினி முதுகைக் காட்டிக் கொண்டு கோட்டு போடுவது, கையை வெட்டுவது, முகத்தை திருப்புவது, சரித்து பார்ப்பது, கோட்டை விலக்கி விட்டு வெட்டி நடப்பது என்று சுமார் ஒரு எட்டரை ஆக்சன் ஐயிட்டங்களை வைத்து ஓட்டுகிறார். அதையே ஸ்லோமோஷன், ஸ்டெடி மோஷன், மியூசிக் மோஷன், வித்ஃ அவுட் சப்ஜக்ட்ஃபிரீஸ் மோஷன், காமரா வியூ மோஷன் என்று படுத்தி எடுக்கிறார்கள்.
கொஞ்சம் கூர்ந்து பார்த்தீர்களென்றால் சன் டி.வி சீரியல்களில் நான்கைந்து பாத்திரங்களுக்கான நாலைரை செகண்டு கதையை இருபது நிமிடங்களாக இழுப்பதற்கு மாமியார் பேச்சு, மருமகள் ரியாக்ஷன், இடையில் இருக்கும் மண்சட்டி குளோசப், மண்சட்டியில் தெரியும் மாமனார் ரியாக்சன், காற்றிலாடும் சன்னல் திரையாக்சன், பிறகு இசை ரியாக்சன், கடைசியாக எடிட்டர் ரியாக்சன் என்று காட்டுவார்கள் அல்லவா அதே அதே. மொத்தத்தில் செத்துட்டேன் என்றோ சாகப்போகிறேன் என்றோ மாமியார் சொன்னால் இத்தனை பேர்களும் – பொருள்களும் சேர்ந்து சாக வேண்டும்.
சூப்பர் ஸ்டாருக்கு கண்ணுபடப் போகுதய்யா சின்னக்கவுண்டர் பாணி ஓப்பனிங் சாங்கில் பாடும் கலைஞர்கள் மிதுன்சக்கரவர்த்தி கால சேட்டு மைனர் உடைகளை அதுவும் கறைபோன கதியில் உடுத்திக் கொண்டு பாடுகிறார்கள். சண்டைக் காட்சிகளில் அரை இஞ்சி கூட காலை தூக்காமல், ஒரு அடி கூட நடக்காமல், பத்து டிகிரி கூட உடலைத் திருப்பாமல் ரஜினி பின்னி எடுக்கிறார். அடிபட்டவர்களின் ரத்தமும், அந்த ரத்தத்தை வரவழைத்த இசையமைப்பாளரின் சப்தமும் மட்டுமே அதை சண்டைக் காட்சி என்று நம்மை நம்பச் சொல்கின்றன.
25 ஆண்டுகள் சிறையில் இருந்து விட்டு வெளியே வரும்போது திரும்ப ஆரம்பிக்காதீங்க என்று போலீஸ்கார் சொல்லும் போது ரஜினி சொல்லும் “மகிழ்ச்சி”-தான் தீம் பன்ஞ்சாம். அதற்கொரு தீம் மியூசிக்கும் உண்டாம். மற்ற படங்களில் நெகட்டிவ் பொருள் தரும் செஞ்சுருவேன், வெச்சுருவேன், ஒரு தபா நூறு தபா சொன்ன மாறி இல்லாமல் இது பாசிட்டீவ் பஞ்சாம். இதற்கு ரஞ்சித் படை நான்கு மாதங்களாவது டிஸ்கஷன் போட்டிருப்பார்கள்! பாவம் அந்த நொறுக்குத் தீனிகள்.
கெட்ட ரவுடிகள் மனைவியை கொன்றார்களா, விட்டார்களா என்று தெரியாமல் இருக்கும் ரஜினிக்கு முதலில் மகள் கிடைக்கிறாள். அந்த மகளும் வில்லன்களால் ரஜினியைக் கொல்வதற்கு அனுப்பப்படுகிறாள். பின்னர் கபாலிதான் தந்தை என அறிந்து அவரை காப்பாதற்காக பின் தொடர்ந்ததாக சொல்கிறாள். இப்படி எதிர்பாராத இம்சைகளாய் பல திருப்பங்கள் படத்தில். பாவம் ஹிட்ச்காக். அவளும் கேங்க்ஸ்டராக சூழலால் மாற்றப்பட்டவளாம். முதல் காட்சியில் அப்படி தன்ஷிகா உட்காரும் போது அவர் முகத்தில் நாம் எப்படி நோக்கினும் ஒரு ரவுடியைப் பார்க்க முடியவில்லை. அத போல அவரும் காலிங் பெல் கேட்டு நடுங்கும் மெல்லியளாள்தான் என்பதை கபாலியே கையும் களவுமாக பிடிக்கிறார்.

சூப்பர் ஸ்டார் படத்தில் அனைவரும் சூப்பராக நடிக்க வேண்டும் என்று  தாணுவும், ரஞ்சித்தும் கண்டிஷனோடு சொல்லி விட்டார்கள் போலும். உண்டி வள்ளல்கள் வயிறாரா சாப்பாடு போடுவது போல இவர்கள் உடலாற நடித்து தள்ளியிருக்கிறார்கள். அட்டக்கத்தி தினேஷ் இதுவரையிலும், இனிமேலும் தான் நடிக்கப்போகும் அத்தனை படங்களின் எனர்ஜியையும் இதில் கொட்டி கொட்டி நடித்திருக்கிறார். இதனால் ஹைப்பர் ஆக்டீவ் பிரச்சினை அவருக்கு வராமல் இருக்க கவுன்சிலிங் கொடுப்பது நல்லது.
மனநலம் பாதிக்கப்பட்ட மனைவி சென்னையில் இருக்கிறாள் என்ற சேதி தெரிந்ததும் அரண்மனை வீட்டு புல்வெளியில் முட்டியிட்டவாறு முதுகைக் காண்பித்து  ரஜினி அழுவதை பிரமதாமான நடிப்பு என்று உலக சினிமா ஜெங்கிஸ்கான்கள் எழுதுகிறார்கள். இதுநாள் வரை மனித குலத்தின் ஆகச்சிறந்த நடிப்பிற்கான விருது, பாராட்டு, கைதட்டல் அனைத்தையும் முகமே பெற்றிருக்கும் போது இம்முறை அதை ஒரு முதுகு பெற்றிருப்பதைப் பார்த்தால் ஆனந்தக் கண்ணீர்தான் வருகிறது. அதற்காக நாம் முதுகுக் கண்ணீர் விட முடியாது. முதுகு மன்னிக்க வேண்டும். முகம் பொறுக்க வேண்டும்.
பிறகு மலேசியாவிலிருந்து உடனே சென்னைக்கு பறக்க வேண்டும் என்று மகளுக்கு உத்தரவு போடுகிறார் கபாலி. திடீரென்று எப்படி என்கிறாள் மகள். கபாலி மகளா இருந்துட்டு இது கூட தெரியாதா என்று அக்கக்கா சிரிப்பு சிரிக்கிறார் ரஜினி. படத்தில் இந்த அக்கக்கா சிரிப்பு 10 முதல் 15 முறை வரை வருகிறது. ரஜினியே சிரிக்கிறார் என்று மற்ற நடிகர்கள் சிரிக்க திரையே சிரிக்கிறது என்று நாமும் சிரிக்க வேண்டுமாம். உலக நகைச்சுவை வரலாற்றிலேயே இப்படி பார்வையாளர்கள் சிரிப்பதற்கு முன்னுரை, அறிமுகம், வகுப்பு, செய்முறை விளக்கமெல்லாம் கொடுத்து சிரிக்க வைக்க இயக்குநர் எடுத்துக் கொண்ட பாடு படபடக்க வைக்கிறது.
அடுத்த காட்சியிலேயே விமானம் சென்னைக்கு பறக்கிறது. நாமும் முதலில் ஏதோ ஜீ பூம்பா போல சென்னைக்கு போவார் என்றுதான் நினைத்தோம். நல்லவேளை லாஜிக் மீறல் செய்ய இயக்குநர் அனுமதிக்கவில்லை. சென்னை விமான நிலையத்தில் இறங்கி, டாக்சிபிடித்து, நட்சத்திர ஓட்டலில் ரூம் போடுவதற்கு கூட கபாலியால் தனியாக முடியவில்லை, பெரும் படையே தேவைப்படுகிறது. யோசித்துப் பார்த்தால் இது பெரிய பட்ஜெட் ரஜினி படம் என்பது நினைவுக்கு வந்தது.
ரஜினியோடு ராதிகா ஆப்தேவைப் பார்க்கும் போது வயது,தோற்றம் குறித்து விமரிசிப்போர் பழையை பஞ்சாங்கம் என்று தூற்றப்பட வாய்ப்பிருப்பதால் தவிர்க்கிறோம். இருப்பினும் தமிழ் மனைவி என்ற பாத்திரத்தில் வெட்கப்படுவதற்காக அவர் பட்ட பாட்டை நினைத்தால் எந்தப்பாட்டும் கண்ணீர் விடும்.
இந்தப் படத்தில் வில்லன் யார் என்றே தெரியவில்லை அதாவது மனதில் பதியவில்லை என்பதால் ஹீரோ யார் என்ற குழப்பம் சாதாரண ரசிகனுக்கு ஏற்படும் என்றார் ஒரு நண்பர். ஒரு வேளை அந்தப் பொறுப்பை ரஜினி, ரஞ்சித், தாணு போன்றோரே எடுத்திருப்பதால் அந்த மலேசியா வில்லனைப் பார்க்கும் போது வாங்க சார் ஒரு பெக் அடிச்சுட்டு போகலாம் என்றே ஒரு ரஜினி ரசிகன் நினைக்க கூடும். இருப்பினும் இன்னொரு வில்லனான கிஷோருக்கு நம்பியார் காலத்து தேர்வடச் செயின், கைவடச் செயின் என்று போட்டிருக்கிறார்கள். நமக்கோ நல்ல காலம் பொறக்கலையோ குடுகுடுப்பைக்காரர் நினைவுக்கு வருகிறார். என்ன மாதிரியான காலத்தில் வாழ்கிறோம் நாம்?
இதற்கு மேல் கோட்டு சூட்டு, அம்பேத்கர், காந்தி போன்ற தத்துவ விளக்கங்களை பொருட்படுத்த வேண்டும் என்று கோருபவர்களுக்கு ஒரு பதில் உண்டு. ஐந்து நட்சத்திர விடுதிகள் நடத்தும் பொங்கல் கொண்டாட்டங்களை ‘வில்லேஜ்’ தீமில் நடத்துவார்கள். குடிசை வீடு, திண்ணை மேசை, வாழை இலை, வேட்டி கட்டிய பரிசாரர், சிறு தானிய விருந்து, கரும்பு – மஞ்சள் குலை அலங்காரம்………………போதுமா?
பிறகென்ன?
உலகமே அழியும் போது ஒளிப்பதிவு என்ன, இசை என்ன, நடனம் என்ன, படத்தொகுப்பு என்ன என்றெல்லாம் பார்ப்பதற்கு நாம் ஒன்றும் உலக சினிமா ஜெங்கிஸ்கான் அல்ல. ஏன் ஜெங்கிஸ்கான்? அவரது படையோடு நடக்கும் படையெடுப்பில் முதலில் ஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ என்ற பேரிரைச்சல் வரும். படை போன பிறகு அந்த ஊரில் எதுவுமிருக்காது. இந்த உவமைக்கான விளக்கத்தை கேட்டு கொடுமைப்படுத்த மாட்டீர்கள் என்று சொல்லிக் கொண்டு……………..
________________
காலையில் காசி திரையங்கின் முன் நிற்கும் போது ரசிகர்களுக்கு டிக்கெட்டு இல்லை என்றானது. உடனே சில பல ஆயிரம் செலவழித்து பிளக்ஸ், பேனர் கட்டிய ரசிகர்கள் அதைக் கிழித்தனர், கார்ப்பரேட்டு வாடிக்கையாளர்களை மூன்று நாட்களுக்கு மிரட்டி பிடித்திருப்பதால் சாதா ரேட்டு ரசிகர்களுக்கு மதிப்பில்லை. ரோகிணியில் கபாலி பார்த்துவிட்டு வந்த் ரசிகரைச் சந்தித்தோம். ஆழ்நிலை சோகத்தில் இருந்த அவரை தேற்றி சில பல வார்த்தைகள் பேச வைக்க பெரும் பிரயத்தனம் செய்ய வேண்டியதாயிற்று.
யாரும் கேட்டுவிடக் கூடாது என்று சுற்று முற்றும் பார்த்து விட்டு அவர் கூறினார், “பரவாயில்லை, ஆனா எங்கள மாதிரி ரசிகர்களுக்கு திருப்தியில்லை, பாட்சா – படையப்பா மாதிரியெல்லாம் இனி வராது சார்” என்று காற்றில் கரைந்து மறைந்து விட்டார். மாலை சென்று பார்த்தால் மூன்று நாள் தங்காது என்றார் ஒருவர். நல்ல வேளை 500 ரூபாய் டிக்கெட்டு ஐந்து வாங்கி அதே விலைக்கு விற்றுவிட்டு தப்பித்தேன் என்றார் ஒரு மளிகைக் கடை அண்ணாச்சி.
ஆனால் அமெரிக்காவில் பார்த்தவர்களும், ஏர் ஏசியாவில் பறந்தவர்களும், காக்னிசன்டாக பார்த்தவர்களும் தங்களது மாமூல் பணத்தை ஜெயா சசி கும்பலின் “ஜாஸ் சினிமா’வுக்கு எழுதிவிட்டனர். அதிகாரம், கட்சி, ஊடகங்களின் அடிமைத்தனத்தை வைத்து இந்த கும்பல் பெரும் பகற்கொள்ளையே நடத்திருக்கிறது. இதில் தாணு, ரஜினி போன்றோர் பங்காளிகளாக பிரித்துக் கொண்டிருக்கின்றனர். அதற்கு ரஞ்சித் போன்றோர் கதையெழுத மலிவு விலையில் தேவைப்பட்டனர். இருப்பினும் ஒரு பகற்கொள்ளையில் மனதை மயக்கும் ஒரு கலை இருக்க முடியாது என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.  வினவு.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக