வெள்ளி, 15 ஜூலை, 2016

பிரான்ஸ் லாரி தாக்குதலில் 84 பலி.. கொலையாளி துனிசியா இஸ்லாமிய பயங்கரவாதி முஹமத் லாஹ்னாஜ் புஹேலேல் .......

Nice attack killer: Mohamed Lahouaiej Bouhlel identified as terrorist behind Bastille Day massacre
பிரான்ஸ் நாட்டின் நீஸ் நகரில் லாரியால் மோதி நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 84 ஆக அதிகரித்துள்ளது. இந்தத் தாக்குதலின் பின்னணி தொடர்பான விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது தீவிரவாதத்தை ஒத்த தாக்குதல் என்று கூறியுள்ள பிரான்ஸ் நாட்டு அதிபர் பிரான்காயிஸ் ஹொலாந்தே, "நைஸ் நகரில் நடத்தப்பட்ட தாக்குதல் தீவிரவாதம் என்பதை மறுப்பதற்கில்லை" என்றார். பிரான்ஸ் நாட்டு உள்துறை செய்தித் தொடர்பாளர் பியர் ஹென்ரி பிராண்டெட் கூறும்போது, "நீஸ் நகரில் மக்கள் கூட்டத்துக்குள் வேகமாக டிரக்கை (கனரக லாரி) ஓட்டி மர்ம நபர் நடத்திய தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 84 ஆக அதிகரித்துள்ளது. 18 பேர் படுகாயமடைந்துள்ளனர்" என்றார். பிரான்ஸ் நாட்டில் நீஸ் நகரில் வியாழக்கிழமை இரவு பொதுநிகழ்ச்சி ஒன்றில் மக்கள் திரளாகக் கூடியிருந்த இடத்தில் மர்ம நபர் ஒருவர் லாரியை அதிவேகமாக செலுத்தியதில் 80 பேர் உடல் நசுங்கி இறந்தனர். பலர் காயமடைந்தனர்.


கொடூரத் தாக்குதலில் ஈடுபட்ட மர்ம நபரை போலீஸார் சுட்டுக் கொன்றனர். அந்த நபர் யார் என்ற அடையாளம் தெரியவந்துள்ள நிலையில், அதுகுறித்த விவரத்தை பிரான்ஸ் போலீஸ் இன்னும் வெளியிடவில்லை.
சம்பவம் குறித்து அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் கூறும்போது, "பேஸ்டைஸ் தினத்தையொட்டி வானவேடிக்கை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. அதைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். அப்போது கனரக லாரி ஒன்று தாறுமாறாக மக்கள் கூட்டத்துக்குள் புகுந்தது. மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இருப்பினும் லாரி ஓட்டுநர் வேகமாக செலுத்த எதிரே சிக்கியவர்கள் அனைவரும் பலியாகினர்" என்றார்.
8 மாதங்களில் 2-வது தாக்குதல்:
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் 8 மாதங்களுக்கு முன்னதாக ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 130 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் தற்போது நீஸ் நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் 84 பேர் கொல்லப்பட்டனர். ஆனால் தற்போதைய தாக்குதலில் ஒரே ஒரு நபர் மட்டுமே ஈடுபட்டதாகத் தெரிகிறது.
நீஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எரிக் சியோட்டி பிரான்ஸ் வானொலிக்கு அளித்தப் பேட்டியில், "அது ஒரு படுபயங்கரமான சம்பவம். 84 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். பேஸ்டைல் தினத்தை ஒட்டி நடத்தப்பட்ட வான வேடிக்கை நிகழ்ச்சியைக் காணத் திரண்டிருந்த மக்கள் கூட்டத்துக்குள் அந்த மர்ம நபர் லாரியை அதிவேகமாக செலுத்தி தாக்குதலை ஏற்படுத்தியிருக்கிறார்" என்றார்.
துனீசியா நாட்டைச் சேர்ந்தவரா?
தாக்குதலில் ஈடுபட்ட நபரை போலீஸார் சுட்டு வீழ்த்தினர். அவரை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில், நீஸ் - மேடின் செய்தித்தாளில் தாக்குதலில் ஈடுபட்ட நபர் துனீசியா நாட்டைச் சேர்ந்த 31 வயது இளைஞர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் காயமடைந்தவர்களில் 42 பேர் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அந்த செய்தித் தாளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
லாரியில் ஆயுதங்கள், வெடிகுண்டுகள்:
சம்பவ இடத்துக்கு விரைந்த தீவிரவாத தடுப்புப் படையினர் அந்த கனரக லாரியில் சோதனை மேற்கொண்டனர். அந்த வாகனத்தில் பயங்கர ஆயுதங்களும், கையெறி குண்டுகளும் இருந்ததாகத் தெரிவித்துள்ளனர். போலீஸார் அந்த மர்ம நபரை சுட்டு வீழ்த்தும் முன் அவரும் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
ஒபாமா கண்டனம்:
பிரான்ஸ் சம்பவத்துக்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். "தீவிரவாத தாக்குதல் போல் இருக்கும் இச்சம்பவத்தை ஒட்டுமொத்த அமெரிக்கர்கள் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்" எனக் கூறியுள்ளார்.
குடியரசுத் தலைவர் கண்டனம்:
பிரான்ஸ் தாக்குதலுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "அப்பாவி மக்கள் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் குறித்த செய்தியறிந்து திகைத்தேன். பிரான்ஸ் மக்களுக்கும், அரசுக்கும் இந்தியா துணை நிற்கும். தீவிரவாதத்துக்கு எதிரான போரில் பிரான்ஸ் உள்ளிட்ட பிற நாடுகளுடன் இந்தியா ஒத்துழைக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி கண்டனம்:
பிரான்ஸ் நாட்டின் நீஸ் நகரில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, "பிரான்ஸ் நாட்டின் நைஸ் நகரத் தாக்குதலால் மிகுந்த வேதனையடைந்துள்ளேன். இத்தகைய வன்முறைச் சம்பவங்களை வன்மையாக கண்டிக்கிறேன். பிரான்ஸ் மக்களின் துயரத்தை பகிர்ந்து கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, பிரான்ஸ் தாக்குதலில் இந்தியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
tami.thehindu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக